புதுவையில் அந்நாளில் இருந்த தமிழ்நாட்டு தேசபக்தர்கள் பாரதியார், வ.வெ.சு.ஐயர், எஸ்.ஸ்ரீனிவாசாச்சாரியார், நான்(என்.நாகராஜன்) ஆக நால்வரே. எங்களுக்கு பிரிட்டிஷ் சர்க்கார் இழைத்த தொந்தரவுகள் இவ்வளவுதான் என்று சொல்ல இயலாது. தபால் காரியாலயம் மூலம் எங்களுக்கு எதுவும் கிடைக்க விட்டதில்லை. அப்படியே எதாவது வந்தாலும் அதை பறிமுதல் செய்துவந்தார்கள்.
புதுவை வாசிகளிடம் தேசபக்தர்கள் பேசினால் உடனே அவர்களிடம் சி.ஜ.டி.சென்று அவர்களை பயமுறுத்திப் பேசாமல் செய்துவந்தார்கள்.அப்படியும் மீறிப் பேசினால் பிரிட்டிஷ் எல்லைக்குள் சென்ற பொழுது அவர்களை கைது செய்து இம்சித்து வந்தார்கள்.
பிரிட்டிஷ் சர்க்கார் புகாரின்பேரில் பிரெஞ்சு சர்க்கார் தேச பக்தர் வீடுகளைப் பல தடவை சோதனை செய்து செய்தார்கள். ஜோடித்த வழக்குகளை தேசபக்தர்கள் மீது கொண்டுவந்தபொழுது பிரெஞ்சு இந்திய சர்க்கார் அவைகளை அப்போதைக் கப்போது விசாரித்து எவ்வித குற்றமும் இல்லாததால் புகார் கொண்டுவந்தவர்கள் முகங்களில் கரியைப் பூசி அனுப்பினார்கள். பக்.51.
புதுச்சேரி என்ற பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்ததால் பிரிட்டிஷ் இந்திய அரசின் கெடுபிடியில் இருந்து தப்பித்து அமைதியாக பணி செய்ய புதுச்சேரியில் அடைக்கலமாவார்கள். பாரதியார் 1908லிருந்து 1918 வரை 10 ஆண்டுகள் அங்கே வாழ்ந்திருக்கிறார். வங்காளத்தில் பிறந்த அரவிந்தர் இங்கே வந்து நிரந்தரமாக தங்கிவிட்டார். வ.வே.சு.ஐயர் 1920 வரை புதுச்சேரியில் இருந்திருக்கிறார்.
“புதுவையில் தேசபக்தர்கள்” என்ற இந்த நூல், பாரதியார், வ.வே.சு.ஐயர், அரவிந்தர் ஆகிய மூன்று தேசபக்தர்கள் புதுச்சேரியில் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது . அவர்களுடன் வாழ்ந்த என்.நாகசாமி, ஸ்ரீசுந்தரேச ஐயர், ஸ்ரீ. ஸ்ரீ. ஆசாரியார், யதுகிரி அம்மாள் ஆகியோர் மூன்று தேசபக்தர்களைப் பற்றிய நினைவுக் குறிப்புகளை இங்கே பகிர்ந்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட இந்தியாவின் சுதந்திரத்திற்காக அகதிகள் போல் இவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைய தலைமுறை மறந்தவர்களை நினைவூட்டும் நூல்.அல்லயன்ஸ் வெளியீடு
928928 1314.
# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை-புதுக்கோட்டை #