புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) சார்பில் 41.73 கி.மீ நீளமுள்ள 20 பாசன வாய்க்கால் கள் ரூ.1.11 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், ரெகுநாதபுரத் தில், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) சார்பில், காரைக்குளம் வரத்து வாய்க்கால் மற்றும் வல்லநாடு வழிந்தோடி வாய்க்கால் தூர்வாரும் பணிகளை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு (27.05.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது; டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் துவங்குவதற்காக கடந்த 24.05.2022 அன்று மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் தங்கு தடையின்றி பாசனத்திற்காக தண்ணீர் செல்லும் வகையில், பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் பொதுப்பணித்துறையின் தெற்கு வெள்ளாறு கோட்டத்தின் சார்பில் 15 வாய்க்கால்கள் சுமார் 35.30 கி.மீ நீளத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டிலும், கல்லணை கால்வாய் கோட்டத்தின் சார்பில் 6.43 கி.மீ நீளமுள்ள 5 பாசன வாய்க்கால்கள் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 41.73 கி.மீ நீளமுள்ள 20 பாசன வாய்க்கால்கள் ரூ.1.11 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு வருகிறது. இப்பணிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள்ள பணிகளை முடித்து விவசாயத்திற்கு தங்கு தடையின்றி தண்ணீர் செல்வது உறுதி செய்யப்படும்.
மேலும் குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் தேவையான அளவு இருப்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை மெற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் அனைவரும் தங்களது விவசாய பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு அதிக மகசூல் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார். இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, உதவி செயற்பொறியாளர்கள் திருநாவுக்கரசு, உமாசங்கர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்