அரசு பள்ளியில் படித்தாலும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்பட நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் அதிகாரத்துடன் அமர முடியும். அதற்கு பலரை உதாரணமாக காட்டலாம். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அக்காள் தங்கையை உதாரணமாக குறிப்பிடலாம்.
திருவண்ணாமலை, வந்தவாசியைச் சேர்ந்த முருகேஷ் – வெண்ணிலா தம்பதியினர். முருகேஷ் தற்போது சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வெண்ணிலா, சென்னை ஆவண காப்பகத்தில் இணைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு மூன்று மகள்கள். மூத்தவர் மு.வெ.கவின்மொழி. அடுத்தது இரட்டையர்கள் மு.வெ.நிலாபாரதி, மு.வெ.அன்புபாரதி.
இவர்கள் மூவருமே 11, 12-ஆம் வகுப்பு வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப் பள்ளியில் படித்து, மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர்.
இளங்கலையில் வேளாண்மை பட்டப்படிப்பை முடித்த இவர்கள் யு.பி.எஸ்.சி தேர்வுக்காக சென்னையில் உள்ள தனியார் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றனர். தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்திலும் இணைந்து பயிற்சியைத் தொடர்ந்தனர்.
மு.வெ.கவின்மொழி, டி.என்.பி.எஸ்சி குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்று, குன்றத்தூர் ஆணையராகப் பணியாற்றி வந்தார்.
பின்னர் அவரும், அவரது தங்கை நிலாபாரதியும் 2024-ம் ஆண்டிற்கான யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றார்கள். நேர்காணலுக்கான முடிவுகள் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி வெளியானது.
இதில் கவின்மொழி அகில இந்திய அளவில் 546-வது ரேங்கில் தேர்வாகி, ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வாகி உள்ளார்.
இந்த நிலையில் யு.பி.எஸ்.சி. வன பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில், நிலாபாரதி, அகில இந்திய அளவில் 24-வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கிறார்.
ஒரே வீட்டில் அக்கா ஐ.பி.எஸ்.அதிகாரியாகவும், தங்கை ஐ.எப்.எஸ்.அதிகாரியாகவும் தேர்வானதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தொடர்ந்து நிலா பாரதி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இந்த தருணம் எனக்கு சந்தோஷமாக உள்ளது. இதற்கு முதல் காரணம் எனது அம்மா தான். அம்மா ஒரு நாள் வந்து எப்போவோ எடுத்திருந்த யுபிஎஸ்சி அப்ளிகேசனை காண்பித்தார். அப்போ நான் 3வது கிளாஸ் படித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது எனக்கு வீட்டு சூழ்நிலை கைகொடுக்கவில்லை. டீச்சர் வேலைக்கு போனால் தான் வீட்டில் ஒரு நல்ல நிலைமை வரும் என்பதால் போனதாக அம்மா சொன்னார். அப்போது இருந்து ஒரு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று ஒரு ஆர்வம் எனக்கு வந்தது. தொடர்ந்து அக்கா எந்த வழியில் போறாங்களோ அந்த வழியில்தான் நாங்கள் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
அக்காவின் இன்ஸ்பிரேசன் தான், இப்போது அஸ்பிரேசனாகியிருக்கிறது. இந்திய வனப்பணியை பொறுத்தவரை எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று கலெக்டர், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரியாக வேண்டும் என்பது பலரது கனவு. அதற்கு விடா முயற்சியும், சரியான பயிற்சியும், கடின உழைப்பும் அவசியம். சரியான புரிதலுடன், சிறுவயதில் இருந்தே தயாராகுவோர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற முடியும். என தெரிவித்தார்.