மனிதன் நோயின்றி இருக்க மூன்று வழிகளைச் சொல்கி றார்கள் விவரம் தெரிந்தவர்கள். ஒன்று – நல்ல உணவு. இரண்டு-தேவையான உடற்பயிற்சி.மூன்று – கவலை இல்லாத மனம். இந்த மூன்றும் சரியாக இருந்தால் எந்த நோயும் நம்மை நெருங்காது என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள்.
இப்போது நான்காவதாக ஒன்றையும் சேர்க்கிறார்கள். அது மனித நேயம்! மற்றவர்களை நேசியுங்கள்.அடிக்கடி மற்ற வர்களுக்கு உதவி செய்யுங்கள். அது உங்களின் உடல் நலத்துக்கு நல்லது என்று சொல்கிறார்கள்.
அடுத்தவர்களை நேசிப்பதற்கும் நம்ம உடம்பு நல்லா இருப்பதற்கும் என்ன சம்பந்தம்? இதற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் கென்னத் பிரிடியர் விளக்கம் சொல்கிறார்.
பொதுவாக நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது அல்லது மற்றவர்களை நேசிக்கும்போது நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அந்த சமயத்தில் நம் உடம்பில் இருக்கக்கூடிய நோயை எதிர்க்கும் செல்கள் (cells of immune system) முழு சக்தியோடு இயங்குகிறது. அதனால் நமது உடம்பில் எந்த நோயும் வருவதில்லை.
ஆனால் அதேசமயம்… நாம் கவலையில் இருக்கும் போதோ… தனிமையாக வாழும்போதே நோய் எதிர்ப்பு செல்கள் குறைவாகவே இருக்கின்றன என்ற உண்மை இப்போது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக இவர்களுக்கு பிணிகள் வர வாய்ப்பு அதிகம் என்பது டாக்டரின் கருத்து.
இது தொடர்பாக சாண்பிரான்சிஸ்கோவில் கூட ஒரு ஆராய்ச்சி செய்து பாத்திருக்கிறார்கள். குடும்பத்தை விட்டு பிரிந்து தனிமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் முதியவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு உடம்பில் என்னென்ன நோய்கள் இருக்கின்றன என்று குறித்துவைத்துக் கொண்டார்கள்.
அவர்களையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரே இடத்தில் தங்க வைத்தார்கள்.அவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்து ஒவ்வொெரு பிரிவிற்கும் மற்றவர்களுக்கு உதவுகின்ற பொறுப்பைக் கொடுத்தார்கள்.
உதாரணமாக ஒரு குழு அங்குள்ள சிறைச்சாலைகளுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு அன்பான அறிவுரைகளைச் சொல்லவேண்டும். அடுத்தது சின்னக்குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும். இப்படியான பொறுப்பு களைக் கொடுத்தார்கள்.
ஆறு மாதம் கழித்து அவர்கள் எல்லோரும் உடல் பரிசோத னைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அந்தப் பரிசோதனை முடிவில் தெரிந்து கொண்ட உண்மை அவர்களில் பாதிப் பேருக்கு நோயின் தன்மை வெகுவாகக் குறைந்திருந்தது.
அடுத்தவர்களுக்கு உதவுவது என்பது மனித நேயம். அதை ஆங்கிலத்தில் Amuism என்று சொல்கிறார்கள். நம்ம ஊரில் பெரியவர்கள் அடுத்தவர்களுக்கு உதவுவது புண்ணியம் என்று சொல்வதை இப்போது அறிவியலும் ஒப்புக்கொள்கிறது. எனவே நண்பர்களே… அடுத்தவர்களுக்கு உதவுவோம். மனிதநேயத்தையும் ஒரு மருந்தாகப் பயன்படுத்துவோம்.
(பக்.7- 9).
என்று அனைவரையும் உற்சாகப்படுத்தும் தென்கச்சியின்
58 கட்டுரைகள் அடங்கிய நூல்தான் சிறகை விரிப்போம் தென்கச்சி கோ.சுவாமிநாதனை அறியாத வாசகர்கள் இருக்க முடியாது. அவரின் “,இன்று ஒரு தகவலை “கேட்பதற்கு வானொலி முன்பு லட்சக்கணக்கானோர் காத்திருந்தது சரித்திரம். 5 நிமிட அறிவுப் புரட்சி அது.
“சிறகை விரிப்போம்” என்ற தலைப்பில் தினமணிக் கதிரில் எழுதிய உற்சாகக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். ஒவ்வொரு கட்டுரையும் 3 அல்லது நாண்கு பக்கங்களைக் கொண்டது. ஒவ்வொரு கட்டுரையும் வாசிப்பவர்களுக்கு புதிய அனுபவத்தையும், புதிய தகவல்களையும் தரும். வாசிப்ப வர்கள் தங்களை புதிப்பித்துக்கொள்ளத் தேவையான அனைத்து அம்சங்களும் இதில் உள்ளது.வாங்கி வாசியுங்கள். உற்சாகம் பெறுங்கள்.சிறகை விரித்து பறந்துஉச்சம் தொடுங்கள்.
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 29(7/3) “E” பிளாக் முதல் தளம்,மேட்லி சாலை, தி.நகர்,சென்னை. 600017.
#சா. விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #