சைரஸ் மிர்ஸ்திரி எழுதிய க்ரோனிகல் ஆஃப் கார்ப்ஸ் பேரர் – (Chronicle of a Corpse Bearer) நாவல் – ஒரு பார்வை
பிரோஸ் எல்சிடானா, ஒரு பார்சி பாதிரியாரின் மகன், பிணத்தை சுமக்கும் ஒருவரின் மகளான செபிதாவை காதலிக்கிறார். அவர் தனது பதினேழு வயதில் தனது தாயுடன் ஒரு இறுதிச் சடங்கில் இருந்து திரும்பும் போது அவளைப் பார்க்கிறார்.
அவன் அவளது அழகில் மயங்கி, மறுநாள் அவளை மீண்டும் காட்டில் பார்க்கிறார். நாளடைவில் அது நட்பாக மாறி, தினமும் காட்டில் சந்திக்கிறார்கள். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். அந்த பெண் காண்டியாஸ் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இயல்பாகவே அவனது தந்தையிடமிருந்து எதிர்ப்பு வந்தது. அனுமதி வழங்கத் தயங்குவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.
செபிடா, பிரோஸின் நெருங்கிய உறவினராக இருந்தது. நெருங்கிய சொந்தத்துக்குள் திருமணம் செய்து கொள்ளும் முறை இல்லையென்பதால், அவர் தனது குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் வெளியேற்றப்படுவார் என்று பிரோஸ் அறிந்திருந்தார். ஆனால் திருமணம் செய்கிற முடிவில் உறுதியாக இருந்தார். எதிர்பார்த்தபடி அவர் ஒதுக்கி வைக்கப்படுகிறார், அதன் பிறகு ஒரு பாதிரியாரின் மகனான பிரோஸ், பிணத்தை சுமக்கும் வேலை செய்ய தொடங்குகிறார்.
செபிடாவும் பிரோஸும் காதலித்து மணம் முடித்து ஏழு வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். ஃபிரோஸ் மற்றும் அவர்களின் மகள் ஃபரிதாவை விட்டுவிட்டு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு செபிதா இறந்துவிடுகிறார். பிரோஸ், செபிதாவைச் சந்தித்த காட்டிற்குச் சென்று அவளின் மீதான தனது காதலை மீண்டும் உயிர் பெறச் செய்கிறார்.
எப்பொழுதும் பிணங்களோடு இருந்தாலும் செபிதா மீதான காதல் குறையவில்லை. செபிடாவின் ஆவி தனக்கு எப்பொழுதும் உதவுவதாகவும், தன்னை பாதுகாப்பதாகவும் அவர் நம்பினார். பிரோஸ் தனது மனைவியின் உணர்வை, அவருடன் இருப்பது போல் சில நிகழ்வுகள் மூலம் உணர்கிறார்.
இறந்த உடல்களை அப்புறப்படுத்தும் காண்டியாக்கள் சமூகம், பார்சி சமூகத்தைச் சார்ந்திருந்த போதிலும், எப்போதும் மற்ற பார்சி சமூகத்தினரிடமிருந்து
அவமதிப்பை, துன்பத்தை எதிர்கொண்டார்கள். பிரோஸ் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே கஷ்டப்பட்டார். பெற்ற தந்தையே அவரை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை.
இறந்த உடல்களில் புதிய துணியை போர்த்தி சுற்றுவதற்கு முன், காளை மாடுகளின் மூத்திரத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட சடலங்களின் வாசனையைத் தாங்க இந்த மக்கள் மது அருந்த வேண்டியிருந்தது. ஒரு நாள் பிரோஸ் மயக்கமடைந்தார். குடித்து விட்டு போதையில் கிடப்பதாக ஏளனம் பேசினார்கள்.
பிரோஸ் மதுவினால் மயக்கம் அடைய வில்லை, ஆனால் வெயிலின் தாக்கம் மற்றும் பசியால் தான் மயக்கம் அடைந்ததாக அறங்காவலர்களிடம் கூறுகிறார். அதை யாரும் கேட்கத் தயாராக இல்லை. ஜோராஸ்ட்ரியன் சமூகம் பின்னர் அமைதி கோபுரத்தில் மது பயன்படுத்துவதை தடை செய்கிறது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
குடித்தால் தான் குமட்டி கொண்டுவரும் அந்த தொழிலை செய்யமுடியும் அவர்களால். பல ஆண்டுகள் இந்த தொழிலை செய்திருந்தாலும் அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்தனர். இவ்வாறான சூழலில் காண்டியாஸ் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு, சில கோரிக்கைகளை முன் வைத்து பிரோஸ் ஒரு வேலைநிறுத்தத்தை நடத்துகிறார்.
தங்களது போராட்டத்தின் அடையாளமாக இறந்த உடல்களை எடுக்க மறுக்கிறார்கள், பின்னர் மற்ற சமூகத்தினர் பிணத்தை சுமப்பவர்களின் மதிப்பை உணர்ந்து, அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுகின்றனர். காண்டியாஸ் மக்களின் வெற்றியின் நேர்மறையான குறிப்புடனும், சமூக மாற்றத்தின் தொடக்கத்துடன் கதை முடிகிறது.
இந்த படைப்பு சமூகத்தின் பாரம்பரியத்தின் மீது ஒட்டிக் கொண்டிருக்கும் விருப்பத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தனி நபர்களிடையே உருவாக்கப்பட்ட பிளவுகள் குறித்து வருந்துவது மட்டுமல்லாமல், ஆபத்தான முறையில் சுருங்கி வரும் சமூக விளிம்பில் இருப்பவர்களின் அமைதியற்ற வாழ்வியல் கதையையும் கூறுகிறது.
சிந்தனையைத் தூண்டும் இந்த கதை மற்றும் கதாபாத்திரங்கள் மூலம் அதிகம் அறியப்படாத பிணம் சுமக்கும் இந்த சமூகத்தின் அன்றாட வாழ்க்கை மற்றும் போராட்டங்களை எழுச்சியூட்டும் விதமாக எழுதி, அவர்கள் உலகத்திற்குள் நம்மை அழைத்துச் செல்லும் அற்புதமான வேலையை ஆசிரியர் செய்திருக்கிறார்.
சைரஸ் மிர்ஸ்திரி எழுதி 2012 -இல் வெளிவந்த இந்த படைப்பிற்காக 2015 -ஆம் ஆண்டுக்கான சாகித்ய விருது வழங்கப்பட்டது. இதே படைப்பை தமிழில் மொழிபெயர்த்த மாலன் அவர்களுக்கு 2021 -ஆம் ஆண்டிற்கான சாகித்ய விருதும் அளிக்கப்பட்டது.
இங்கிலாந்திலிருந்து சங்கர்🎋