புத்தகத் திருவிழாவில் அரசு உயர் அலுவலர் பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்தச்செலவில் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வியப்பில் ஆழ்த்தினார்.
புதுக்கோட்டை மாவட்டமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை நடத்தி வருகிறது. புத்தகத் திருவிழாவிற்கு தினந்தோறும் பல நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள், வாசகர்கள் வருகைதந்து ஏராளமான புத்தகங்களை வாங்கிக் செல்கின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பள்ளிகள், கல்லூரிகள், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக புத்தகங்கள் வாங்குவதற்கும் ஏற்பர்டு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசு உயர் அலுவலர் ஒருவர் தனது சொந்த நிதியில் இருந்து பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை வாங்கி பரிசளித்த நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
புதுக்கோட்டை கோட்டாட்சியராக பொறுப்பு வகிப்பவர் கி.கருணாகரன். இவர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராகவும் உள்ளார். இவரது துறையின் கீழ் உள்ள கறம்பக்குடி தாலுகா, முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மற்றும் பிளாவிடுதி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.
மேற்கண்ட பள்ளி மாணவர்களை வியாழக்கிழமை வரவழைத்த கோட்டாட்சியர் கி.கருணாகரன் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்பில் புத்தகங்களை வாங்கி அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பரிசாகக் கொடுத்து அசத்தினார்.
நிகழ்வில் கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி, தலைமை ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வி, சிங்காரவேலு, புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.டி.பாலகிருஷ்ணன், எம்.வீரமுத்து, எம்.முத்துக்குமார், அறிவியல் இயக்க நிர்வாகிகள் தியாகராஜன், சிவானந்தம், வீரபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும், கோட்டாட்சியர் கருணாகரன் புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு பலவகையிலும் உதவிபுரிந்து வருகிறார். இவரின் செயல்பாடுகளை புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள், பத்திப்பகத்தார், வாசகர்கள், மாணவர்கள் ஆசிரியர்கள் மனதாரப் பாராட்டி வருகின்றன