Close
டிசம்பர் 3, 2024 5:16 மணி

புத்தகம் அறிவோம்: இறையன்புவின்… என்ன பேசுவது ? எப்படி பேசுவது ?

தமிழ்நாடு

என்ன பேசுவது! எப்படிப் பேசுவது! -இறையன்பு,

பேச்சாளர்களுக்கெல்லாம் பேச்சாளர்” என்று முன்னாள் தலைமைச் செயலாளரான இறையன்பு கலந்து கொண்ட கூட்டத்தில் ஒருமுறை சொன்னார் சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான ஸ்டாலின் குணசேகரன்.

அதை உறுதிப்படுத்தும் வித்தில் பேச்சில் எப்போதும் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கிறார் இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுத்திலும் மிகவும் கவனிக்கபடக்கூடிய அளவில் இருக்கிறார்.

மேடைப் பேச்சிலும், தொலைக்காட்சிகளிலும் இவருடைய பேச்சு பெரும் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

“தமிழகத்தில் மேடைப்பேச்சு என்பது வலிமையோடு ஆட்சி அதிகாரத்தை மாற்றக்கூடிய அளவுக்கு இருக்கிறது” என்றிருக்கிறார் தமிழக மேடைப்பேச்சைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறவரான பெர்னாட் பேட்.

உண்மை தான்.ஆன்மீகம் துவங்கி அரசியல்,சுய முன்னேற்றம் என்று பலவற்றில் தேர்ச்சி பெற்ற பேச்சாளர்கள் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள். இருந்து கொண்டிருக்கிறார்கள்.

“பேச்சுக்கலை அவருடைய காலடியில் வீழ்ந்து கிடந்தது” என்று தான் எழுதிய “காற்றில் கலந்த பேரோசை” கட்டுரையில் ஜீவாவின் பேச்சு வீரியம் பற்றி வியந்து எழுதியிருப்பார் சுந்தர ராமசாமி.

எப்படிப் பேச வேண்டும் என்பதற்கு பட்டிமன்றம் துவங்கிப் பலர் முன்னுதாரணமாக இருக்கிறார்கள். எப்படிப் பேசக்கூடாது என்பதற்கும் தொலைக்காட்சி விவாதங்களில் பேசும் சிலர் முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இறையன்பு அவர்களின் புத்தகம் பேச்சுகலையின் பல்வேறு பரிமாணங்களை முன்வைக்கிறது.
எப்படிப் பேச வேண்டும்,எதைப் பேச வேண்டும் என்பதற்கு நேர்த்தியாக வழிகாட்டுகிறது.

பேச்சுக் கலையைப் பற்றி என்ன பேசுவது? எப்படி பேசுவது?’ எனும் இப்படியொரு விரிவான புத்தகம் தமிழில் இதுவரை வெளிவரவில்லை என்கிற அளவுக்குச் சிறப்புடன் எழுதியிருக்கிறார் பேச்சாளர்களின் எழுத்தாளராகவும் இருக்கிற இறையன்பு அவர்கள்.

விமர்சகரான ந.முருகேசபாண்டியன் இந்த நூலுக்கு எழுதியிருக்கிற  முன்னுரை உங்கள் பார்வைக்கு…

மானுட வாழ்க்கையில் இலக்கியப் படைப்புகள் வாழ்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்துவதுடன் சமூக மதிப்பீடுகளையும் உருவாக்குகின்றன. அதேவேளையில் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிற வல்லமையுடைய காத்திரமான கட்டுரை நூல்கள், காலந்தோறும் சமூக மாற்றத்தில் அழுத்தமான செல்வாக்குச் செலுத்துகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட அறிவொளிக் காலச் சிந்தனைப் போக்கில் சிந்தனையாளர்களின் நூல்கள் முக்கியப் பங்கு வகித்தன.

கலிலீயோவின் இரு முதன்மை உலக அமைப்புகள் பற்றிய உரையாடல் (1615), ரூசோவின் சமூக ஒப்பந்தம் (1762), சார்லஸ் டார்வினின் உயிரினங்களின் தோற்றுவாய் (1859), காரல் மார்க்ஸின் மூலதனம் (1867), சிக்மண்ட் ஃபிராய்டின் கனவுகளின் விளக்கம் (1899) போன்ற கருத்தியல் சார்ந்த நூல்கள் ஐரோப்பிய நாடுகளின் சமூக அரசியல் அறிவியல் போக்குகளை மாற்றியமைத்தன.

