புதுக்கோட்டையின் அடையாளமாகத் திகழும்” ஞானாலயா ஆய்வு நூலகத்தின் நிறுவனர் ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பவளவிழாவின்போது, அவருக்கு இலக்கிய ஆளுமைகள்பலர் எழுதிய கடிதங்கள் தொகுத்து வெளியிடப்பட்டது.அந்தத் தொகுப்புதான் இந்த “தேடலில் தெளியும் திசைகள்“.தொகுத்து பதிப்பித்தவர் ‘வைகறை’.
– கந்தர்வன் கதைகள் பற்றி, தஞ்சை பிரகாஷ் ஞானாலயா கிருஷ்ணமூர்த்திக்கு எழுதிய நீண்ட கடிதத்தின் சில பகுதிகள்..
அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வணக்கம்.. பல.”தாங்கள் தந்து சென்ற’கந்தர்வன்’ கதைகள் இரண்டையும் படித்தேன். ரஸமயமான மனிதர். மேலும் வாழ்வின் நெறிகளை உடைத்து வளர்க்கத்துடிக்கும் கலைஞன். இவைகளின் ஆர்வமும் துடிப்பும் கதைகளில் தெரிகின்றன. புதிய நோக்கம். புதிய தீக்ஷண்யம் ஆகியவை கந்தர்வனின் தனித்தன்மை. நறுக்குத் தெரிந்தாற்போன்ற துடிப்பு நிறைந்த வெட்டும் தமிழ் துணை செய்கிறது.’மைதானத்து மரங்கள் ‘ ஒரு வழக்கமான முற்போக்குக்கதை. இதனை கந்தர்வனின் தனித்தன்மை மீறியிருக்கவேண்டும்.
துர்கனேவ் “மு.மு” கதையிலிருந்து இந்திய எழுத்தாளர் தாகூர் முதல் பிரேம்சந்த் தொடங்கி தமிழ்ப் புதுமைப்பித்தன், ரகுநாதன், ஜெயகாந்தன் பலரும் பாதிப்படைந்து எழுதிய அதே போக்குதான் மைதானமும் – மரங்களும் என்றாலும் கடைசியில் அழுது பொறுமும் இடமும் கார்க்சியின் பாதிப்புண்டு. கந்தர்வன் கலைஞன்.அதில் சந்தேகமில்லை. வாழ்வின் சோகங்களை அற்புதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார்…
“கந்தர்வன் நுண்ணிய கலைஞர். இதனை அவர் நெருங்கிய நண்பர்கள் அறியார். சுதந்திர சிந்தனை மீதும் விடுதலை யான வாழ்விலும் ஓயாத நம்பிக்கை கொண்டவர் ஒரு சேர உணர்ந்தவர் கந்தர்வன்.அவரது விடுதலை மக்கள் விடுதலை…
இந்தக் கதைகளை என்னிடம் தந்து படிக்கச் சொன்ன உங்களது நட்பையும், அருமையையும் என்னவென்று பாராட்டுவேன். கதைகள் நிஜமாகவே சந்தோஷம் தந்தன. (பக்.75 – 78.)
3000 நூல்களில் தொடங்கி 1, 30,000 நூல்களின் ஆலயமாக மாறியிருக்கிறது “ஞானாலயா ஆய்வு நூலகம்” பா.கிருஷ்ணமூர்த்தி-டோரதி கிருஷ்ணமூர்த்தி என்ற ஆதர்ஷ தம்பதிகளின் கடும் உழைப்பினால் உருவானது இது.
இந்த நூலகத்திற்கு இன்றைய முதல்வர் ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன், வைகோ போன்ற அரசியல் ஆளுமைகள் தொடங்கி தமிழின் ஒப்பற்ற இலக்கிய ஆளுமைகள் பலரும் வருகை தந்த ஆலயம் இது.
அப்படி வருகை தந்தவர்கள் பா.கிருஷ்ணமூர்த்திக்கு எழுதிய கடிதங்கள் இதில் உள்ளது. இது வெறும் கடிதங்கள் அல்ல ஒரு இலக்கியம். இந்த நூலகத்தோடு தங்களுக்கு உள்ள தொடர்பு மற்றும் தாம் வாசித்த நூல்களில் பெற்ற அனுபவங்களை யெல்லாம் இக்கடிதங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். பல நூல்களில் கிடைக்கின்ற அனுபவம் இத்தொகுப்பில் உள்ளது.
தஞ்சை பிரகாஷ், ல.கி.ராமானுஜம், கரிச்சான்குஞ்சு,
கவி.காமு ஷெரிப் கவிதையாக எழுதிய கடிதங்கள்,உலகம் சுற்றிய தமிழர் ஏ.கே.செட்டியார், கி.அ.சச்சிதானந்தம், சிட்டி’ என்கிற பெ.கோ.சுந்தரராஜன்,ச. ஈஸ்வரன்,ரோஜா முத்தையா, ஆ.இரா.வேங்கடாசலபதி…
மற்றும் பலரின் கடிதங்கள் இத்தொகுப்பில் உள்ளது. பலரும் தனக்கு தேவையான நூல்களை இங்கேயிருந்து பெற்று வாசித்திருக்கிறார்கள். நல்லதொரு கடித இலக்கியத் தொகுப்பு.கடந்த 10.10.2023 -ல் ஞானாலயா ஆவணப்படம் புதுக்கோட்டையில் வெளியிடப் பட்டது.
வெளியீடு- பவள விழாக்குழு,ஞானாலயா ஆய்வு நூலகம்,
6.பழனியப்பாநகர்,திருக்கோகர்ணம் அஞ்சல்,புதுக்கோட்டை 622002. செல்பேசி-9965633140.
# சா. விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #