Close
செப்டம்பர் 20, 2024 7:03 காலை

மத்திய பாஜக அரசைக்கண்டித்து ஈரோடு காங்கிரஸார் நடைபயணம்

ஈரோடு

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய பாஜக அரசைக்கண்டித்து நடத்தப்படும் பிரசார நடைபயண தொடக்க நிகழ்வில் பேசிய மாநில காங்கிஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி.

மத்தியில் உள்ள பா.ஜ. அரசைக் கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொடுமுடியிலிருந்து பிரசார நடைபயணம் தொடங்கியது.

மத்தியில் உள்ள பா.ஜ. க அரசைக் கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொடுமுடியிலிருந்து பிரசார நடைபயணத்தை அக்கட்சியின்  மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.

தொடக்க  நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் ஈ வி.கே.எஸ்.இளங்கோவன், மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மகாத்மா சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில தலைவர் கே.எஸ். அழகிரி பேசுகையில்,  மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாகட்சியின் மக்கள் விரோதப் போக்கினை கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் பேரியக்க தொண்டர்கள் இன்றிலிருந்து 10 நாட்கள் 250 கிலோ மீட்டர் பயணம் செய்து 250 கிராமங்களை சென்றடைந்து மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கினை கண்டித்து பிரச்சார பயணம் மேற்கொள்வார்கள்.

தி.மு.க.அரசு திறம்பட செயலாற்றுகிறது. முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சி நடத்துகிறார். இந்த ஆட்சி தொடரவேண்டும்.  மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தி திணிப்பைக் கைவிட வேண்டும்.இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலமொழி பயன்பாட்டில் இருக்கும் என்று காங்கிரஸ் கட்சி  எழுதப்படாத உத்தரவாதம் தந்து உறுதியாக கடைபிடித்தது.

பண்டித ஜவகர்லால் நேரு இந்திய நாடு சிதறி விடக்கூடாது என்று மொழிவாரி மாநிலங்களை உருவாக்கினார். அதனால்தான் இன்றைக்கும் இந்தியா ஒற்றுமையுடன் திகழ்கிறது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது மாநிலங்களுக்கு ரூபாய் ஒன்றுக்கு 65 பைசா நிதியாக வழங்கினார். இன்றைக்கு மோடி தலைமையிலான பாஜ அரசு ரூபாய்க்கு 35 பைசா வழங்குகிறது.

மாநில அரசுகளின் நிதியைக் குறைத்தால் அரசின் நிர்வாகம் எப்படி நடக்கும். அரசாங்கம் செயலிழந்து விடும். இதுதான் மத்திய அரசின் நோக்கம். மதத்தின் பெயரால் மக்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் பா.ஜ.க அரசின் திட்டங்களை முறியடிக்க காங்கிரஸ் பேரியக்கம் பாதயாத்திரை மூலம் மக்களிடம் பிரசாரம் செய்ய உள்ளது என்றார் கே.எஸ். அழகிரி.

திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ம.தி.மு.க. சார்பில் கணேசமூர்த்தி எம்.பி. , கொ.ம.தே.க. சார்பில் அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்டசெயலாளர் ரகுராம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி வட்டார தலைவர் முத்துக்குமார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், கொடுமுடி வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன்,கொடுமுடி நகரதலைவர் பாபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top