கடந்த நானூறு ஆண்டு காலச் சமூக வரலாற்றில் உலகை மாற்றியமைத்த புத்தகங்கள் கணிசமானவை. அவை, ஏதோ ஒருவகையில் இன்றளவும் தொடர்ந்து வாசிக்கப்படுகின்றன.

அந்தப் போக்கின் தொடர்ச்சியாக அரசியல், பொருளியல், அறிவியல் நூல்கள் இன்றைய சமூகத்தைத் தகவமைக் கின்றன.

தமிழைப் பொறுத்தவரையில் சங்க இலக்கியம் முதலாக நவீன இலக்கியப் படைப்புகள் என இரண்டாயிரமாண்டு வரலாற்றுப் பின்புலத்தில் விரிந்துள்ளது. தமிழ்ச் சமூக அமைப்பு என்பதுகூட ஒருவகையில் தமிழ் மொழியின் விளைபொருளாகும்.

தமிழ்நாடு என்று குறிப்பிடப்படும் நிலப்பகுதியில் வாழ்கிற மக்கள், அந்நிலப்பரப்பினை முன்வைத்துக் காலந்தோறும் தமிழ் மொழியின் வழியாகத் தகவமைக்கிற பொது நினைவுகள்தாம் தமிழ்ச் சமூகம் என்ற அமைப்பு தோன்றுவதற்கான ஆதாரமாகும்.

வரலாற்றுச் சிறப்புடைய தமிழ் கூறு நல்லுலகில், வைதிக சமயத்தின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காரணத்தினால், பெரும்பான்மை மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டிருந்தது; பிறப்பு அடிப்படையிலான சாதிய ஏற்றத்தாழ்வும், பால்ரீதியில் பெண்ணை ஒடுக்குதலும் நிலவின.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் அரசியல் மேலாதிக்கம் நிலவியபோது தமிழகத்தில் வலுவடைந்த வருணாசிரம சநாதனம், ஆங்கிலேயரின் காலனியாதிக்கக் காலகட்டத்தில் மெல்லச் சிதலமடையத் தொடங்கியது.

சாதிய ஏற்றத்தாழ்வை மாற்றியமைத்துப் புதிய போக்குகளை உருவாக்கியத்தில் புத்தகங்களின் பங்கு மகத்தானது.

கி.பி. 1835 இல் இந்தியர்களும் அச்சகம் வைத்துக்கொள்ளலாம் என்ற ஆங்கிலேய அரசின் உத்திரவு காரணமாக அச்சு ஊடகம் பரவலானபோது, தமிழில் வெளியான புத்தகங்களும் பத்திரிகைகளும் கருத்துரீதியில் தமிழர் வாழ்க்கையில் ஆழமாக ஊடுருவின; புதிய போக்குகளை அறிமுகப்படுத்தின.

யோசிக்கும் வேளையில் பூமியில் மனித இருப்பு, ஒருநிலையில் சொற்கள் ததும்பிடும் புத்தகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது என அறிந்திட முடியும்.

“நான் என் வாழ்க்கையில் மூன்று விஷயங்களை முக்கியமானவையாகக் கருதுகிறேன். அவை புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்” என் ருஷிய இலக்கிய மேதை லேவ் தல்ஸ்தோய் சொன்னது கவனத்திற்குரியது.

புத்தகங்கள் வாழ்க்கைப் பரப்பின் விநோதங்கள், அற்புதங்கள், நன்னெறிகள், கசடுகள், உன்னதங்கள், ரகசியங்கள் போன்றவற்றைப் பொதிந்து வைத்துக்கொண்டு உறைந்திருக்கின்றன; வாசகர்களுக்காகக் காத்திருக்கின்றன.

புத்தகத்தின் வரிகளுக்கிடையில் ஒளிந்திருக்கிற தகவல்கள், வாசிப்பின்மூலம் வாசகரை வெவ்வேறு உலகங்களுக்கு இட்டுச் செல்கின்றன.

இதுவரையில் பொதுப் புத்தியில் உருவாகியுள்ள பிம்பங்களைத் தகர்த்துப் புதியதான பிம்பங்களை உருவாக்குவதில் புத்தகங்களுக்கு நிகர் எதுவுமில்லை.

ஒருநிலையில் அரசியல்ரீதியில் அளப்பரிய ஆற்றல்மிக்க புத்தகங்கள், இன்னொரு நிலையில் மனிதனை பண்புரீதியில் நன்னெறிப்படுத்தும் மேன்மையான பணியையும் செய்கின்றன.

