Close
செப்டம்பர் 20, 2024 8:35 காலை

மருத்துவத்துறையில் காலியாக உள்ள 4,308 பணியிடங்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும்: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழ்நாடு

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவத்துறையில் காலியாக உள்ள 4,308 காலிப்பணியிடங்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்றார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கொட்டாம்பட்டி கிராமத்தில் பொது சுகாதாரத் துறையின் சார்பாக நடத்தப்பட்ட 31-வது மாபெரும் கொரோனா தடுப்பு சிறப்பு முகாமை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் .பி.மூர்த்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டார்கள்.

தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவின்படி தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறிப்பாக ,கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து தொய்வில்லாமல் நடைபெற்று வருகின்றன.

மாநில அளவில் முதல் தவணை தடுப்பூசி 94.68% நபர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி 85.47 % நபர்களும் செலுத்திக் கொண்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் 18 வயதிற்குமேல் உள்ளவர்கள் முதல் தவணை தடுப்பூசி 86.30% நபர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி 70.60% நபர்களும் செலுத்திக் கொண்டுள்ளனர்.15 வயது முதல் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணை தடுப்பூசி 86.3% நபர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி 70.6% நபர்களும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

அந்த வகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் 31-ஆவது கொரோனா தடுப்பூசி முகாம் 1 இலட்சம் இடங்களில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 3,415 இடங்களில் இம்முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மதியம் 1.30 மணி நிலவரப்படி இம்முகாம்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் 7 இலட்சத்து 57 ஆயிரத்து 543 நபர்களுக்கும், மதுரை மாவட்டத்தில் 38 ஆயிரத்து 723 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 12 வயதுமுதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணை தடுப்பூசி 87.7 % நபர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி 55.9%  நபர்களும் செலுத்திக் கொண்டுள்ளனர். 15 வயது முதல் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணை தடுப்பூசி 89.4 % நபர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி 74.4% சதவிகிதம் நபர்களும் செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும், 65,253 நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில், 2,62,910 தடுப்பூசிகள், தமிழ்நாடு மாநில அளவில் 76,89,040 தடுப்பூசிகள் என, போதிய கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்தில் உள்ள மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். டெல்லியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள் போல தமிழகத்திலும் மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, மாநகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டு வரும் இம்மருத்துவமனைகள் விரைவில் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்படும். அதேபோன்று புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 நகர்ப்புற சுகாதார நிலையங்களும் கட்டுவதற்கான பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரையில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்காலிகமாக இராமநாதபுரம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 50 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் விரைவில் வெளியிடப்பட்டு, எதிர்வரும் 4 முதல் 5 மாதங்களுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் தொடங்கப்படஉள்ளன. தமிழ்நாட்டில், தற்போது நாளொன்றுக்கு 2500 முதல் 2700 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.இருப்பினும் கடந்த நான்கு மாதங்களாக உயிரிழப்புகள் ஏதுமில்லை.

மருத்துவத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செப்டம்பர் மாத இறுதிக்குள் 1021 மருத்துவர்கள் உட்பட மொத்தம் 4308 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஸ்சேகர், பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அ.வெங்கடேசன் , மதுரை பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர் மரு.செந்தில்குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top