Close
மே 16, 2024 12:47 காலை

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம்: விரைந்து இறுதி செய்ய ஏஐடியுசி வலியுறுத்தல்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்த ஏஐடியுசி ஆலோசனைக்கூட்டம்

போக்குவரத்துத் தொழிலாளர்களின் 14 -ஆவது ஊதிய ஒப்பந்தம் விரைவாக இறுதிப்படுத்த வேண்டும் என ஏஐடியூசி நிர்வாக குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம்  ( 27.05.2022)  தஞ்சாவூர் மாவட்ட அலுவலகத்தில் சங்கத் தலைவர் டி.தங்கராசு தலைமையில் நடைபெற்றது.

கெளரவத் தலைவர் கே.சுந்தரபாண்டியன்  வரவேற்றுப் பேசினார். பொதுச்செயலாளர் டி.கஸ்தூரி நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார் . மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன், ஏஐடியூசி மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை, சங்க நிர்வாகிகள் எம்.மாணிக்கம், சி.ராஜ மன்னன், என்.ஆர்.செல்வராஜ், ஆர்.ரெங்கதுரை,என்.ஞானவேந்தன், கே.சுகுமார், பி.முருகவேள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .முடிவில் பொருளாளர் எஸ்.தாமரைச்செல்வன் நன்றி கூறினார்.

கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

அடுத்த ஒப்பந்தம் நெருங்கி விட்ட நிலையில், தொழிலாளர் களின் 14வது ஊதிய ஒப்பந்தம் மூன்று வருடமாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது, தற்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, விரைவாக ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும்.

கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட வேண்டும், திமுக தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர் களின் அகவிலைப்படி உயர்வு 80 மாத கால நிலுவைத் தொகை வழங்கி, ஓய்வூதியத்துடன் இணைக்கவேண்டும்.

2016 -ஆம் ஆண்டு வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்க ளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட வேண்டும், கடந்த 2020 மே மாதம் முதல் விருப்ப ஓய்வு, மருத்துவ ஓய்வு, பணியின்போது இறந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, விடுப்பு தொகை உள்ளிட்ட ஓய்வுகால பணப்பலன்கள் இரண்டு வருடமாக வழங்கப்படாமல் உள்ளது, உடனடியாக ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கிட வேண்டும்.

காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், பேருந்துகளுக்கு தேவையான உதிரி பாகங்களை உடனடியாக வழங்கி பேருந்து இயக்கத்திற்கு இடையூறின்றி செயல்பட வேண்டும் என்று கழக நிர்வாகத்தையும்  தமிழ்நாடு அரசையும்  வலியுறுத்துகிறது.

தஞ்சாவூர் மாநகரில் இயங்குகின்ற தனியார் மினி பேருந்துகளின் முறையற்ற இயக்கத்தினால் போக்குவரத்து கழக வருமானம் பெரிதும் பாதிக்கப் படுவதை கருத்தில் கொண்டு மினி பேருந்துகளின் பர்மிட்படி அந்த வழித்தடத்தில் உரிய நேரத்தில் இயக்கவும், அதை கண்காணித்து மாவட்ட போக்குவரத்து துறை அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திற்கு பின்புறம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தை கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தஞ்சாவூர் அரசு விரைவு போக்குவரத்து கழக பயன்பாட்டிற்கு முழுமையாக அளிக்கப்பட வேண்டும்.

அதேபோல் தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலையம் அருகில் ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ள இடத்தை பழைய பேருந்து நிலைய விரிவாக்கத்துக்கு அளித்து ,பேருந்து இயக்க பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும். தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி நகரத்தில் வெயில்,பனி,மழை  உள்ளிட்ட காலங்களில் பயணிகள் அவதிப் படுவதை கருத்தில் கொண்டு அனைத்து பேருந்து நிறுத்தங்க ளிலும் பயணிகள் நிழற்குடை நவீன தரத்துடன் அமைக்க வேண்டும்.

தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலையத்தில் செயல்படும் கடைகள் அவர்களின் இடத்தைத் தாண்டி நடைபாதையை ஆக்கிரமித்து உள்ளதை ஒழுங்கு படுத்தி பயணிகள் நடைபாதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

சுகாதாரமான குடிநீர் 24 மணிநேரம் வழங்கப்படவேண்டும், பயணிகள் அமர்வதற்கு இருக்கை அமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை நிறைவேற்றித் தர மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்  தஞ்சை மாநகர மேயர்  தொழிலாளர்களுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கூறுவதைத் தவிர்த்து, பணிமனை வளாகத்திற்கு வந்து தொழிலாளர்கள் கூட்டம் நடத்தி தக்க அறிவுரைகளையும், ஆலோசனைகளை யும் இனிவரும் காலங்களில் வழங்கிட வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top