தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தலைமை செயலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் (25.4.2022) ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னையிலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் கலந்தாய்வு மேற்கொண்டார்.
அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா தொற்று, உயிரிழப்பு குறைந்துள்ளது. ஒமைக்ரான் காரணமாக ஏற்பட்ட 3 ஆவது அலையின் தாக்கம் பெரிதாக இல்லை. கடந்த ஒரு வாரகாலமாக வடமாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 91.5 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 74.75 சதவீதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். பூஸ்டர் டோஸ் 41.66 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் இது அதிகம். இருப்பினும், தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதில், புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.