Close
ஜூலை 8, 2024 10:50 காலை

புத்தகம் அறிவோம்.. கஸ்தூரிபா எனும் மகா மந்திரம்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- கஸ்தூரிபா எனும் மகா மந்திரம்

1944ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் நாள் இரவு மும்பை அரசாங்கம் பாவின் மறைவுச் செய்தியை அறிவித்தது. …பிப்ரவரி 23ம் நாள் மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு முடிந்தது. எல்லோரும் புறப்பட்டனர். ஆனால் பாவை பற்றிக்கொண்டிருந்த நெருப்பு அணையும்வரை பாபு அங்கிருந்து நகர மறுத்துவிட்டார்.

டாக்டர் சுசிலா நய்யாரிடம்’ என் உயிரில் பாதி போய்விட்டது. என் வாழ்வில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு’ என்று தனது வெறுமை உணர்ச்சியை வெளிப்படுத்தினார் காந்திஜி.

தனது இல்லாமையால் எல்லாமே வெறுமை ஆகிவிட்டது என்ற உணர்வை இருப்பவர்களிடம் யார் ஒருவர் ஏற்படுத்திச் செல்கிறாரோ அவரது வாழ்வு தான் நித்திய வாழ்வு. அந்த வாழ்க்கை யை வாழ்ந்தவர் பா.மணமான புதிதிலும், தொடர்ந்த வாழ்க்கையிலும் துன்பங்கள் பலவற்றை சந்தித்த கஸ்தூரிபா தனது கணவரது விருப்பப்படி இலட்சிய வாழ்வு வாழ்ந்து, தன் பெயரை நிலைப்படுத்திச் சென்றுவிட்டார்.

பெண்ணடிமைச் சமூகத்தில் முடங்கி முகம் புதைத்து அடையாளம் தெரியாமல் போகாமல் போர் முகங்காட்டி, தன்னை அடையாளப்படுத்திச் சென்றுவிட்டார். அதுதான் கஸ்தூரிபாயின் பெருமை அதுவே காந்தயத்தின் பெருமையும் ஆயிற்று.(பக்.77-78)

தனக்கென குறைவற்ற வாழ்க்கையை எதிர்பார்த்தவர் கஸ்தூரிபா . ஆனால் காந்திஜி ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளராக ‘வாழ விரும்பினார். அவரது குடும்ப வாழ்வையும் தனிப்பட்டதாகப் பார்க்காமல் பொதுவில் வைத்தார். சமையலறை முதல் குழந்தை வளர்ப்பு வரை எல்லாம் எல்லோருக்கும் பொதுவாக்கப்பட்டது.

சொந்தக் குழந்தைகளுக்கு ஒரு நியதி சமூகத்திலுள்ள பிற குழந்தைகளுக்கு ஒரு நியதி என்று இல்லாமல் எல்லாருக்கும் ஒரே நியதி வகுக்கப்பட்டது. உணவு, மருத்துவம், கல்வி, தொழில் எல்லாவற்றிலும் காந்திஜி பொதுமையை நிலை நாட்டினார். வீட்டை பலரும் வந்து தங்கும் ஆசிரமாக்கிய காந்திஜி பின்பு ஆசிரமத்தையே தன் வீடாக்கிக் கொண்டார்.

இத்தகைய எல்லா தருணங்களிலும் குடும்பத்தைத் தாங்கிய தூணாக நின்றார் கஸ்தூரிபாய். அதனால்தான் நாட்டு விடுதலைக்கான போரில் காந்திஜியால் தலைமை ஏற்க முடிந்தது…(பக்.81).

முனைவர் சரோஜினி அரசுக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி ஓய்விற்குப் பின் காந்தியத்தை இளையோர்களிடம் கொண்டு செல்லும் செயல்பாட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அவர் எழுதி மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணையால் வெளியிடப்பட்டுள்ள “கஸ்தூரிபா எனும் மகாமந்திரம்” இன்றைய இளைய தலைமுறை வாசிக்க வேண்டிய நூல்களில் ஒன்று.
1 . அரும்பில் ததும்பிய கஸ்தூரிபாய்
2. புரியாத மனமும் புதிரான மணமும்,
3. மனைவியெனும் மகாமந்திரம்
4. தாய்மையில் கனிந்த தவக்குடில்
5. கூடிக் குரலிசைத்த வீட்டுக்குயில்
6. விடுதலை வேள்வியில் வீரநங்கை.
7. கஸ்தூரி மணம் பரப்பக் காந்திஜி கொடுத்தவை
8. காந்திஜி வளம்பெற கஸ்தூரிபாய் அளித்தவை
9.கஸ்தூரி மணத்தது; காந்தியம் தழைத்தது என்று 9 தலைப்புகளில் கஸ்தூரிபாயின் பக்கம் நின்று இந்த நூலை எழுதியிருக்கிறார் சரோஜினி.
மனைவியாக, தாயாக, சுதந்திரப் போராட்ட வீரராக என்று ஒவ்வொரு நிலையிலும் அவர் கடந்துவந்த பாதையை உணர்வுபூர்வமாக எழுதியிருக்கிறார். காந்தியத்திற்கு கஸ்தூரிபா எவ்வளவு ஆதார ஸ்ருதியாக இருந்தார் என்பதை சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டது இந்த நூலில்.

சர்வோதய இலக்கியப்பண்ணை,
மதுரை.
ரூ.100/-

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top