நடந்து முடிந்த 10 -ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 47 ஆயிரம் மாணவர்கள் “தமிழ் பாடத்தில் தோல்வி” என்பது அதிர்ச்சிக்குரியது. இதுகுறித்த உண்மை நிலை கண்டறியப்பட வேண்டும்; போதிய எண்ணிக்கையில் தமிழாசிரியர்களும் தேவை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை :
நடந்து முடிந்த 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 47 ஆயிரம் மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் தோல்வி அடைந்தனர் என்பது அதிர்ச்சிக்குரியது – கவலைக்குரியது – வேதனைக்குரிய தாகும். இதற்கான காரணத்தை அறியவேண்டியது மிகவும் அவசியமாகும். இதற்காக ஒரு குழு அமைத்து, உண்மைக் காரணத்தைக் கண்டறிந்து தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியமாகும்.
தமிழ்நாட்டில் தாய்மொழிக் கல்வியில் தமிழ்நாட்டு மாணவர் களின் நிலை இவ்வளவுக் கீழிறக்கமாக இருப்பதை அலட்சியப்படுத்த முடியாது. தமிழ் மக்களின் பண்பாட்டுத் தளத்தில் மிகப்பெரிய வீழ்ச் சியை இது ஏற்படுத்தும் என்பதில் அய்ய மில்லை. இதன் காரணத்தைக் கண்டறிந்து, குறை பாட்டை உடனடியாக நீக்கவேண்டியது மிகவும் அவசியமான கடமையாகும்.
தமிழாசிரியர்கள் தேவை: தேவையான போதிய அளவிற்குத் தமிழாசிரியர்களை நியமனம் செய்து, தாய்மொழியான தமிழின் மீது மாணவர்களுக்கு ஆர்வத்தையும், அக்கறையை யும் ஏற்படுத்த வேண்டியது – தமிழ் மீது பற்றுதலும் அதன் வளர்ச்சியின் மீதும் அக்கறையும் உள்ள திமுக அரசின் கடமையாகும்.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர் வீட்டுப் பிள்ளைகளின் பெயர்கள் கூட தமிழில் பெயர் சூட்டுவது அருகி வருவதையும் மிகக் கவலையோடு அணுக வேண்டியது அனைவரின் கடமையாகும். தமிழில் பெயர் சூட்டுவதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு செய்தித் துறை வாயிலாகத் திட்டம் தீட்டி தமிழ் மக்களின் மத்தியில் பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்ய லாம்; தமிழ் ஊடகங்களுக்கும் இதில் கடமை இருக்கிறது.
1937-1938 இந்தி எதிர்ப்பின் விளைச்சல்: 1937-1938 இல் தந்தை பெரியார் தலைமையில் நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக எழுந்த தமிழ் உணர்வும், பெயர் மாற்றங்களும் மீண்டும் புதுப்பிக்கப்படவேண்டிய நிலையில்தான் தமிழ்நாடு இருக்கிறது என்பதை ஆழ்ந்த வேதனையோடு சுட்டிக்காட்ட விரும்புகி றோம். இதனை மறைப்பதில் எந்தப் பயனும் இல்லை.
அரசு ஒரு பக்கம் இதனைச் செய்தாலும், திராவிட இயக்கத்தி னரும், தமிழ் அமைப்பு களும், இலக்கியம் சார்ந்த பல்வேறு அமைப்பினரும், படிப்பகங்களும் இதில் கூர்மையாகக் கவனம் செலுத்தி, ஆக்கப் பூர்வமானப் பிரச்சாரம், செயல்பாடுகளில் ஈடுபடவேண்டியது மிகவும் அவசியமாகும்.
தமிழில் பெயர் சூட்ட வேண்டும்: ஒரு கட்டத்தில் சமஸ்கிருத ஊடுருவலை வெளிப்படுத்தி மட்டுப்படுத்திய தமிழ் நாட்டில் குழந்தைகள் பெயர்கள் சமஸ் கிருதமயமாகி வருவதைத் தடுத்திட முன்வர வேண்டியது அவசியமாகும். முதலில் தங்கள் தங்கள் குடும்பத்திலிருந்து இது தொடங்கப்படுவது அவசியமாகும்.
ஆங்கிலம் பயிற்று மொழியும் – தாய் மொழியும்: ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டு படிக்கும் தமிழர் வீட்டுப் பிள்ளைகள் மொழிப் பாடமாகத் தமிழை எடுத்துக் கவனமுடன் படிக்க வேண்டும். எந்த நிலையிலும் நமது தாய்மொழி தமிழ் என்பதை மறந்துவிடக் கூடாது. இதில் அரசும், கல்விச் சாலைகளும், பெற்றோரும் முக்கிய கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். இல்லை யெனில், தொலைநோக்கில் தமிழர் பண் பாட்டுத் தளத்தில் பெரும் சீரழிவைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.
தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட வர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் தமிழ்நாடு அரசு, இதன்மீதும் கவனம் செலுத்துவது இப்பொழுது கட்டாய கடமையாகி விட்டது. நமது முதலமைச்சசர் அவர்கள் இதில் கவனம் செலுத்துவார் என்பதில் அய்யமில்லை என தனது அறிக்கையில் திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
–