Close
நவம்பர் 22, 2024 12:42 காலை

தஞ்சாவூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் நடைபெற்ற விவசாயிகள் குறை கேட்பு கூட்டம்

தஞ்சாவூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – (28.11.2023) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து பேசியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த குறுவை பருவத்தில் 78,486 எக்டர் பரப்பில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு அறுவடை முழுமையாக நிறைவடைந்துள்ளது. குறுவைப் பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக 1,38,561 மெ.டன் நெல் கொள்முதல் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

போதிய நீர் வரத்து இல்லாத காரணத்தால் 33 சதவீதத்திற்கு மேல் பாதிப்படைந்த 55.71 எக்டர் குறுவை பரப்பிற்கு நிவாரணம் வழங்கிடும் பொருட்டு அறிக்கை பேரிடர் மேலாண்மை பிரிவிற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

நடப்பு சம்பா-தாளடி பருவத்தில் தற்போது வரை 1,03,860 எக்டர் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் 1,482 மெ.டன்கள் நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆடுதுறை-54,  கோ-50 போன்ற மத்திய கால ரக விதைகளும் டி.பி.எஸ்-5, கோ-51 ஆகிய குறுகிய கால நெல் விதைகளும் 161 மெ.டன்கள் அளவு இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

தற்போது கார்த்திகை பட்டத்தில் விதைப்பு மேற்கொள்ள கதிரி 1812, புது 32 ஆகிய நிலக்கடலை ரக விதைகள் திருவோணம். பூதலூர், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபாவசத்திரம் ஆகிய வட்டாரங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் 20 மெ. டன் நிலக்கடலை விதைகள் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து பெற்றுக்கொள்ள ஆணை பெறப்பட்டுள்ளது.

நடப்பு பருவத்திற்கு 8,265 மெ.டன் யூரியா, 1,651 மெ.டன் டி.ஏ.பி, 1,641 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 2,808 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

நடப்பு சம்பா-தாளடி பருவத்தில் பயிர் காப்பீடு செய்து கொள்ள 22.11.2023 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு 2,38,170 ஏக்கர் பரப்பில் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பயிர் காப்பீடு செய்தவர்களில் நடவு செய்ய உள்ளோர்இ விதைப்பு செய்ய உள்ளோர் போன்று அடங்கல் சான்றுகள் பெற்று பதிந்தவர்கள் நடவு,விதைப்பு செய்தபின் திருந்திய அடங்கல் பெற்று பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.

மேலும் விதைப்பு செய்ய இயலாமை, விதைப்பு பொய்த்துப் போதல் போன்ற காரணங்களினால் 75 % சாகுபடி பரப்பு குறைந்துள்ள கிராமங்கள் தஞ்சாவூர், பூதலூர், திருவையாறு ஆகிய வட்டாரங்களில் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றிக்கு உரிய பிரேரணைகள் மாவட்ட அளவிளான கண்காணிப்புக் குழு மூலம் அரசுக்கு சமர்பிக்கபடும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கிசான் கடன் அட்டை விண்ணப்பங் கள் பெறுவதற்கு ”இல்லம் தேடி கிசான் கடன் அட்டை” முனைப்பு இயக்கம் கடந்த 01.10.2023 முதல் கிராமங்கள் தோறும் நடத்தப்பட்டு, விண்ணப்பங்கள் சேகரம் செய்யப்பட்டு வருகின்றன.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இவ்வாண்டு 118 கிராம ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது.

பாரம்பரிய வேளாண் வளர்ச்சி (பரம்பராகட் கிரிஷி விகாஸ் யோஜனா) திட்டத்தில் அங்கக வேளாண்மை முறையில் 400 எக்டரில் தொகுப்பு முறையில் சாகுபடி செய்வதற்கு அனைத்து வட்டார விவசாயிகளுக்கும் வட்டார அளவில் பயிற்சி அளிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

மேலும், 2023-24- ம் ஆண்டில் அனைத்து திட்டப் பயன்களும் பெற வேளாண்மை துறை மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள உழவன் செயலியை அனைத்து விவசாயிகளும் தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து வேளாண் துறை சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் அறிந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நமது தஞ்சை மாவட்டத்தில் பருவமழை விட்டு விட்டு பெய்து வருவதால் சம்பா – தாளடி நெற்பயிரில் ஆங்காங்கே இலை சுருட்டு புழுவின் தாக்குதல் தென்படுகிறது. இதனை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 2 இடங்களில் விளக்கு பொறிக ளை அமைத்து தாய் அந்து பூச்சிகளை கவர்ந்திழுத்து அழிக்கலாம்.

மேலும் 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசலை பயிர் நடவு செய்த 45 வது நாளில் தெளிக்கலாம். தேவைக்கு அதிகமாக தலைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும். தூர் கட்டும் தருணத்தில் 10 சதவீதம் இலைகளில் தாக்குதல் அல்லது பூக்கும் தருணத்தில் 5 சதவீதம் இலைகளில் தாக்குதல் இருந்தால் ஏக்கருக்கு 400 மில்லி அசாடிராக்டின் அல்லது 60 மில்லி குளோரன்ட்ரனி லிப்ரோல் 18.5 சதவீதம் அல்லது 400 கிராம் கார்டார்ப் ஹைட்ரோகுளோரைடு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பான்கள் மூலம் தெளிக்கலாம்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் வேளாண்மை துறை மூலம் அனைத்து வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் வடகிழக்கு பருவமழை 2023 கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏதேனும் பாதிப்புகள் இருப்பின் விவசாயிகள் இவ்லுவலகத்தினை தொடர்பு கொண்டு பயன்பெருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.

திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் படி வழங்க வேண்டிய நிலுவைத் தொகை தற்போது 75 சதவீதமாக உயர்த்தப்பட்டு கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தோட்டக்கலை மற்றம் மலைப்பயிர்கள் துறை:
தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2023-24 நிதியாண்டில் செயல் படுத்தப்பட்ட முக்கிய திட்டங்கள் தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம்,

மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்,  பனை மேம்பாட்டு இயக்கம், தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் – எண்ணெய் பனை,

தமிழ்நாடு பாசன நவீன மயமாகக்கல் திட்டம் மற்றும் தேசிய மூங்கில் இயக்கம் .தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2023-2024ம் நிதியாண் டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உழவர் சந்தை:
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை கும்பகோணம் திருக்காட்டுப்பள்ளி மற்றும் பாபநாசம் ஆகிய 5 இடங்களில் உழவர் சந்தைகள் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றன. இதுவரை இந்த 5 உழவர் சந்தைகளிலும் ரூ. 51 கோடியே 37 லட்சம் மதிப்பில் 13,581 மெ.டன் காய்கறி வரத்து வந்துள்ளது. இதுவரை சராசரியாக 184 விவசாயிகளும் 8257 நுகர்வோரும் பயனடைந்துள்ளார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய வேளாண் வளரச்சி திட்டம் நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் கூட்டுப் பண்ணையத் திட்டம் மற்றும் தமிழ்நாடு நீர்பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டங்களின் மூலம் 15 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் 359.16 இலட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டு தற்போது சிறப்பாக செயல்படுத் தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 13,463 விவசாயிகள் பயனடைந்துள்ளார்கள்.
கூட்டுறவுத்துறை:
2023-24 –ஆம் ஆண்டுக்கு 740 கோடி நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டில்,  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் 01.04.2023 முதல் 24.11.2023 வரை 334.88 கோடி வழங்கப்பட்டுள்ளது எனவும், தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடப்பு சாகுபடி பருவத்திற்கு 6110 டன் உரங்கள் தற்பொழுது இருப்பில் உள்ளது எனவும் தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர்  தெரிவித்தார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்:
கே.எம்.எஸ் 2023-2024-ல் 01.09.2023 முதல் நெல் வரத்துக்கு ஏற்றவாறு விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் பரவலாக தேவையின் அடிப்படையில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

நடப்பு கே.எம்.எஸ் பருவத்தில் 238 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 24.11.2023 வரை 1,38,502 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுவரை விவசாயிகள் 31,028 (பயனாளிகள்) நேரடி நெல்கொள்முதல் நிலையம் மூலம் பயனடைந்துள்ளனர்.

விற்பனை செய்யப்படும் நெல்லிற்கு உண்டான தொகை விவசாயிகளுக்கு ரூ.316 -கோடி மின்னனு வங்கிப்பண பரிவர்த்தனை மூலமாக வழங்கப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை, குருங்குளம் ஆலையின் 2023-24 -ஆம் ஆண்டின் கரும்பு அரவைப் பருவம் 04.12.2023 தேதியில் தொடங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

2022-23 அரவை பருவத்தில் அரவை செய்யப்பட்ட கரும்புக்கு டன் ஒன்றுக்கு மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்டு நியாயம் மற்றும் ஆதாய விலை ரூ.2821.25  வீதம் கரும்பு கிரயமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2022-23 அரவைப் பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு ஊக்கத் தொகை அரசு ஆணைப்படி டன் ஒன்றுக்கு ரூ.195. வீதம் 1863 எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு 2,02,296  டன்னிற்கு ரூ.3,94,47,752. விவசாயிகளுக்கு வழங்கிட அறிக்கை தயார் செய்யப்பட்டு தலைமை அலுவலகம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்த்தி மற்றும் பகிர்மான கழகம் பழுதான மின்மாற்றிகள் உடனுக்குடன் பழுது நீக்கம் செய்து சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு அக்டோபர் மாதம் 39 புதிய மின்மாற்றிகள் ரூ. 1 கோடியே 36 இலட்சம் செலவில் மேம்பாடு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு  இயக்கத்திற்கு கொண்டுவரப்பட்டு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

2023-24 ஆம் ஆண்டு இலக்கீட்டின் படி தாட்கோ திட்டத்தில் 27 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 2023-24 ஆம் ஆண்டு இலக்கீட்டின் படி 350 சிறப்பு முன்னுரிமை திட்டத்தில் 31 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர் தீபக் ஜோக்கப்.

இதில் பங்கேற்ற பெரும்பாலான விவசாயிகளில், வீரசேனன், முகமது இப்ராஹிம், பி.கோவிந்தராஜ், வெ. ஜீவகுமார், எம். மணி, வி.எஸ். வீரப்பன், சுந்தர.விமலநாதன் உள்ளிட்டோர் சம்பா சாகுபடியைக் காப்பாற்ற  24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top