Close
நவம்பர் 22, 2024 10:22 காலை

உழவன் செயலி மூலம் விவசாயிகள் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு பெறலாம்

புதுக்கோட்டை

உழவன் செயலி மூலம் வேளாண் கருவிகளை வாடகைக்கு பெறலாம்

விவசாயிகள் உழவன் செயலி மூலம் அறுவடை இயந்திரங்களை பெற்று பயன் பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு  தகவல் தெரிவித்துள்ளார்.

வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து முடிக்க அதிக நேரமும் அதிக அளவில் வேலை ஆட்களும் தேவைப் படுகிறது. கால விரயத்தை தவிர்க்கவும், வேலையாட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் இன்றியமையாததாகிறது.

அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் குறைந்த வாடகைக்கு வழங்கப் படுவதுடன், அரசுத் திட்டங்கள் மூலம் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

அறுவடை காலங்களில் நெல் அறுவடை இயந்திரங்களின் தேவை அதிகரிக்கும் போது வாடகைத் தொகை உயர்ந்து விடுகிறது. இதனால் வேளாண் வருமானம் குறைவதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். வேளாண்மை பொறியியல் துறைக்கு சொந்தமான நெல் அறுவடை இயந்திரங்களின் மூலம் விவசாயிகளின் தேவையை ஓரளவே தீர்க்க முடியும். மேலும் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் விவரங்கள் விவசாயிகளுக்கு தெரிவதில்லை.

இதனால் விவசாயிகள் குறித்த காலத்தில் நெல் அறுவடை செய்ய தீர்வாக தனியாருக்கு சொந்தமான நெல், மக்காச் சோளம், பயறு தானிய வகைகள் அறுவடை செய்யும் இயந்திரங்களின் உரிமையாளர் பெயர், விலாசம், செல் போன் எண் போன்ற விவரங்கள் வட்டாரம் மற்றும் மாவட்ட வாரியாக உழவன் செயலியில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான 165 சக்கரவகை அறுவடை இயந்திரங்களும் 4 டிராக் வகை அறுவடை இயந்திரங்களும் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அறுவடை எந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலியின் மூலம் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள அறுவடை இயந்திர உரிமையாளர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தாங்களே வாடகை நிர்ணயம் செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர்  கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top