திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நூறு நாள் வேலை திட்டத்தின்போது மரக்கிளை முறிந்து விழுந்ததில் 2 பெண் தொழிலாளிகள் உயிரிழந்தனர்.மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கழணிப்பாக்கம் கிராமத்தில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், கால்வாயை தூர்வாரும்பணியில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
மதியம் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் அருகில் உள்ள ஆலமரத்தின் நிழலில் தொழிலாளர்கள் சற்றே ஓய்வெடுத்தனர்.
அப்போது, திடீரென ஆலமரத்தின் பெரிய கிளை மரத்தடியில் அமர்ந்திருந்தவர்கள் மீது முறிந்து விழுந்தது. இதில், மரக்கிளையின் அடியில் சிக்கி அதே கிராமத்தை சேர்ந்த அன்னபூரணி மற்றும் வேண்டா ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தகவலை அடுத்து செய்யாறு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காயமடைந்த பச்சையம்மாள், கனகா, தேவி, சம்பூர்ணம், பாஞ்சாலை ஆகிய ஐந்து பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, கிரேன் உதவியுடன் ஆலமரத்தின் கிளையை அகற்றி இடிபாடுகளில் சிக்கிய இரண்டு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.