Close
ஏப்ரல் 7, 2025 11:08 காலை

குப்பைகளின் புகலிடமாக மாறும் புதுக்கோட்டை பல்லவன்குளம்…

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகரில் சாந்தநாதசுவாமி திருக்கோவில் அருகிலுள்ள பல்லவகுளம் வடக்குக்கரைபடித்துறை   பகுதியில் குப்பைகள் நிறைந்திருக்கும் நிலை 

புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் சாந்தநாதர் ஆலயம் மற்றும் பழைய அரண்மனை ஆகியவைகளுக்கு அருகே அமைந்துள்ள சுமார் 200 ஆண்டுகள் பழமையான பல்லவன் குளத்தை தூய்மைப்பணிகளைத் தொடர வேண்டுமென பக்தர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட ராஜாராமச்சந்திரத் தொண்டைமான் ஆட்சி காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தான திவானாக இருந்த சேஷையாசாஸ்திரி 1883-84 –ம் ஆண்டில் புதுக்கோட்டை நகரில் இருந்த அனைத்துக் குளங்களும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்தார்.

அதில் நகரின் மையப்பகுதியில் உள்ள பல்லவன்குளமும் தூர்வாரப்பட்டு அழகு படுத்தப்பட்டது. அப்போது இந்தக்குளத் துக்கு சிவகங்கை என திவான் பெயரிட்டார். எனினும், இன்று வரை பல்லவன் குளம் என்றுதான் அழைக்கப்படுகிறது.
புதுக்கோட்டை நகராட்சியிலுள்ள சுமார் 40 குளங்களில் சிவன் கோயில் அருகே அழகுற அமைந்திருப்பது இக்குளம் என்றால் மிகையில்லை. கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தீர்த்தமாடு வதும், முன்னோர்களுக்கு திதி கொடுக்க காசி, ராமேஸ்வரம் செல்ல இயலாதவர்கள் தங்கள் கடமைகளை இங்கு நிறை வேற்றுவதும் வழக்கம்.

இந்நிலையில் கடந்த ஆட்சிகாலத்தில்  நகராட்சி நிர்வாகம் இக்குளத்தை ரூ. 10 லட்சம் மதிப்பில் தூர் வாரப்பட்டது. . மழையால் குளம் நிரம்பியது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும், அதில் மிதக்கும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பலவகைக் கழிவுகளைப் பார்க்கும்போது அனைவரும் முகம் சுளிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.குறிப்பாக பல்லவகுளம் வடக்குக்கரையில் படித்துறை குப்பைகளால் நிறைந்து காணப்படுகிறது

இதனருகே உள்ள சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அருகிலுள்ள குளக்கரையின் படித்துறையில் தேங்கியுள்ள கழிவுகளால் மாற்று வழியின்றி அனைவரும் சிரமப்படும் நிலை நீடிக்கிறது.
எனவே, இந்தக்குளத்தை  தூர்வார கோடை காலம் வரை காத்திருக்க வேண்டிய சூழலில், மேல்பரப்பை சுத்தம் செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் டெங்கு உள்பட பலவகை காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களின் பிறப்பிடமாக மாறும் அபாயத்தை நகராட்சி நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top