Close
நவம்பர் 21, 2024 1:06 மணி

சிறுதானியங்களை மதிப்புக்கூட்டுவதற்கு கடனுதவி வழங்க வேண்டும் 

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி சந்தைப் படுத்துவதற்கு அரசு கடனுதவிகளை வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுசாமி பேசியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் எள், கடலை, மக்காச்சோளம், சாமை, கம்பு உள்ளிட்ட சிறுதாணியங்கள் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், சிறுதாணியங்களுக்கு கட்டுபடியான விலை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.

எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு சிறுதாணியங்களை மதிப்புக்கூட்டுவதற்கான பயிற்சி அளிக்க வேண்டும். பயிற்சி பெற்றவர்களை குழுக்களாக அமைத்து, கடனுதவி வழங்கி மதிப்புக்கூட்டும் தொழில் களைத் தொடங்குவதற்கு உதவ வேண்டும். மேலும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் அரசு உதவ வேண்டும் என்றார்.

மேலும், கறம்பக்குடி தாலுகா மணமடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நிலவும் உரத்தட்டுப் பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்புக்கோவிலில் மூடப்பட்ட நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும்.

மாவட்ட முழுவதும் உள்ள நீர்நிலைகளின் வரத்துவாரிகளை தூர்வாரி மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் வாய்க்கால் ஓரங்களில் மரக்கன்றுகளை நடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினார்.

கோரிக்கைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் பதில் அளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top