பருவ மழை பொய்த்து போன நிலையில், அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை தாமதமின்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதி களுடன் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில் விவசாயிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் சார்பில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தற்போது பருவமழை பொய்த்து விட்ட காரணத்தால் குடிநீர் பிரச்னை லேசாக தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை செயல்படுத்துவதன் மூலமாக குடிநீர் பிரச்னை தீர்க்கப்படுவதோடு விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் இது வரப்பிரசாதமாக அமையும்.
பல ஆண்டுகால மக்கள் கோரிக்கைக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதில் தாமதம் நீடித்து வருகிறது. அத்திக்கடவு -அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் குறிப்பிட்ட கால வரையறையில் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேணடும் என பெருந்துறை தொகுதி மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இத்திட்டத்தின்படி வறட்சி பாதித்த பகுதிகளில் குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டப்படுவதால் அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளாட்சிகளில் குடிநீர் பிரச்னை நிரந்தரமாக தீர்க்கப்படும். மானாவாரி விவசாயம் செய்யும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து அரசை பாராட்டுவார்கள்.
இந்த திட்டத்தின் ஒப்பந்த காலம் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. ஆனால் பெருந்துறை பகுதியில் சிப்காட் தொழிற் சாலை இருக்கிற காரணத்தால் நிலத்தடி நீர் முற்றிலும் மாசுபட்டு விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கு கூட பயன்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிற காரணத்தால் கால்நடைகளை நம்பி பிழைத்து வந்த மக்கள் கால்நடைகளை விற்று விட்டு வேறு தொழில் தேடி அலைகிறார்கள்.
நீர் நிலம் காற்று, நீர் என முழுமையாக மாசுபட்ட காரணத்தால் கேன்சர் நோய் பெருந்துறை சிப்காட் சுற்றியுள்ள பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை செயல்படுத்துவதன் மூலமாக ஏற்கெனவே மாசுபட்டிருக்கிற மண்ணும் நீரும் படிப்படியாக அந்தத் தீமையிலிருந்து மாறுபட்டு எதிர்காலத்தில் இன்னும் மோசமான நிலைக்கு செல்லாமல் இருக்க இந்த திட்டம் செயல்படுத்துவதன் மூலம் உறுதியாக தடுக்கப்படும்.
எனவே இந்த திட்டம் எந்த இடத்தில் பிரச்னை இருக்கிறது என்பதை உடனடியாக அறிந்து அதை சரிப்படுத்தி உடனடியாக இந்த திட்டத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.