Close
செப்டம்பர் 20, 2024 4:03 காலை

தலித் ஊராட்சித் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டுமென தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

சென்னை

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

தலித் ஊராட்சித் தலைவர்கள் சுதந்திர நாளன்று தேசியக் கொடியேற்றுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மேற்கொள் ளப் பட்ட ஊராட்சி தலைவர்கள் எதிர் கொள்ளும் சாதிய பாகுபாடுகள் குறித்த கள ஆய்வறிக்கை சென்னையில் வெளியிடப்பட்டது.

பின்னர் இதுகுறித்து மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ்  கூறியதாவது: தமிழகத்தில் தலித் ஊராட்சி களில் நடைபெறும் சாதிய பாகு பாடுகள் குறித்து 386 ஊராட்சிகளில் 22 கேள்விகளுடன் 400 பயிற்சி பெற்ற ஊழியர்களை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. தலித் ஊராட்சித் தலைவர் களை பணி செய்ய விடாமல் தடுப்ப தோடு, வார்த்தைகளால் இழிவுபடுத்துவதில் துவங்கி கொடூரமான தாக்குதல் வரை நடை பெற்றுள்ளன. கள ஆய்வறிக்கையில் இதுகுறித்த விரிவான தகவல்களை ஊர் வாரியாக தொகுக்கப்பட்டுள்ளது.

தலித் ஊராட்சித் தலைவர்களின் நிலை:

தேசியக் கொடி ஏற்ற முடியாத ஊராட்சிகள்- 20.
பெயர்ப் பலகை இல்லாதவை- 42.
நாற்காலியில் அமர முடியாதவை- 22.
அலுவலகத்தில் அமர முடியாதவை  – 33.
அலுவலக சாவி தலைவருக்கு கிடைக்காதவை- 14.
ஆவணம்/வரைபடம் ஒப்படைக்கப்படாதவை-  39.
துணைத் தலைவர் கையெழுத்துப்போட ஒத்துழைக்க மறுப்பது- 38.
தாக்குதல்/ மிரட்டல் -34.
தலைவர் தீண்டாமை எதிர்கொள்ளும் ஊராட்சி- 25.
பெண் தலைவர்களுக்கு எதிரான பாகுபாடு- 17.
ஊராட்சித் தலைவர்கள் அவமரியாதை செய்யப்படுவது- 23.
ஒன்றியக் கவுன்சிலர் பாகுபாடு இருக்கும் ஊராட்சிகள்- 33.
அரசு அலுவலர்களால் பாகுபடுத்தப்படும் ஊராட்சிகள்- 37.
கிராமசபைக்கு தலித் அல்லாதவர்கள் வர மறுக்கும் ஊராட்சிகள்-17.
துணைத் தலைவர் தனி அறை கேட்கும் ஊராட்சிகள்- 32.
ஆவணப் பராமரிப்பு செய்வதில் ஒத்துழைப்பு இல்லாமல் இருப்பது- 7.
ஊராட்சி தலைவர்கள், தலைவராக நிர்வாகம் செய்ய முடியாதவை- 11.

இதில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 -ஆம் தேதி 20 ஊராட்சிகளில் தேசியக் கொடியை தேர்ந்தெடுக்கப் பட்ட தலித் தலைவர்களால் ஏற்ற முடியவில்லை. அதேபோல் 42 ஊராட்சிகளில் தலைவர் பெயரை பெயர் பலகையில் எழுத முடிய வில்லை. பெயர் பலகை வைத்தால் தானே தலைவர் பெயரை எழுத வேண்டும் எனக் கூறி பெயர் பலகையே வைக்கவில்லை. மேலும் தலைவர் நாற்காலியில் அமரமுடியாத நிலை; அலுவலகங்களில் தனித்து அமர வேண்டிய நிலை, தலித் தலைவர் கள் உள்ள பல ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டத்தில் தலித்துகள் மட்டுமே பங்கேற்கும் நிலை.

