புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பதினருக்கு தமிழக அரசின் நிவாரண நிதியுதவிகளை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு(1.3.2022) வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கொன்னைப் பட்டி ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்த சேகர், ஆலங்குடி சரக வருவாய் ஆய்வாளர் குணசேகர் ஆகியோர் கொரோனா நோய் தடுப்பு பணியின் போது, கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர் உயிரிழந்த ஊராட்சி செயலாளர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.50 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்பட்டது.
மேலும், புதுக்கோட்டை தாலுகாவை சேர்ந்த சின்னையா மற்றும் இலுப்பூர் தாலுகாவை சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் அண்மையில் நீரில் மூழ்கி இறந்ததை தொடர்ந்து, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.2 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடப் பட்டது. அதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை முதலமைச்சர் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட காசோலை யினை மாவட்ட ஆட்சித் தலைவர் மேற்கண்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கி, ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) தமிழ்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.