Close
ஜூலை 8, 2024 10:30 காலை

புத்தகம் அறிவோம்.. நாட்டுக்கு ஒரு புதல்வர் ராஜாஜி…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

அரசியல்துறையில் சி.ஆர் எப்படி தீவிரவாதியோ அப்படியே சமூக சீர்திருத்தத்துறையிலும் தீவிரவாதி. சுவாமி விவேகா நந்தரின் பொன்மொழிகளை கேட்ட நாளிலிருந்தே, ஹிந்து சமூகத்திலுள்ள பெரிய குறைபாடு சாதி வேற்று மையும், தீண்டாமையும் என்பதை அவர் நன்கறிந்திருந்தார்.

சி.ஆர் விஷயத்தில் கொள்கை என்பது ஒன்று நடத்தை என்பது இன்னொன்று என்ற வித்தியாசமே கிடையாது. மனம் எது சரியென்று தீர்மானிக்கிறதோ அதையே வாய் சொல்லும் அதுவே செயலிலும் வெளியாகும்.

ராஜாஜி தன் வாழ்க்கை நடைமுறையில் சாதி வித்தியாசத் தையும் தீண்டாமையையும் அந்த நாளிலேயே ஒழித்து விட்டார். சமபந்தி போஜனங்கள் ஏற்படுத்தினார். சிதம்பரத்தில் நந்தனார் குலத்தில் பிறந்து சிறந்த வேதாந்தி யும் துறவியாயும் விளங்கிய சுவாமி சகஜாநந்தரை அழைத்துத் தம் இல்லத்தில் உணவருந்த வைத்தார்.

இந்நிகழ்ச்சி முப்பத்தெட்டு வருஷத்திற்கு முன்னால் நடந்தது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். (இந்த நூல் 1953 ல் எழுதப்பட்டது) அப்போது வேறு சாதியார் பார்த்திருக்கப் பிராமணர்கள் தண்ணீர் அருந்தவும் மாட்டார்கள். ஸ்மார்த்தப் பிராமணர்கள் வீட்டில் அய்யங் கார்கள் சாப்பிட மாட்டார்கள்.

கப்பலேறி ரங்கூன் போய் வந்தவனைச் சாதிப் பிரஷ்டம் செய்துவிடுவார்கள். இப்படியெல்லாம் சாதி வேற்றுமைக் கொடுமை தலைவிரித்தாடிய காலத்தில் சி.ஆர். ஹரிஜனங் களை தமது இல்லத்திற்கு அழைத்து வந்து சேர்ந்து உட்கார்ந்து உணவருந்தினார்.

அவருடன் இன்னும் சிநேகிதர் களும் சேர்ந்தார்கள். ஆனால் வைதீகக் கூட்டத்தாரிடையே சி.ஆர். மீது வெறுப்பும் கோபமும் வளர்ந்து வந்தன. அவர் சேலம் முனிசிபல் சேர்மன் ஆன போது செய்த சில காரியங்கள், வைதீகர்களின் கோபத்துக்கு தூபம் போட்டு வளர்த்தன.

பலனாக சேலம் வைதீகப் பிராமணர்கள் ஸ்ரீராஜகோபாலாச் சாரியாரையும் அவருடைய சினேகிதர்கள் சிலரையும் சாதிப் பிரஷ்டம் செய்தார்கள். வைதீகக் காரியங்கள் நடக்கும்போது அவர்களுடைய வீடுகளுக்கு யாரும் போகக் கூடாதென்று கட்டுப்பாடு செய்தார்கள்.

இதன்பேரில் ஆச்சாரியாரும் அவர்களுடைய சிநேகிதர்களும் தாங்களே வைதிகக்காரியங்களுக்குரிய மந்திரங்களைக் கற்றுக் கொண்டு ஒருவர் வீட்டில் ஒருவர் புரோகிதம் செய்து வைத்தார்கள். (பக். 13,14).

பொதுவாக நம்மில் பலர் ஒரு மனிதரின் ஒரு குறையை எடுத்துக்கொண்டு மற்ற பல சிறப்புக் குணங்களை மறந்துவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறோம். அப்படி ஒன்றால் மொத்தமாக ஊதாசீனப்படுத்தப்பட்டவர் சி.ஆர், ஆச்சாரியார்,

ராஜாஜி என்றெல்லாம் அழைக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல், சி.ராஜகோபாலாச்சாரியார். அவரின் பவளவிழா (75) ஆண்டில் கல்கியால் எழுதப்பட்ட நூல் இது.

ராஜாஜியின் ஆளுமையால் கவரப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர் கல்கி.இந்த நூலின் சிறப்பு, ராஜாஜியை நேரில் கண்டு, பழகி, அவருடைய குணாதிசயங் களை பார்த்து, உணர்ந்து எழுதிய ஒருவரின் நூல் என்பது தான்.

ராஜாஜியின் பிறப்பு முதல் 75 வயதுவரையிலான வரலாற்றை ஒரு நாவலை வாசிப்பது போன்று வாசிக்கும்படி கல்கி சுவைபட எழுதியிருக்கிறார்.வெளியீடு:சந்தியா பதிப்பகம்.
விலை ரூ.65.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top