கி.பி. 19 ஆம் நூற்றாண்டு வெளியான தமிழ்ப் புத்தகங்கள், ஓரளவு கல்வியறிவு பெற்ற தமிழர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட முயன்றன. 1910 ஆம் ஆண்டு ஆ.சிங்காரவேலு முதலியார் வெளியிட்ட ‘அபிதான சிந்தாமணி’ நூல் ஒப்பீடு அற்றது. பெ.தூரன் தயாரித்த ‘கலைக்களஞ்சியம்’ (1948-1968) இன்றளவும் பிரமிப்பைத் தரக்கூடியது.

ம. சிங்கார வேலர், தந்தை பெரியார், மயிலை சீனி வேங்கடசாமி, வெ. சாமிநாத சர்மா, உ.வே. சாமிநாத ஐயர் போன்ற காத்திரமான சிந்தனையாளர்களின் கட்டுரை நூல்கள், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழர் வாழ்க்கையில் அழுத்தமான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.

இத்தகைய சாதனையாளர்களின் பிரதிபலனை எதிர்பார்க் காத கடும் உழைப்பினால்தான் தமிழர்களின் அடையாளம் இன்று உலகமெங்கும் பரவியுள்ளது.

இளைய தலைமுறையினரிடம் அழுத்தமான பாதிப்புக்களை ஏற்படுத்திடும்வகையில் பல்துறை சார்ந்த கட்டுரை நூல்கள் தமிழில் எழுதப்பட வேண்டியது அவசியம்.

அந்த வரிசையில் இறையன்பு தொடர்ச்சியாக எழுதுகிற கட்டுரை நூல்கள் கவனத்திற்குரியன.

இறையன்பு எழுதியுள்ள பத்தாயிரம் மைல் பயணம், வையத் தலைமை கொள், மூளைக்குள் சுற்றுலா, இலக்கியத்தில் மேலாண்மை, மேலே… உயரே…உச்சியிலே!, போர்த் தொழில் பழகு, இலக்கியத்தில் விருந்தோம்பல், நட்பெனும் நந்தவனம், தலைமைப் பண்புகள், படிப்பது சுகமே, ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறைகளும் போன்ற நூல்கள் தமிழர் வாழ்க்கையில் அதிர்வுகளை உருவாக்கிடும் வல்லமையுடையன.

நாவல், சிறுகதை, கவிதை எனப் படைப்புரீதியில் செயல்படுகிற இறையன்பு பன்முக ஆளுமையாளர். இதுவரை நூற்றுக்கும் கூடுதலான புத்தகங்களை எழுதியுள்ள இறையன்பு, தனது கட்டுரை நூல்களின்மூலம் தமிழரின் கருத்தியல் சார்ந்த அன்றாட வாழ்க்கையில் பாதிப்புக்களை உருவாக்கிட முயலுகிறார்.

ஒவ்வொரு புத்தகமும் ஏதோ ஒருவகையில் தமிழ்ச் சமூகத்தில் ஆழமான தாக்கத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையுடன் இன்றையன்பு தொடர்ந்து இயங்குகிறார்.

வைணவ ஆழ்வாரான இராமனுஜர், தான் அறிந்த உண்மையைப் பிறருக்குச் சொல்வதால், தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்தும், திருக்கோட்டியூர் பெருமாள் கோவில் கோபுரத்தின்மீது நின்று, தகவலை அறிவித்தார் என்ற புனைகதை சாதாரணமானது அல்ல.

ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களுக்கு இடையில் தகவல் பரிமாற்றம் வெற்றிகரமாக நடைபெறுவதன் காரணமாகத் தான் சமூக இயக்கம் சாத்தியமாகிறது.

சமூக அக்கறையுடன் செயல்படுகிற தமிழகச் சிந்தனையாளர்கள் தாங்கள் அறிந்திட்ட முக்கியமான தகவல்களைப் பிறருடன் பகிர்ந்திடும் மனநிலை, தமிழ்ச் சமூக உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அந்த மரபைத் தமிழ்ச் சித்தர் மரபு என்று சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டியுள்ளது. அந்தப் பாரம்பரியமான வழியில் இறையன்பு, தான் அறிந்திட்ட விஷயங்களை முன்வைத்துத் தொடர்ந்து காத்திரமான புத்தகங்களாக எழுதிக்கொண்டி ருக்கிறார்.

தமிழ்நாட்டில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள இளைஞன் அல்லது இளைஞியின் மனதில் கல்வி, சமூகம், வேலை குறித்த சின்ன அதிர்வுகளை உருவாக்குவதுதான் இறையன்புவின் நோக்கமாக இருக்கிறது.

