Close
மே 20, 2024 6:13 மணி

அலமாரியிலிருந்து புத்தகம்… எஸ். ராமகிருஷ்ணனின்.. தேசாந்திரி…

அலமாரியிலிருந்து புத்தகம்

எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரி..

எஸ். ராமகிருஷ்ணனின்.. தேசாந்திரி..

தனது பயணங்களிலிருந்து கற்றுக் கொண்டதும்பின்பற்று வதும், நினைவில் வைத்திருப்பதும் குறித்த பதிவுகளே இந்த புத்தகம்.

“சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று, காற்றின் தீராத பக்கங்களில், ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது” – கவிஞர் பிரமிளின் கவிதை வரிகள் தான் தன் விருப்பம் என்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.

பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக ஆனந்த விகடனில் தேசாந்திரியாக பகிர்ந்து கொண்டார். எஸ்.ராவின் பயணம் பற்றிய 41 கட்டுரைகளின் தொகுப்பு இது. 4 பிரிவுகளாகப் பிரிக்கலாம்: 1. சாரநாத், செயின்ட் தாமஸ் மலை, தனுஷ்கோடி, கொற்கை போன்ற பார்வையிடப்பட்ட இடங்களின் விளக்கம் மற்றும் விவரங்கள்.

2. தண்டி, ஆஷ் துரையை கொன்ற ரயில் நிலையம், கட்டபொம்மன் மறைந்திருந்த காடு, கணிதமேதை ராமனுஜம் வீடு போன்ற வரலாற்றில் முக்கியமான இடங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவங்கள்.

3. எஸ்.ரா வின் பாட்டி வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள மலைப்பகுதி, லோனாவாலாவின் மழை, பூக்கள், மேகங்கள் மற்றும் அவற்றின் வடிவம், மலைகளில் சூரியன், கடல் மற்றும் மொத்த சூழல் சார்ந்த விவரிப்பு.

4. மக்கள் மற்றும் மக்கள் பற்றிய எண்ணங்கள், திருநங்கைகளின் திருவிழா, மழை நேரங்களில் தவளைகளின் காதலாடல், மலைகளின் ஊடாக வீசும் காற்று, மலைவாழ் மக்கள் வாழ்வியல் நிலைக்குறித்த பார்வை.

ஒவ்வொரு கட்டுரையும் 4 – 5 பக்கங்களுக்கு மிகாமல் பேசுகிறது, அழகிய சிறு சிறு ஓவியங்களுடன். ஒவ்வொன்றும் நம்மை நிறைய சிந்திக்க வைத்து நம் எண்ணங்களை மீட்டெடுத்து நினைவில் நிற்க செய்கிறது.

வரலாற்று புத்தகங்களில் இலக்கியங்களில் நாம் வெறுமனே படித்துவிட்டு கடந்துபோகும் இடங்களை ஆசிரியர் நேரே சென்று பார்ப்பதும், அந்த பயண அனுபவங்களை வரலாற்று பின்னணியோடு எழுதுவதும் சிறப்பான விசயம்.

தேசாந்திரி என்ற இந்த புத்தகத்தில் எப்படி தனக்கு பயண ஆர்வம் எழுந்தது என்பது பற்றியும், இளம் வயது அனுபவங்கள் பற்றியும் பல இடங்களுக்கு சென்ற அனுபவங்கள் குறித்தும் மிகவும் நேர்த்தியாக எழுதியுள்ளார். குறிப்பாக ஒவ்வொரு பகுதி துவங்கும் போதும் ஒரு அழகான கவிதையை தந்து கட்டுரையை துவங்கி இருப்பது இன்னும் சிறப்பு.

பெரும்பாலான பயண புத்தகங்களில் ஆடம்பரமான இடங்களை, படோபடமான நிகழ்வுகளை நேர்மறைக் கண்ணோட்டம் கொண்டே விவரிக்கப்பட்டிருக்கும்.ஆனால் தனது பயணங்களின் போது வாழ்க்கையின் நுட்பமான நுணுக்கங்களை ஆராய்ந்து, பெரும்பாலான மக்கள் பார்க்காத விஷயங்களை இந்த தொகுப்பில் எஸ் ரா. வெளிப்படுத்துகிறார்.
கலாசாரம், நாகரிகம் போன்றவற்றிற்கு மிகவும் மதிப்பு கொடுத்து தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம், கணித மேதை ராமானுஜம் வீடு, கங்கைகொண்ட சோழபுரம், நாளந்தா
பல்கலைக்கழகம் என விரிகிறது பயணக் குறிப்புகள்.
அவசியம் வாசிக்கவேண்டிய பயணக்குறிப்புகள் அடங்கிய அருந்தொகுப்பு..

இங்கிலாந்திலிருந்து..சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top