Close
செப்டம்பர் 20, 2024 1:40 காலை

புத்தகம் அறிவோம்… யார் இந்த மனிதர்கள்…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- யார் இந்த மனிதர்கள்

“ஒரு லட்சம் ரொக்க நிதி ஏற்படுத்தினால் ஒரு ஆர்ட்ஸ் காலேஜ் ஆரம்பிக்கலாம் “என்று சொன்னார் மெட்ராஸ் யுனிவர்சிட்டி வைஸ் சான்ஸ்லர் லஷ்மணசாமி முதலியார். “இந்தாருங்கள் ஒரு லட்சம் ! காரைக்குடியில் ஒரு காலேஜ் ஆரம்பிக்கலாம்” என்றார் அழகப்பர்.

சில நாட்களில் காலேஜ் ஆரம்பமாகிவிட்டது. “வாடகைக் கட்டிடத்தில் எவ்வளவு நாட்களுக்கு காலேஜ் நடத்துவது. காலேஜ்க்கு சொந்தக் கட்டிடம் வேண்டும் “என்று எண்ணினார்
காரைக்குடிக்குப் பக்கத்தில் அறுநூறு ஏக்கரா நிலத்தை வாங்கினார். அதில் 150 ஏக்கரா நிலத்தை மேற்படி காலேஜுக்கு என்று எழுதிவைத்தார். கட்டிடமும் விஸ்தாரமாகக் கட்டினார்.

“வெறும் ஆர்ட்ஸ் காலேஜுகளைப் பெருக்கி பி.ஏக்களை உற்பத்தி செய்து தள்ளுவதில் என்ன பிரயோசனம்” என்று சிலர் சொன்ன வார்த்தைகள் டாக்டர் அழகப்பரின் காதில் விழுந்தன.

இதே சமயத்தில் இந்தியாவின் சுதந்திர சர்க்கார் சென்னை மாகாணத்தில் ஒரு மின்சார ரசாயனக் கூடம் ஆரம்பிக்கப்போகிறார்கள் என்றும் தெரிந்தது. “முந்நூறு ஏக்கரா நிலம் தருகிறேன். பதினைந்து லட்சம் நன்கொடையும் தருகிறேன். காரைக்குடியில் ஆரம்பியுங்கள் என்று சொன்னார் அழகப்பச் செட்டியார்.

“நிலம் இருக்கிறது தண்ணீர் ” என்றார் விஞ்ஞான இலாகா காரியதரிசி பட்நகர். உடனே பூமிக்கு அடியிலே இருநூறு அடி முந்நூறு அடி ஆழம் போய், தண்ணீரைக் கொண்டுவரும் போர் பம்பிங் இயந்திரத்தைக் கொண்டுவந்தார். (இந்தப் பகுதிக்கு வந்த முதல் போர் இயந்திரம்) பூமிக்குள்ளே ஆழமாய் குடைந்ததும் தண்ணீர் பொங்கிக் கொண்டு வந்து வெள்ளமாய்ப் பெருகிற்று. பட்நகரின் ஆட்சேபணை அடிபட்டுப் போய்விட்டது.

அறுநூறு ஏக்கராவில் நானூற்று ஐம்பது ஏக்கரா நிலம் பாக்கி இருக்கிறது. என்ன செய்வது என்ற கவலை அழகப்பரை தொல்லைப்படுத்தியது. மீதம் உள்ள நூற்று ஐம்பது ஏக்கரா நிலத்தில் ஒரு முதல் தர என்ஜினியரிங் காலேஜ் ஆரம்பித்துவிட வேண்டியதுதான். அதற்கு பத்து லட்சம் வேண்டும். இப்போது அழகப்ப செட்டியார் காரைக்குடியில் என்ஜினியரிங் காலேஜ் ஆரம்பிப்பதற்காகப் பத்து லட்சம் சேகரம் செய்துகொண்டிருக்கிறார். ( பக்.36 – 38).

இப்படி காரைக்குடியில் அழகப்பா கலைக்கல்லூரி, சிக்ரி, அழகப்பா பொறியியல் கல்லூரி வந்ததைப் பற்றி “யார் இந்த மனிதர்கள்? ” நூலில் கல்கி, ‘அதிசய மனிதர் அழகப்பர்’ என்ற கட்டுரையில் அழகப்ப செட்டியாரின் தான தர்மங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது எழுதுகிறார்.

கல்கியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி வானதி பதிப்பகம், கல்கியின் எழுத்துகள், இக்காலத் தலைமுறைக்கு போக வேண்டும் நோக்கில் வெளியிட்டுள்ள நூலில் ஒன்றுதான் இது. இந்த நூலில், 20 -ஆம் நூற்றாண்டின் முதல்பாதியில் வாழ்ந்த உன்ன மனிதர்களைப் பற்றி, அவர்களின் அதிசய குணங்க ளைப் பற்றி தனக்கே உரிய நகைக்சுவையோடு எழுதியிருக் கிறார் கல்கி.

மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதய்யர், மிகச்சிறந்த ஆங்கிலப் பேச்சாளர் சீனிவாச சாஸ்திரி, திருச்சியின் முதல் எழுத்தாளர் வ.ரா., வள்ளல் அழகப்ப செட்டியார், வ.உ.சி. தேசபக்தர் வேலூர் முத்துரங்க முதலியார், கே.சந்தானம், விகடன் குழுமம் உருவாகக் காரணமான எஸ்.எஸ்.வாசனை வளர்த்த அவர் தாயார் ஸ்ரீபாலாம்பாள், நாதஸ்வர சக்ரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை.

இந்திய சினிமாவிற்கு மகத்தான பங்காற்றிய “ஏ.வி.எம்” என்றழைக்கப்படும் ஏ.வி.மெய்யப்ப செட்டியார், ஜஸ்டிஸ் கட்சி தலைவர் பி.டி.ராஜன், தமிழ்த் தந்தை திரு.வி.க., ஒரு இசைக்குயில் உருவாகக் காரணமாக இருந்த, எம்.எஸ். சுப்புலட்சுமியின் தாயார் மதுரை வீணை சண்முகவடிவு,

மறைமலைஅடிகள்,ராஜாஜி என்று 41 ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளது. இது தனி மனிதர்களைப் பற்றிய குறிப்புகளாக மட்டுமல்லாமல் அந்தக் காலச் சூழலை அறியும் வண்ணமும் இந்தக் கட்டுரைகள் உள்ளது. இந்த உன்னத மனிதர்களை இன்றைய சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தி தமிழ்ச் சமுதாயத்திற்கு கல்கி பெரும் தொண்டாற்றியிருக்கிறார் கல்கி.

…பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top