திருக்குறள் புலனம் மூலம் உலக வாழ் தமிழர்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து நாளும் வள்ளுவத்தையும், வள்ளுவம் சார்ந்த பதிவுகளையும் தமிழ் ஆர்வலர்களுக்கு பகிர்ந்து, தினமும் ஒரு குறளை சொல்லி, பல்வேறு உரைகளை ஒப்பிட்டு, பொருத்தமான இலக்கிய மேற்கோள்கள் தந்து, பின் இணைப்பாக பொருள் குறிப்பு அகராதியையும் சேர்த்து,பாயாசத்தில் சுவை சேர்க்கும் முந்திரிப் பருப்பு போல, விருந்து வைக்கிற தமிழ்ப் பெருமக்களை ஒன்றிணைக்கும் உயரிய பணியை செய்கிற தோழர் அன்பு ஜோதி, நேற்று ஒரு சிறிய காணொளி அனுப்பினார். அதில் வருகிற அய்யா மஞ்சக்குழி அண்ணாதுரை அவர்களை எதேச்சையாக சந்தித்திருக்கிறார்.
குறள் சொல்லும் அவரது குரல் எவ்வளவு இனிமையாக, இசையாக இருக்கிறது பாருங்கள். அன்பு ஜோதி அய்யா, அவ்வப்போது இந்த பெரியவரை சந்தித்திருந்தாலும், அவர் திருக்குறள் சொல்லுவார் என்பது நேற்று தான் தெரிந்திருக்கிறது. உடனே ஒரு காணொளி செய்து எனக்கு அனுப்பினார். இந்த பெரியவர் வீட்டு வேலை செய்கிறார். அவரது முதலாளி ஒரு முகமதியர். அவருக்கும் நேற்று தான் திருக்குறள் சொல்லுவார் என்பது தெரிந்திருக்கிறது. காணொளி பார்த்து அவரும் அதிசயித்திருக்கிறார்.
அய்யா மஞ்சக்குழி அண்ணாதுரை அவர்கள், சுவாமி சகஜானந்தாவால் சிதம்பரத்தில் தொடங்கப்பட்ட நந்தனார் பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறார். பேருந்து வசதி இல்லாத காலத்தில், சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவு, தோணியில் ஆற்றை கடந்து, கால்நடையாக சென்று, எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். வறுமையான குடும்ப சூழல் காரணமாக படிப்பை தொடர முடியவில்லை. இவருடன் படித்தவர்கள் நல்ல வேலையில் இருக்கிறார்கள்.இவர் தான் உள்ளூரிலேயே அன்றாடம் கிடைக்கும், பலதரப்பட்ட பழுதுபார்க்கும் வேலையாளாக, தினக்கூலியாக வாழ்ந்து வருகிறார்.
மனிதர்களுக்கு சில திறமை என்பது உடன் பிறந்தது அல்ல. எல்லோரும் பிறக்கும் போதே பல திறமைகளோடு பிறக்கவில்லை. எனினும் பல திறமையை வளர்த்துக் கொள்ளும் திறமையோடு தான் பிறக்கிறோம். அப்படி தான் இயற்கை நம்மை வடிவமைத்துள்ளது.
நாமம் தான் பேசுறோம், எழுதுறோம், அப்படியே காத்துல போயிடுது.ஒரு சிலருக்கு மட்டும் தான் வார்த்தைகளால் உலுக்கி விட முடிகிறது..,ஒரு சிலருடைய சொற்கள் தான் நம்மை விழிக்க வைத்து செயலாற்ற வைக்கிறது.
எண்ணங்கள் அப்படியே உணர்வுகளில் கோர்க்கப்பட்டு, எல்லா திருக்குறளும், இவர் வாயில் நீரோடை மாதிரி ஓடி வருகின்றன.எழுபது, எண்பதுகளின் காலத்தில் தாத்தா, பாட்டி போன்றோர் கூறும் கதைகளும், நீதி போதனை வகுப்புகளும், தாய், தந்தை மற்ற உறவினர்கள் மீது அன்பும், அவர்களின் சொல் பேச்சை மீறாது நம்மை நெறிப்படுத்தியது மற்றும் தீங்கு செய்ய மனம் நினைக்கப் பயந்தது.
குழந்தைகளுக்கு திருக்குறள், உலக நீதி கதைகள் போன்றவைகளை சொல்லி புரிய வைத்தால் அவர்களின் மனதில் பசுமரத்தாணி போல் பதியும்.இவை சாத்தியம் என்றாலும் யாருக்கும் நேரம் இல்லை. ஐயா அண்ணாதுரை போன்றவர்களை, அருகில் உள்ள கிராமத்து மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு திருக்குறள் சொல்லிக்கொடுக்க சொல்லலாம்.
ஒரு பயிரானது நன்றாக வளர வேண்டுமென்றால் நட்ட பருவத்திலிருந்து அதற்கு விவசாயி இலை, தழை, உரம் அளித்து அறுவடை வரை போற்றிப் பாதுகாத்து நல்ல மகசூல் பெறுவான். அதற்கு பதிலாக அறுவடைக்கு சில காலம் முன் உரம் அளித்தால் மகசூல் குறையும்.
நாம் எல்லாரும் கல்வி மூலம் தான் அறிவை பெற்றிருக்கிறோம். ஆனால் சிலர் அனுபவத்தின் மூலம் அறிவை பெற்று, மேதை ஆவதற்கு கல்வி தேவை இல்லை என்று நிரூபித்துக் காட்டிய ஜீவன்கள் நிறைந்த பூமி நம்முடையது.
அப்படியானவர்களை பற்றி சொல்லும் போது, ஒரு பாடல் நினைவிற்கு வருகிறது…, படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு; பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு..,அடுத்த முறை தாயகம் செல்லும் போது, அண்ணாதுரை ஐயாவை சந்திக்க வேண்டும். ஒரு கிராமத்து திருக்குறள் மேதையை, வெளிக் கொணர்ந்த தோழர் அன்பு ஜோதி அவர்களுக்கு நன்றி.
நமக்கு அருகாமையில் பல பொக்கிஷங்கள் பொதிந்து கிடக்கும்..,
கண்களில் படாமல் நம் கவனத்துக்கு வராமல் பதுங்கி கிடக்கும்..,
தேடிப்பிடித்து கற்ற + பெற்ற ஆனந்தத்தில் வாழ்க்கையை
கடந்து செல்லுவோம்.
# இங்கிலாந்திலிருந்து சங்கர்🎋#