அங்கன்வாடி ஊழியர்களை முழுநேர அரசு ஊழிராக அறிவித்து குறைந்தபட்சம் ஊழியர்களுக்கு ரூ.21,000, உதவியாளர்களுக்கு ரூ.18,000 ஊதியம் வழங்க வேண்டுமென அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில மாநாடு வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் 6 -ஆவது மாநில மாநாடு புதுக்கோட்டையில் பேரணி-பொதுக்கூட்டமும், பிரதிநிதிகள் மாநாடும் 2 நாள்கள் நடைபெற்றது.
புதுக்கோட்டை லேணா திருமண மண்டபத் தில் தோழர் ஸ்டெல்லா நினைவரங்கில் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டிற்கு மாநில தலைவர் எஸ்.ரத்னமாலா தலைமை வகித்தார். மாநில செயலாளர் பி.சித்திரைச்செல்வி அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.
மாநாட்டை தொடங்கி வைத்து சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு உரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி, பொருளாளர் எஸ்.தேவமணி ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். தீர்மானங்களை மாநில நிர்வாகிகள் முன்மொழிந்தனர்.
மாநாட்டை வாழ்த்தி வரவேற்புக் குழுத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, சிஐடியு மாநில செயலாளர் கே.சி.கோபிகுமார், அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் எம்.அன்பரசு, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் மாலதி, சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் மலர்விழி ஆகியோர் பேசினர்.
இதில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில மாநாட்டில் தலைவராக எஸ்.ரத்னமாலா, பொதுச்செயலாளராக டி.டெய்சி, பொருளாளராக எஸ்.தேவமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில் கலந்துகொண்டு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சௌந்தரராஜன் சிறப்புரையாற்றினார். மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.ஆர்.சிந்து உரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் எஸ்.பத்மா நன்றி கூறினார். மாநாட்டில் 600-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்: அங்கன்வாடி ஊழியர்களை முழுநேர அரசு ஊழிராக அறிவித்து குறைந்தபட்சம் ஊழியர்களுக்கு ரூ.21,000, உதவியாளர்களுக்கு ரூ.18,000 ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ஊழியர்களுக்கு ரூ.10,000, உதவியாளர்களுக்கு ரூ.8,000 வழங்க வேண்டும்.
25 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்துவரும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அரசு விதிகளின்படி 10 வருடத்திற்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும். 26 வருடம் பணிமுடித்த ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர்களுக்கு வழங்கும் ஊதியம் வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 15 % அங்கன்வாடி மையங்களில் பணியாளர், உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. ஒரு பணியாளர் இரண்டு மையங்களில் பணிசெய்வது இரண்டு மையங்களையும் பாதிக்கும். எனவே, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
விலைவாசி கடுமையான உயர்ந்துவரும் நிலையில் ஒரு குழந்தையின் உணவூட்டு செலவீனம் 5 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கவில்லை. எனவே, மத்திய அரசு வழங்கும் ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.
5 வருடம் பணிமுடித்த தகுதியுள்ள உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை திட்டப்பணிகள் தவிர மற்ற பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது. அங்கன்வாடி ஊழியர்களை எல்கேஜி, யுகேஜி வருப்புகளுக்கு ஆசிரியர்களாக நியமித்து இடைநிலை ஆசிரியருக்கான ஊதியத்தை வழங்க வேண்டும்.