பொதுவாக ஒருவரின் தனிப்பட்ட ஆளுமை அல்லது சுய முன்னேற்றம் குறித்து எழுதப்படுகிற நூல்கள் வெகுஜன ரீதியில் பிரபலமடைகின்றன. இத்தகைய நூல்கள் ஒருவரின் பண்பு உருவாக்கத்தில் பங்கு வகிப்பதில்லை.

சுயநலத்தை முன்னிலைப்படுத்தி, ஊக்குவிக்கிற பெரும்பா லான சுய முன்னேற்ற நூல்கள், தனிமனிதனைச் செம்மை யாக்குவது இல்லை. இறையன்புவின் பெரும்பாலான நூல்கள், தமிழர் வாழ்க்கை மேம்பாடு அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூக மாற்றத்தின் பின்புலத்தில் தனிமனிதன் மேன்மையான குணங்களுடன் இயங்கிட இறையன்புவின் நூல்கள் வழி காட்டுகின்றன. ’புத்தகங்கள் பயன்பாட்டுக்குரியவை’ என்ற நூலகவியலின் முதல் விதி, இறையன்புவின் நூல்களுக்குப் பொருந்தும்.

இறையன்புவின் முக்கியமான நூல்களை வாசித்துவிட்டுப் பிரதியில் இருந்து உடன் வெளியேறிட இயலாது. அந்தப் புத்தகத்தின் வரிகள், வாசக மனதில் ஏதொவொரு மாற்றத்தை உருவாக்குகின்றன.

சுருங்கக்கூறின் வாழ்வின் இக்கட்டான தருணங்களில் இறையன்புவின் புத்தக வரிகள் நினைவிலாடும் இயல்பு டையன;  நெறிப்படுத்துகின்றன.

இறையன்பு முன்னர் எழுதியுள்ள காத்திரமான நூல்களின் தொடர்ச்சியாகத்தான் தகவல் தொடர்பை முன்னிறுத்தும் ’என்ன பேசுவது? எப்படி பேசுவது?’ என்ற ஆய்வு நூல் உள்ளது. ஒருபோதும் முடிவற்ற தகவல்கள், சம்பவங்கள், நிகழ்வுகள், படைப்புகள் போன்றவற்றை விமர்சனத்துடன் இறையன்பு நூலில் பதிவாக்கியுள்ளார்.

நூலை வாசிக்கிற வாசகர்களை முன்னிறுத்திக் கதைத்திருப்பது, ஒவ்வொரு பக்கத்திலும் பதிவாகியுள்ளது. பொதுவாகத் தகவல் தொடர்பில் என்ன இருக்கிறது என்று பலரும் சாதாரணமாகக் கடந்து செல்கிற சூழலில், சமூகத்தின் இயக்கத்தில் எப்படியெல்லாம் கருத்துப் பரிமாற்றம் வினையாற்றுகிறது என்பதை எளிய மொழியில் நூலில் விளக்கியிருப்பது காலத்தின் தேவை.

குறிப்பாக இளைய தலைமுறையினர் தகவல் தொடர்பு மூலம் அடைகிற உச்சம் குறித்து நூல் மீண்டும் மீண்டும் கருத்துக்களை முன்வைத்துள்ளது. கருத்தியல் ரீதியில் ஆழமும் அகலமும் என்று குறிப்பிடப்படுகிற சொற்களுக்கு அடையாளமாக இந்த நூல் உள்ளது.

ஏற்கெனவே அறிந்த தகவல்கள் எனினும் அவற்றை விவரிக்கிற பார்வைக் கோணம் மாறுபடுவதால், புத்தகம் வாசிப்பில் சுவராசியமாக இருக்கிறது. இறையன்பு பல்வேறு இயல்கள் மூலம் விவரித்துள்ள நூலில் கடந்த காலச் சமுதாயமும் வரலாறும் பின்னிப் பிணைந்துள்ளன.

வேறுபட்ட கருத்தியல்கள் பின்புலத்தில் விரிந்திடும் இறையன்புவின் தகவல் உலகு, முடிவற்று நீள்கிறது. இறையன்புவிற்கு தான் வாழும் சமூகம் / சூழல் குறித்த அக்கறையும் ஈடுபாடும் புத்தகத்தில் விரிவாகப் பதிவாகியுள்ளன.

