புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. இதில் ஐந்து வயது முதல் 85 வயது வரை ஆண்கள் பெண்கள் என 246 பேர் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் எழுபதாவது மாநில அளவிலான ஓபன் சதுரங்க போட்டி ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. இதில் முதல் நாள் போட்டியானது புதுக்கோட்டை மூவார் முருகன் திருமண மண்டபத்தில் (14.9.22) மாலை தொடங்கியது.
புதுக்கோட்டையில் சதுரங்க போட்டியை இந்திய மருத்துவ சங்க புதுக்கோட்டை கிளையின் நிதி செயலாளர் டாக்டர் எம். கோபாலகிருஷ்ணன், வைரம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளியின் தாளாளர் அஷ்வினி ஆகியோர் தொடங்கி வைத்து வீரர்களை வாழ்த்தினர்.
சதுரங்கப் போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சென்னை, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் என தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐந்து வயது முதல் 85 வயது வரை உள்ள ஆண் மற்றும் பெண்கள் என 246 வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்பட உள்ளன அதேபோன்று முதல் நான்கு இடங்களை பிடிக்கும் வீர வீராங்கனைகளுக்கு தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் சதுரங்க கழக செயலர் கணேசன், அடைக்கலவன், ஜெயக்குமார்,மூவார் முருகன் திருமண மண்டபத்தின் பொருளாளர் காசி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.