Close
மே 15, 2024 4:56 காலை

சுகாதார சீர்கேட்டில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம்: ஏஐடியுசி புகார்

தஞ்சாவூர்

போக்குவரத்துக்கழக ஏஐடியுசி தொழில்சங்கம்

சுகாதார சீர்கேட்டில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம்! மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து. ஏஐடியூசி வலியுறுத்தல்.

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் சம்மேளன துணைத்தலைவர் துரை.மதிவாணன், பொதுச்செயலாளர் டி.கஸ்தூரி ஆகியோர்  வெளியிட்ட கூட்டறிக்கை:

தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகத்தில் நகரத்தின் அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி , பிரதான சாலைகளான மேலவீதி, தெற்கு வீதி, வடக்குவீதி, கீழராஜவீதி, மற்றும் காந்திஜி ரோடு உள்ளிட்ட சாலைகள் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

நீண்ட நெடுங்காலமாக ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை அதிரடியாக அகற்றி மாநகர பயன்பாட்டிற்கு தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் க.சரவணகுமார் எடுத்துள்ள முன் முயற்சிகள்  பாராட்டுக்குரியது. இந்த நிலையில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் நீண்ட காலமாகவே பல்வேறு சுகாதார சீர்கேடுகளின் மையமாக தொடர்ந்து இருந்து வருகிறது.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திற்கு தினமும் கிராமங்கள், பல்வேறு நகரங்களில் இருந்து ஆயிரக்கணக் கான பயணிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் பிரதான இடமாக இருந்து வருகிறது . மதுரை தடம், கும்பகோணம் பட்டுக்கோட்டை உள்ளிட்ட தடப் பகுதிகளில் புதிய பேருந்து நிலையத்தின் உள்ளே இயங்கும் தேநீர் கடைகள், உணவகங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் புதிய பேருந்து நிலையத்தின் மத்திய பகுதிகளில் தேங்கி நிற்கிறது.

திருச்சி மார்க்கம், மதுரை மார்க்கத்தின் இருபுறமும் பயணி களால் சிறுநீர் கழிக்கப் படுவதால் அப்பகுதி குளம்போல் தேங்கி நிற்கிறது. அப்பகுதிகளில் உள்ள கட்டண கழிப்பறை களிலிருந்து  புதை சாக்கடை இணைப்பில் கழிவு நீர் வெளியேற்றப்படுவது இல்லை.

அதுவும் ரோட்டிலேயே குளம்போல் தேங்கி மிக பயங்கரமாக துர்நாற்றம் வீசுவதுடன் பல்வேறு தொற்றுநோய் ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறது. இந்த நிலைமைகளை தொடர்ந்து ஏஐடியூசி தொழிற்சங்கம் சுட்டிக்காட்டி வந்துள்ளது. தற்போது சுகாதார சீர்கேடுகளை அகற்றி, கழிவுநீர் புதை சாக்கடை இணைப்பு குழாய்கள் வழியாகச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

அதுபோல் புதிய பேருந்து நிலையத்திற்கு வருபவர்களுக்கு சுகாதாரமான குடிநீர்அனைத்து பகுதிகளிலும் ஏற்பாடு செய்ய வேண்டும். மத்தியப் பகுதியிலே கட்டப்பட்டு வரும் கழிவறை உள்ளிட்ட பராமரிப்புணிகள் விரைந்து முடிக்க வேண்டும் மாநராட்சி நிர்வாகம் முன்வரவேண்டுமென அதில் வலியுறுத்தியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top