சில இடங்களில் கொடியேற்ற அனுமதிக்கப்பட்டாலும், மற்ற பிரிவினர் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பது போன்ற பாகுபாடு களும் வெளிச்சத்திற்கு வந்துள் ளன. தலித் தொகுதிகளில் பொது வாக்காளர்கள் வாக்களிக்காமல் தலித்துகள் மட்டுமே வாக்களித்த ஊராட்சிகளும் தமிழகத்தில் உள்ளன. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 386 ஊராட்சிகளிலும் ஏதேனும் ஒரு வடிவத்தில் தீண்டாமை இருப்பதை காண முடிந்தது.

இப்படிப்பட்ட சம்பவங்கள் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் விடப்பட்டுள்ள சவால். இவையெல்லாம் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட ஊராட்சிகளின் நிலைமை மட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த நிலைமையின் பிரதி பலிப்பே. எனவே இப்படிப்பட்ட கொடுமைகளுக்கெதிராக தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு இயந்திரத்தின் அணுகுமுறை:

சில தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்த வாய் நத்தம் ஊராட்சிமன்றத்தின் தலைவர் சுதா வரதராஜி கடந்த ஆண்டு தேசியக் கொடியை ஏற்ற முடியவில்லை என்பதை மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகாராக அளித்துள்ளார்.

சின்னசேலம் வட்டாட்சியர் சட்டவிரோதமாக சமாதானக் கூட்டத்தை நடத்தி, நிர்ப்பந்தப்படுத்தி தேசியக் கொடியை அந்த பள்ளியினுடைய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரே ஏற்றிக் கொள்ளலாம், எனக்கு ஆட்சேபணை இல்லை என ஊராட்சி மன்றத் தலைவரிடம் வலுக்கட்டாயமாக எழுதி வாங்கியுள்ளார்.

எனவே அந்த வட்டாட்சியர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4 -இன்படி வழக்கு தொடுப்பதற்கான நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அரசு அதிகாரிகள் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யாமல் சாதிய பார்வை யோடு சட்டத்தை வளைப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இல்லை யெனில் சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக புகார் செய்கிற நம்பிக்கை தலித் ஊராட்சித் தலைவர்களுக்கு வராது .

பாகுபாடுகளின் பட்டியல்:

19 வகையான தீண்டாமை வடிவங்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. அதையும் தாண்டி ஏராளமான தீண்டாமை கொடுமை கள் நடைபெறுகின்றன. பல ஊராட்சிகளில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள்தான் தற்போ தைய ஊராட்சி தலைவர்களின் செயல்பாடுகளை தடுக்கிறார்கள்.

பல அதிகாரிகள் தேர்ந்தெடுக்க ப்பட்ட தலித் ஊராட்சிமன்றத் தலைவர்களை அணுகுவதற்கு மாறாக துணைத் தலைவர் களை அணுகும் நிலை உள்ளது. தலை வர்களின் முடிவுகளுக்கு துணைத் தலைவர்கள் ஒத்துழைப்பது இல்லை. கையெழுத்து போட மறுக்கிறார்கள். செயல்பட விடுவதில்லை. தமிழக அரசும் உடனடியாக 20 ஊராட்சிகளிலும் தனி அதிகாரிகளை நியமித்து ஆகஸ்ட் 15- ஆம் தேதி தேசியக் கொடியேற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் கொடியேற்றும் உரிமை மறுக்கப்படும் ஒரு கிராமம் கூட இருக்கக் கூடாது. அவர்கள் கொடியேற்ற வாய்ப்பு மறுக்கப்படும் நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகஸ்ட் 16 -ஆம் தேதி அந்த ஊராட்சி மன்றத் தலைவர்களை வைத்து கொடியேற்று வது என முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிகழ்வின்போது மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, துணைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.கே.மகேந்திரன், பொருளாளர் இ. மோகனா, துணைப் பொதுச்செயலாளர் க.சுவாமிநாதன், மாநிலக் குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, பீமன், முரளி ஆகியோர் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top