Close
நவம்பர் 23, 2024 10:01 காலை

புத்தகம் அறிவோம்… கலைஞர் 100..விகடனும் கலைஞரும்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

“கிழமைதோறும் ஆனந்த விகடனைப் படிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வமுண்டு. அதிலே வரக்கூடிய துணுக்குகள், விமர்சனங்கள், தொடர்கதைகள், தலையங்கள் ஒவ்வொன்றையும் விரும்பிப் படிப்பேன். நான் மட்டுமல்ல எங்கள் கிராமத்திலேகூட பெரும்பாலோர் விரும்பிப் படிக்கின்ற பத்திரிக்கைதான் ஆனந்தவிகடன். ஒரு விகடன் இதழ் வீட்டுக்கு வீடு பயணம் நடத்தி முடிப்பதற்கும் அடுத்த வார விகடன் இதழ் வருவதற்கும் சரியாக இருக்கும். எனக்கும் ஆனந்த விகடன் ஆசிரியர் திருமிகு வாசன் அவர்களுக்கும் அவனுடைய அருமைச் செல்வன் திரு பாலு அவர்களுக்கும் பிற்காலத்தில் ஒரு நெருங்கிய நட்பு ஏற்படுமென்று நான் அப்போது எண்ணியதே கிடையாது.”
டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி – “ஆனந்தவிகடனும் நானும்” கட்டுரையில்(பக்.346).100 ஆண்டை நெருங்கிக் கொண்டிருக் கும் ஆனந்தவிகடனின் மூன்று தலைமுறையைப் பார்த்த பெருமை கலைஞருக்கு உண்டு.
எஸ்.எஸ். வாசன், எஸ்.பாலசுப்பிரமணியன் தற்போதைய பா.சீனிவாசன்.
குமுதம், துக்ளக் கை மாறிப்போனதுபோல் விகடன் கைமாறிப்போகாமல் இன்றும் ஒரு குடும்ப இதழாகத் தொடர்கிறது.

“கலைஞர் 100-விகடனும் கலைஞரும் “– ஒரு 50 ஆண்டுகள் தமிழகத்தின் தவிர்க்க முடியாத மனிதராக இருந்த கலைஞருக்காகவும், அவரைப்பற்றி முழுமையாக அறியாமல் இருக்கும் அவரின் “உடன்பிறப்பு”களுக்காகவும் ஆனந்தவிகடன் தொகுக்குத்துள்ள ஒரு புகழ் மாலை நூல்.

108 தலைப்புகளில், ஆனந்தவிகடன், ஜூனியர்விகடன் மற்ற விகடன் இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள், நேர்காணல் களின் தொகுப்பு இது. முதல் கட்டுரை” அரசியல் நான் தேர்ந்தெடுத்த பாதை” என்ற தலைப்பிலான வெ.நீலகண்டன் விகடன். காம்  -ல் எழுதிய கலைஞரின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்.
கடைசி,108 வது கட்டுரை” எப்படி இருக்கிறது கோபாலபுரம்?”
எம்.ஜி.ஆரின் ராமாபுரம், கலைஞரின் கோபாலபுரம், ஜெயலலிதான் போயஸ் தோட்டம் மூன்றும், இங்கிலாந்து பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான லண்டன், 10 Towning Street , போன்று தமிழகத்தில் முக்கியம் பெற்ற இடங்கள். ஆனால் இப்போது கலை இழந்துபோன இடங்கள்.

1968 தொடங்கி 2019 வரையான அரசியல், சினிமா, இலக்கியம், குடும்பம் என்று கலைஞரின் பல்வேறு பரிமாணங்களையும் விகடன் தான் பதிவு செய்தவற்றை, விமர்சனங்களைத் தவிர்த்து, தொகுத்துத் தந்திருக்கிறது. கடந்த 50 ஆண்டு கால தமிழக மற்றும் இந்திய அரசியலின் முக்கிய நிகழ்வுகளை மீள்பார்வைக்கு வைக்கிறது விகடன் நமக்கு.

விகடனை, தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இது ஒரு மீள்வாசிப்பு. மற்றவர்களுக்கு கலைஞரின் ஒரு பக்கத்தை அறிய உதவும் முழுமையான நூல். 736 பக்கம் கொண்ட ஆர்ட் பேப்பரில் பளபளவென்று தயாரிக்கப்பட்டுள்ள, கையில் வைத்துக்கொண்டு படிக்க முடியாத அளவிற்கு கனமான நூல். விலையும் கனமானதுதான் 900/- ரூபாய். என்ன, இன்று பளபளப்பாக இருக்கும் புத்தகம் காலப்போக்கில் பழுப்ப டைந்து போய்விடும்.

விகடன் வெளியீடு. புதுக்கோட்டை சக்ஸஸ் புத்தகக்கடையில் 10% கழிவில் வாங்கலாம்.98420 18544.

# சா. விஸ்வநாதன்-வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top