Close
செப்டம்பர் 19, 2024 11:21 மணி

புத்தகம் அறிவோம்… தொற்றே மருந்து..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

ஞானாலயா ஆவணப்பட வெளியீட்டிற்கு வந்திருந்த, கோவை சிறுவாணி மைய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் தொற்றே மருந்து என்ற இந்த நூலைத் தந்தார். இதை எழுதியவர் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் இயயோகா சுப்பிரமணியம்.

கொரோனா என்ற பெருந்தொற்று காலத்தில் நடந்த நிகழ்வுகளை, கடந்தகால நினைவுகளோடு தொடர்புபடுத்தி நகைச்சுவையோடு 25 தலைப்புகளில் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பே இது.

கூட்டமில்லாமல் நடைபெற்ற திருமணங்கள், உறவுகளின்று அடக்கம் செய்யப்பட்ட உடல்கள், பால்காரர், பேப்பர்காரர் களோடு இருந்த நவின தீண்டாமை, தன் உடைகளை தானே துவைத்து சலவை தொழிலுக்கு தந்த மரியாதை, பாதுகாப்பு என்ற பெயரில் நடந்துகொண்ட அதீத நடவடிக்கைகள், வீடே சிறையாக மாறிப்போனது – இன்னும் பல – என்று ஒவ்வொன்றையும் சுவையாக எழுதியிருக்கிறார்.

கொரோனாவிற்கு மறைந்து , மறந்துபோன மரபுகளை மீட்டெடுத்த புண்ணியுமுண்டு என்கிறார் இயயோகா.மேலும் பெருந்தொற்று நமக்கு உறவுகளின் மேன்மையை உணர்த்தியதோடு, தன்னம்பிக்கையையும் விதைத்துச் சென்றிருக்கிறது என்கிறார்.

“பெருந்தொற்றுக்காலம் மரபை, மரபின் வாழ்வியலை, மரபின் மருத்துவத்தை,மரபின் அழகியலை, மரபின் சுழலியலினை, மரபின் உறவு மேன்மையை, மரபின் காதலை நம்மிடம் மீட்டெடுத்து வந்த காலம்… இயயோகா அண்ணனுக்கும் அப்படித்தான்.

அவர் மட்டும் யோசித்ததோடு மட்டுமல்லாமல் அதனூடே என்னவெல்லாம் இருந்தது? எதையெல்லாம் மறந்துபோனோம் என தூக்குப் போசியில் (அவர் மொழி) ஊற்றிக் கொடுத்து நம் சைக்கிள் பாரிலும் மாட்டிச் சென்றிருக்கிறார்” என்கிறார் இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள மருத்துவர் கு.சிவராமன். அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.கோவை அட்சயம் வெளியீடு,98430 64877.

# சா. விஸ்வநாதன்-வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top