Close
நவம்பர் 22, 2024 4:37 மணி

அலமாரியிலிருந்து… ஜெயகாந்தனின்…சில நேரங்களில் சில மனிதர்கள்..,

விமர்சனம்

ஜெயகாந்தனின்.. சிலநேரங்களில் சில மனிதர்கள்

 ஜெயகாந்தனின்.. சில நேரங்களில் சில மனிதர்கள்..

சற்று கவனம் பிசகி அர்த்தம் கொள்ளும் போது ஆபாச குப்பையாக மாறிவிடும் அபாயம் கொண்ட கதை இது. இதற்கு முன் ஜெயகாந்தன் தந்த அக்னி பிரவேசம் என்ற சிறுகதை படைப்பிற்குப் பிறகான விமர்சனங்களும், எதிர்ப்புகளும் வெளிவந்த பிறகு அதனை விளக்கும் நோக்கத்தில் அல்லது அதனை விவரித்து சொல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில்
எழுதப்பட்டதுதான் இந்நாவல் என சொல்லலாம்.

அது வெறும் கதை என்று பார்த்தால், சலிப்பைத் தரும். அக்கால சமுதாயத்தின் கண்ணாடி என்பதை உணரும் போது, இதில் சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது. சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்த நாவல்70 களில் எழுதப்பட்டாலும், சுமார் அரை நூற்றாண்டுக்கு பிறகும், இந்த படைப்பிற்கும் அதன் சாராம்சத்திற்கும் வாசகர்கள் மத்தியில் வலுவான ஆதரவு இருக்கத்தான் செய்கிறது.

வெறும் பெண்ணியம் பேசாமல் அதை பெண்களின் கண்ணோட்டத்திலிருந்து பேசும் ஆற்றல் படைத்தவர் ஜெயகாந்தன். மனிதர்களின் மனதை படம் பிடிப்பதில் மட்டுமல்லாது படிக்கும் வாசகர்கள் மனமும், வளம் பெறும் அளவுக்கு எழுதக்கூடியவர் அந்த இலக்கிய முரடன். வழக்கம்போல இந்த நாவலிலும் அதை செய்திருப்பார். இந்த கதை பெற்ற புகழுக்கு, அதில் அமைந்திருந்த முரண் தான் முக்கியக் காரணம். சர்ச்சைக்குள்ளானது இந்த கதையின் கரு.

ஒரு கட்டுக்கோப்பான தமிழ் பிராமண குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி கங்கா, ஒரு மழை நாளில் வழியில் வாகனத்தில் பயணம் செய்ய உதவிய ஒரு நபருடன் பாலியல் தொடர்புக்கு ஆளாகிறார். அந்த 17 வயது பெண்ணுக்கு உணர்ச்சி வசத்தால் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவம்.

அது நடந்து 12 வருடங்களுக்கு பின், அதை நிகழ்த்திய வனுடனான சந்திப்பும் அதன் தொடர்ச்சியான அவர்களின் வாழ்க்கையை பற்றியுமான கதை. மனிதர்களின் வாழ்வு என்பது சில நேரங்களில் எடுக்கும் முடிவு அல்லது நடக்கும் நிகழ்வு இரண்டின் கலவை. நல்லவன் கெட்டவன், நம்பிக்கைக்கு உரியவன், நம்பிக்கை துரோகி என்பதெல்லாம் சந்தர்ப்பங்கள் நிர்ணயிக்கின்றது என்பதை நிறுவும் படைப்பு.

1970 களிலேயே பாலியல் துன்புறுத்தல், உடன்போக்கு,
திருமணத்திற்கு முன்பு இணைந்து வாழ்தல், பெண்கள் புகைப்பது, மது அருந்துவது என பொதுவெளியில் அங்கீகரிக்கப்படாத சமூக அவலங்களை, மானுட நடத்தைகளை துணிந்து பேசியிருக்கிறார்.

கதையின் நாயகி கங்காவின் நடவடிக்கைகளை பிராய்டிஸ சிந்தனையோடு பார்க்கவேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுகிறோம். பாலியல் பிரச்சனையே அவளது வாழ்க்கை சூழலை கடுமையாக்கி அவளை ஒரு கோர முடிவுக்கு தள்ளுவதாக கருத முடிகிறது. தனி மனித ஒழுக்கம் சார்ந்த கோட்பாடுகளுக்கு சமூகமே காரணமா அல்லது தனிமனித ஒழுக்கமே சமூகத்தை உருவாக்குகிறதா என்ற முடிவுக்கு வராத வாதம் இக்கதையில் முட்டி மோதி களைத்து போகிறது. முடிவு இன்று வரை எட்டப்படவில்லை.

ஒரு பெண்ணின் ஏமாற்றம், எழுச்சி, காதல், சோகம், வலி, நம்பிக்கை, சுயமரியாதை போன்றவற்றை நெற்றிப் பொட்டில் அடித்தது போல் உறைக்கும் புதினம்! ஒரு பெண்ணை சமூகம் எவ்வாறு கொடுமையாக தனிமைப்படுத்துகிறது என்பதை இதைவிட வேறெந்த படைப்பிலும் நான் இதுவரை கண்டதில்லை.

ஒவ்வொரு மனிதர்களிடமும் ஏதோவொன்றை தேடித்தேடி ஏமாந்து போய் கடைசிவரை வெறுமையோடு ஐக்கியப்பட்டு போகும் ஒரு பெண்ணின் துயரக் கதையை நேரம் அனுமதித்தால், இதுவரை வாசிக்காதவர்கள் வாசித்துப் பாருங்கள். இதற்கு முன் வாசித்தவர்கள் இன்னுமொரு முறை வாசித்துப்பாருங்கள். தமிழ் வாசகர்கள் ஒருமுறையேனும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

விமர்சகர்: சண்.சங்கர், லண்டன், இங்கிலாந்து.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top