ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 1890 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வரும் நிலையில், 932 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 1890 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 932 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் கொல்லம்பாளையம், நல்லகவுண்டன் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறனுக்கேற்ற வீடுகள் கட்டப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி களில் உள்ள அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைப் புறம்போக்கு பகுதிகளில் வசித்து வரும் ஆக்கிரமிப்புதாரர்கள் மற்றும் வீடற்ற ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கும் வகையில் இத்திட்டம்அறிமுகப்படுத்தப்பட்டுளது.
ஒன்றிய அரசின் மானியம் ரூ.1.50 லட்சம், மாநில அரசின் மானியம் ரூ.7 லட்சம் மற்றும் பயனாளிகளின் பங்களிப்புடன் 400 சதுர அடிபரப்பளவில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு குடியிருப்பும் வரவேற்பறை, படுக்கை அறை, சமையலறை, குளியலறை, கழிவறை மற்றும் பால்கனியுடன் கட்டப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டப்பகுதிகளில் தெருவிளக்குகள், தார்சாலை, மழைநீர் வடிகால், நூலகம், கடைகள், பூங்கா மற்றும் சமுதாயக்கூடம் ஆகிய அனைத்து அடிப்படை வசதிகளும் அமைக்கப்படுகின்றது.
இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 1890 குடியிருப்புகளில் 1184 அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைவடைந்து 932 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள குடியிருப்புகள் விரைவில் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஓடைப்பகுதியில் பல ஆண்டுகளாக குடிசைகள் அமைத்து சாக்கடை கழிவு நீர் துர்நாற்றத்தில் வசித்து வந்த பொதுமக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டிக்கொடுத்திருக் கும் தமிழக அரசின் நடவடிக்கையை பயனாளிகள் பாராட்டி உள்ளனர்.