அலமாரியிலிருந்து ஒரு புத்தகம் பிரபஞ்சனின் மானுடம் வெல்லும்…
புதுச்சேரி வரலாற்றுப் பாரம்பரியத்தைத் தனது நூல்கள் வாயிலாக, பலருக்கும் விரிவாக விளக்கியவர் பிரபஞ்சன்.
நவீன கால பெண் கவிஞர்கள், கொச்சையாகவும், ஆபாசமாகவும், இலக்கியத்தரம் இன்றியும் எழுதுகிறார்கள் என்ற எதிர்ப்பு எழுந்த போது, எதைப்பற்றியும் கவலைப்படாது அதை மறுத்து, பெண் கவிஞர்களின் ஆதரவாக இயங்கியவர் பிரபஞ்சன். பொருளாதார விஷயத்தில், பிரபஞ்சன் பலவீன ராகவே திகழ்ந்தார்.
பணமிருந்தால், வரைமுறையின்றி செலவிடுவார்; பணம் இல்லாவிட்டால் மிகவும் பரிதவிப்பார் என்று அவருடன் பழகியவர்கள் சொல்வதுண்டு. ஆனாலும், எவ்விதத்திலாவது அவருக்கு, பொருளாதார உதவிகள் கிடைத்தவாறு இருந்ததால், ஒருபோதும் கொடிய வறுமையில் அவர் வாடவில்லை.
மானுடம் வெல்லும் – தமிழில் வரலாற்று புதினம் என்றால் கத்தி பாய்ந்தது, ஓடுங்கள் இளவரசி, சாளரம் வழி திரைச்சீலை மெல்ல அசைந்தது என்கிற வரிகள் எதுவும் இல்லாமல் எழுதப்பட்ட நாவல்.
கதைக்களம் – ஃப்ரெஞ்ச் புதுச்சேரி. காலம் 17–18 -ஆம் நூற்றாண்டு. தாம் வளர்ந்து வந்த மண்ணின் மீது அக்கறையும், அதன் வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்புவோரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.
வாசித்து முடித்தவுடன் நாம் பிறந்த ஊருக்கு இப்படி ஏதானும் வரலாறு இருந்திருக்காதா! அதை யாராவது எழுத மாட்டார்களா என ஏக்கம் நிறைந்த எண்ணம் எழக்கூடும்.
எஸ். ராமகிருஷ்ணன் நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக இதை குறிப்பிடுகிறார். ஜெயமோகன் இதை தமிழின் பத்து சிறந்த நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.
பிரபஞ்சன் எழுதிய வானம் வசப்படும் என்கிற நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. அந்த வானம் வசப்படும் நாவலானது, மானுடம் வெல்லும் என்கிற நாவலின் தொடர்ச்சியே. இந்த இரண்டு புதினங்கள் இரண்டிலும் அந்நாளைய ஆங்கிலேய பிரெஞ்சு அரசாங்க விஷயங்களை யும், சாதாரண மக்களின் வாழ்க்கை போராட்டங்களையும் சுவைபட எழுதியிருப்பார் பிரபஞ்சன் .
நேற்றைய மனிதர்கள் ஏதோ கிராமங்களில் எழில் சார்ந்த சூழலில் சுகமாக வாழ்ந்தார்கள் என்ற எண்ணம் பரவலாக நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. அது அப்படி இல்லை என்று மானுடம் வெல்லும் நாவல் தொடர்ந்து நிரூபித்திருக்கிறது. பிரபஞ்சனின் இந்த படைப்பும் அதற்காக போட்ட உழைப்பும் வணக்கத்திற்குரியது, போற்றுதலுக்குரியது.
இங்கிலாந்திலிருந்து சங்கர்…