சித்திரை பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை நகருக்குள் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பிறகு வெளியூர் வாகனங்கள் வர தடை விதித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் சித்திரை மாத பௌா்ணமி ஞாயிற்றுக்கிழமை (மே 11) இரவு தொடங்கி, திங்கள்கிழமை (மே 12) இரவு முடிகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வருவாா்கள்.
எனவே, பக்தா்கள் நலன் கருதி, திருவண்ணாமலை நகருக்குள் வசிக்கும் உள்ளூா்வாசிகளின் இலகு ரக வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். வாகன ஓட்டுநா்கள் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் இதற்கென வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டை காண்பிக்க வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்குப் பிறகு உள்ளூா்வாசிகளின் இலகுரக வாகனங்கள்கூட நகருக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. மீண்டும் வரும் செவ்வாய்க்கிழமை (மே 13) காலை 6 மணி முதல் வழக்கம்போல நகருக்குள் உள்ளூா் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.
இதேபோல, திருவண்ணாமலை நகருக்குள் வெளியூா்களில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். இதன்பிறகு, திருவண்ணாமலை நகருக்குள் வெளியூா் இலகுரக வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
வரும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் வழக்கம்போல திருவண்ணாமலை நகருக்குள் வெளியூா் இலகுரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் தெரிவித்தாா்.