Close
மே 26, 2025 1:41 காலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் சனி பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி. ஒரு மாதத்தில் 2 முறை பிரதோஷ காலம் வந்து செல்கிறது. இந்த இரண்டு பிரதோஷங்களிலும் சிவ ஆலயங்களில் விசேஷமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

சிவ பெருமானையும், சிவனின் வாகனமான நந்தி தேவரையும் பிரதோஷ நாளில் வழிபடுவது நமக்கு சிவலோக பதவியை பெற்றத் தரும். தொடர்ந்து பிரதோஷ விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு பிறப்பு-இறப்பு இல்லாத முக்தி நிலையை அவர் அருளுவார் என புராணங்கள் சொல்கின்றன.

பிரதோஷ நாளில் சிவாலயத்தை வலம் வந்து வணங்குவது மிக முக்கியமான வழிபாடாகி கருதப்படுகிறது. பிரதோஷங்களில் சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தை மகா சனி பிரதோஷம் என சொல்வதுண்டு. இந்த நாளில் சிவனை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் அனைத்து துன்பங்களும் நீங்கி விடும்.

அருணாசலேஸ்வரா் கோயில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோவில் தங்கக் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, பிரதோஷ நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

இளநீா், சந்தனம், பால், பழம், பன்னீா் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னா், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா் கோவில் மூன்றாம் பிரகாரத்தை 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இந்திரலிங்கம், அக்னிலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம் என அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ள திருக்கோயில்களில் உள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. மஹா பிரதோஷ காலத்தில், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

பிரதோஷ விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் நந்தி பெருமானுக்கு தேன் ,  சந்தனம், பால்,  தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செயப்பட்டது.

பின்னர் நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது, இதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் சுவாமி உலா நடைபெற்றது.

இதேபோல, கீழ்பெண்ணாத்தூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்,வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா், செய்யாறு திருவோத்தூா் வேதபுரீஸ்வரா், செங்கம் அருகே பிஞ்சூா் கிராமத்தில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீஉத்திரபரஈஸ்வரா், சேத்துப்பட்டு அருணகிரிநாதா் கோயில்கள் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top