Close
ஏப்ரல் 3, 2025 11:45 மணி

சிறுபத்திரிகைகளை காப்பாற்ற வேண்டும்: இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் கோரிக்கை

பத்திரிகைகள்

சிறுபத்திரிகைகள்

சிறு பத்திரிகைகளை காப்பாற்ற முன்வரவேண்டுமென தமிழக முதல்வருக்கு இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் துணைத்தலைவர்  க.அசதுல்லா வெளியிட்ட  அறிக்கை:

தமிழக அரசின் பொது நூலகத்துறையில் வாசர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் வாசிப்புக்காக கொள்முதல் செய்யப்படவுள்ள நாளிதழ், இதழ்கள் உள்ளிட்டவை குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இருந்த எந்த ஆட்சியிலும் மேற்கொள்ளப்படாத ஒரு அம்சமாக, முழுமையாக சிறு பத்திரிகைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

ஒன்றிய அரசின் பதிவு பெற்ற (ஆர்என்ஐ) நாளிதழ்கள், வார இதழ்கள் உள்ளிட்டவை, குறிப்பாக ஊடகவியலாளராக நீண்ட காலம் பணியாற்றியவர்கள், செய்தி ஆசிரியர்களாகவும், வெளியீட்டாளவராகவும் கொண்டு நடத்தப்படும் நாளிதழ்கள், வார இதழ்கள் முழுமையாக தவிர்க்கப்பட்டிருக்கின்றன.

ஊடகத்தாகத்தோடு பல்வேறு சிரமங்களை அனுபவித்தவாறே சிறு பத்திரிகைகளை நடத்தி வருபவர்களுக்கு அரசு விளம்பரங்கள் மறுக்கப்பட்டு, அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வந்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசிலாவது தங்களுக்கு நியாயம் கிடைக்கும், வாழ்வில் புதிய விடியல் கிடைக்கும் என்ற கனவோடு இருந்துவரும் சிறு பத்திரிகைகளை நடத்தி வரும் ஊடகவியலாளர்களின் வயிற்றில் அடிப்பது போல உள்ளது நூலகத்துறைக்கு கொள்முதல் செய்யப்படவுள்ள புத்தகங்கள் பற்றிய அறிவிப்பு. ஊடகத்துறையையே வாழ்க்கையாக கொண்டுள்ளவர் களுக்கு தமிழக அரசின் புதிய நடவடிக்கை பேரிடியாக அமைந்துவிட்டது.

ஆண்டுக்கு ஒன்றிரண்டு கோடி ரூபாய் மட்டுமே சிறிய பத்திரிகைகளை கொள்முதல் செய்வதன் மூலம் அரசுக்கு செலவாகப் போகிறது. அதன் மூலம், ஆயிரக்கணக்கான சிறு பத்திரிகையாளர்களின் குடும்பங்களில் நிம்மதி நிலவி வருகிறது. இப்படிபட்ட பின்னணியில் சிறு பத்திரிகைகளை கொள்முதல் செய்வதை முற்றிலுமாக புறக்கணிக்கும் அளவுக்கு எடுக்கப்பட்டுள்ள முடிவின் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

இன்றைக்கு சமூக ஊடகங்கள் பந்தயக் குதிரையைவிட அதிக பாய்ச்சலில் பாய்ந்து கொண்டிருக்கும் வேளையில் புகழ்மிக்க நாளிதழ்களுக்கு கொடுக்கப்படும் அரசு விளம்பரம் கூட, கொரோனா தொற்றுக்குப் பிறகு நாளிதழ், வார இதழ்கள் பெரும் சரிவை சந்திருக்கும் நேரத்தில், கோடிக்கணக்கான ரூபாய் அரசு விளம்பரம் விழலுக்கு இரைத்த நீர் என்பதை தமிழக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

பெரிய முதலாளிகளை வாழ வைக்கும் தமிழக அரசு, அன்றாடம் காய்ச்சிகளான சிறு பத்திரிகை வெளியீட்டாளர் களுக்கு உயிர் தண்ணீர் அளவுக்காவது கருணை காட்ட வேண்டும். சிறு பத்திரிகையாளர்களின் நியாயமான கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயுள்ளத்தோடு பரிசீலித்து உரிய நடடிவக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top