Close
மே 21, 2025 3:31 காலை

தென்மேற்கு பருவமழை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வுக்கூட்டம்..!

ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைசார்பாக தென்மேற்கு பருவமழை 2025 எதிர்கொள்ளும் விதமாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது ;

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றுவது அவசியமாகும். ஆகவே வருவாய்த் துறை சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடிய பகுதிகள், நிவாரண முகாம்களை வருவாய் கோட்டாட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும் மேலும் ஜெனரேட்டர், ஜேசிபி, தனியார் ஆம்புலன்ஸ், மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், தற்காலிக முகாம்கள் அமைக்க தேவையான கட்டடங்களை உடன் சரிபார்த்து அவற்றின் உறுதி தன்மை மற்றும் சுகாதார வசதி, குடிநீர் வசதி, சமையல் செய்யும் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் எம்ஜிஎன்ஆர்ஈஜிஎஸ் திட்டத்தின் மூலம் நிர்நிலைகள் மற்றும் கால்வாய்களை தூர்வாரும் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும். மழைநீர் தேங்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளை அடையாளம் கண்டு அங்கு நீர் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் எடுத்து, மழைக்காலங்களில் சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பொதுப்பணித்துறை நீர்வளத்துறை சார்பில் கட்டுபாட்டில் உள்ள ஏரிகளின் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் எவ்வித தடங்களும் இன்றி ஏரிகளுக்கு செல்லும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு,

ஏரி கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை உடனடியாக சரிசெய்ய தேவையான மணல் மூட்டைகள், மரக்கட்டைகள் போன்றவற்றை தயாராக வைத்திருக்கவும், ஏரிகளின் மதகுகள் சரியாக உள்ளனவா என்பதை கண்காணிக்க வேண்டும். நெஞ்சாலைத்துறை சார்பில் பாலங்கள் மற்றும் மதகுகளை சுத்தம் செய்து தடையற்ற நீரோட்டத்திற்கு வழிவகை செய்து , தற்போது கட்டப்பட்டு வரும் பாலங்கள் மற்றும் மதகுகளை அதிக அளவு நீர் வெளியேறும் வகையில் அமைக்கவும், சாலைகளில் மரங்கள் விழுந்தால் அதனை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இந்த நடவடிக்கைகளுக்கு தேவையான பணியாளர்கள், வாகனங்கள் மற்றும் கருவிகளை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் சார்பில் அதிக அளவு திறன்கொண்ட மோட்டார் பம்புகள், ஹோஸ் பைப்புகள் தாழ்வான பகுதிகளில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், மழைநீர் வடிகால் கால்வாய்களை மழைக்காலங்களுக்கு முன்னதாகவே தூர்வாரிட வேண்டும். மழைநீர் தேங்கியுள்ள குடியிருப்பு பகுதிகளில் நீரை வெளியேற்றுவதற்கான அனைத்து சாதனங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பொது சுகாதாரத்துறை சார்பில் மருத்துவமனைகளில் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கும். வகையில் தேவையான ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், ஜெனரேட்டர்களை மழைநீர் வெள்ளம் சூழாத வகையில் உயரமான பகுதியில் வைக்கவும், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், உயிர்காக்கும் கருவிகள், மருந்துகள் மற்றும் பாம்பு கடிக்கு எதிரான மாற்று மருந்துகள் போன்றவை தேவையான அளவு கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.

மேலும் போக்குவரத்து துறை, பள்ளிக்கல்வித்துறை,  தியணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ,வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை , மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் , உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாதவாறு செயல்படவேண்டும் என என மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன், மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top