காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டப் பணிக்காக புதுக்கோட்டை பெரியார்நகரில் (யூனிட்-4) அமைக்கப்பட்ட கூடுதல் அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு (14.04.2022) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் காவேரி – வைகை – குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு மொத்தப் பரப்பு சுமார் 572 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த அரசால் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 1 தனி மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் 3 தனி வட்டாட்சியர் அலகுகள் ஏற்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை அரசின் உத்தரவுப்படி, துரிதமான முறையில் முடித்திட ஏதுவாக காவேரி – வைகை – குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்காக கூடுதலாக தொடங்கப்பட்ட ஒரு வட்டாட்சியர் அலகு திறந்து வைக்கப்பட்டது.
இப்புதிய அலகின் மூலம் புதுக்கோட்டை மற்றும் குளத்தூர் தாலுகாக்களில் 5 கிராமங்களில் சுமார் 196 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இம்மாவட்டத்தில் காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தில் நாளது தேதி வரை சுமார் 16 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, தனி வட்டாட்சியர்கள் விஜயலெட்சுமி, பாலகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.