Close
நவம்பர் 10, 2024 5:39 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்துக்கு 3939 பயனாளிகளுக்கு 4235 எக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது: ஆட்சியர் கவிதாராமு தகவல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற விவசாயிகள் குறைததீர் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்துக்கு 2000 எக்டேர் இலக்கீட்டில் 3939 பயனாளிகளுக்கு 4235 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தலைமையில் (30.03.2022) நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளிடையே பேசியதாவது:

 தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சப் செயல்படுத்தி வருகிறார்.  இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழையளவை பொருத்தவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 754.66 மி.மீ. ஆகும். 2022 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பெறப்பட வேண்டிய இயல்பான மழையளவான 45 மி.மீ. க்கு பதிலாக 86.56 மி.மீ. அளவு மழை பெறப்பட்டுள்ளது. 41.56 மி.மீ கூடுதலாக பதிவாகியுள்ளது.
பயிர்ச் சாகுபடியை பொருத்தவரை 2021-22 -ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் முடிய நெல் 1,02,968 எக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 1,779 எக்டர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 4,410 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 12,463 எக்டர் பரப்பிலும், கரும்பு 1,776 எக்டர் பரப்பளவிலும், பருத்தி 111 எக்டர் பரப்பளவிலும், தென்னை 11,918 எக்டேர் பரப்பளவிலும் எண்ணெய் பனை 36 எக்டர் பரப்பளவிலும் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

பயிர்ச் சேதத்தை பொருத்தவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட 1296.76 எக்டர் நெல், உளுந்து, மக்காச்சோளம் மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கு 3002 விவசாயிகளுக்கு ரூ.82,78,570 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
டிசம்பர் 30 முதல் ஜனவரி 02 வரை பெய்த கனமழையால் பாதிப்படைந்த 1339.705 எக்டர் நெல், உளுந்து மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கும், பிப்ரவரி மாதத்தில் பெய்த கனமழையால் பாதிப்படைந்த 492 எக்டர் நெல் பயிர்களுக்கும், நிவாரணத் தொகை வேண்டி சென்னை வேளாண் இயக்குநர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 8600 நபர்கள் ஆவார்கள்.

இடுபொருட்கள் இருப்பை பொருத்தவரை புதுகோட்டை மாவட்டத்தில் உள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 89.339 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 12.156 மெ.டன் பயறு விதைகளும், 9.672 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 2.063 மெ.டன் சிறுதானிய விதைகளும், 4.552 மெ.டன் எள் விதைகளும் இருப்பில் உள்ளன.

உர இருப்பை பொருத்தவரை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு டிசம்பர் மாதத்திற்குத் தேவையான யூரியா விநியோகத்திட்ட இலக்கின்படி 3,650 மெ.டன்களுக்கு, இதுவரை 1,062 மெ.டன் யூரியா பெறப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு தேவையான டி.ஏ.பி உரம் விநியோகத் திட்ட இலக்கின்படி 350 மெ.டன்களுக்கு 116 மெ.டன் வரப்பெற்றுள்ளது.

பொட்டாஷ் உரத்தைப் பொறுத்துவரை விநியோகத் திட்ட இலக்கான 950 மெ.டன்களுக்கு இதுவரை 140 மெ.டன் பெறப்பட்டுள்ளது. காம்ப்ளக்ஸ் உரங்களைப் பொறுத்தவரை விநியோகத்திட்ட இலக்கான 2,050 மெ.டன்களுக்கு இதுவரை 1,186 மெ.டன் பெறப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது யூரியா 1,320 மெ.டன்னும், டிஏபி 157 மெ.டன்னும், பொட்டாஷ் 554 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 2,844 மெ.டன்னும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கத்தில் 273 மெ.டன் யூரியா, 13 மெ.டன் டிஏபி, 158 மெ.டன் பொட்டாஷ், 670 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2021-22 ஆம் ஆண்டில் 85 பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு 68 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தரிசு நில தொகுப்புக்களை சாகுபடிக்கு கொண்டு வருவதால் 1374 விவசாயிகள் பயன்பெறுகிறார்கள்.

இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பஞ்சாயத்துகளில் உள்ள 17,000 விவசாயிகளுக்கு 51 ஆயிரம் தென்னங்கன்று களும், 425 விவசாயிகளுக்கு கைத்தெளிப்பானும், 425 விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பானும், 1275 எக்டருக்கு வரப்பில் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்ய 1275 விவசாயிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக 1365 ஏக்கருக்கு ஜிங்க் சல்பேட்டும், 1365 ஏக்கருக்கு ஜிப்சமும் 8 இலட்சத்து 19 ஆயிரத்துக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.  இதன் மூலம்  2,730 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.

பண்ணை கருவிகளான கடற்பாரை, மண்வெட்டி, கதிர் அறுக்கும் அரிவாள் – 2 எண்கள், மண் சட்டி மற்றும் களை கொட்டு அடங்கிய தொகுப்பு 1188 எண்கள் ரூ.32.06 இலட்சம் மானியத்தில் வழங்கப்பட்டது. இதில் 1188 விவசாயிகள் பயன் அடைந்தனர்.

பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத்திட்டத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி கூடுதல் பரப்பில் சாகுபடி செய்திடும் பொருட்டு வேளாண் பயிர்களுக்குத் தெளிப்பு நீர்ப் பாசனம் மற்றும் மழைத்தூவான் பாசனக் கருவிகளும் சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன.
நடப்பு ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2000 எக்டர் இலக்கீடு வழங்கப்பட்டு, இதுவரை 3939 பயனாளிகளுக்கு 4235 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது.  இதுவரை 8.44 கோடி நிதி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

தமிழக அரசின்  வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர்

இக்கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மா.உமாமகேஸ் வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top