இன்றைய உலகமயமாக்கல் காலகட்டத்தில் நிலவுகிற நுகர்பொருள் பண்பாட்டின் மேலாதிக்கம் காரணமாக எல்லாம் சந்தைக்கானதாக மாற்றப்படுகிற சூழலில், இளைய தலைமுறையினர் எதிர்கொள்கிற நெருக்கடிகள் ஏராளம்.

கல்வி, வேலை வாய்ப்பு, குடும்பம் என்ற நிலையில் ஒவ்வொரும் ஓட வேண்டியுள்ளது.

இன்னொருபுறம் பெற்றோர் தங்களுடைய விருப்பத்தையும் எதிர்பார்ப்பையும் பிள்ளைகள் மீது சுமத்துகின்றனர். எது அசலானது என்ற புரிதல் இல்லாமல் காட்சி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவை ஏற்படுத்துகிற தாக்கம் காரணமாக நகல்களின் உண்மைகளை நம்புகிற இளைஞர்கள் தங்களுக்குள் சுருங்கியுள்ளனர்.

முதல் வகுப்பில் முதல் ரேங்க் என்று பயிற்றி வளர்க்கப்பட்ட குழந்தைகள், வாலிபப் பருவத்தில் சிறிய தோல்வி அல்லது பின்னடைவு காரணமாகத் துவண்டு போகின்றனர்.

தன்னுடைய வாழ்கையைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் மனப்பான்மை இல்லாத வளர்ப்புமுறை காரணமாகக் குடும்ப வாழ்க்கையில் துணைவருடன் ஒத்துப்போக முடியாதநிலை ஏற்படுகிறது.

கல்வி மட்டுமல்ல வாழ்க்கை, அதற்கப்பால் ஒவ்வொருவரும் அறிந்திட வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன என்ற புரிதல், இங்குப் பலருக்கும் இல்லை.

இத்தகைய சூழலில் ’எதுவும் பொருட்டல்ல எதிரே பார் உனக்கான உலகம் பரந்திருக்கிறது’ என்ற நம்பிக்கையை இளைய தலைமுறையினரிடம் விதைத்திட முயலுகிறார், இறையன்பு.

இதனால்தான் தகவல் பரிமாற்றம் குறித்த பேச்சுகளை முன்வைத்துச் சொல்லாடல்களை உருவாக்கியுள்ளார். உலகை ஆட்டிப் படைக்கிற தகவல் பெருவெடிப்பின் பின்னர் இலக்கற்று ஓடிக்கொண்டிருக்கிறவர்கள், ஒருகணம் யோசிக்கும் வகையில் நூல் எழுதப்பட்டுள்ளது.

தகவல் பறிமாற்றம் பற்றிய இறையன்புவின் நூல் பிரமாண்டமான தகவல் களஞ்சியம். நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் நிரம்பி வழிகிற தகவல்கள் முடிவற்று நீள்கின்றன.

இறையன்புவின் நுண்மாண் நுழைபுலம் சார்ந்த அறிவுத்திறனின் வெளிப்பாடாக நூல் உள்ளது.

ஆங்கிலத்தில் வெளியாகிற பல்துறை சார்ந்த கட்டுரை நூல்களுடன் ஒப்பீட்டால் தமிழில் வெளியாகிற பல்துறை நூல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

இந்நிலையில் கடின உழைப்பின்மூலம் தான் கண்டறிந்த அரிய தகவல்களையும் கண்டுபிடிப்புகளையும் அப்படியே எழுத்தில் அள்ளிக்கக் கொடுக்கிற மனம் இறையன்புவிற்கு இயல்பிலே இருக்கிறது.

அவருடைய மொழி நடை கவர்ச்சிகரமானது; வாசிப்பில் ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடியது. எதிரே இருக்கிற வாசகனை முன்னிறுத்தி விவரித்திடும் பேச்சும் எழுத்தும் முக்கியமானவை.

வழக்கமான அறிவுரைகள் இல்லாமல், தகவல்களின் முக்கியத்துவத்தைச் சொல்லியிருப்பது நூலின் தனித்துவம். எழுத்துகளின் வழியாகத் தன்னைச் சுற்றியிருக்கிற உலகு குறித்த விசாரணையைத் தொடங்கியுள்ள இறையன்பு பன்முகக் கலைஞர்.

1995 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பல்கலைக்கழக மான்யக் குழுவின் சார்பில் நடைபெற்ற கல்லூரி நூலகர்களுக்கான 28 நாட்கள் புத்தொளிப் பயிற்சியில் பங்கேற்றேன்.

தகவல் தொடர்பை முன்வைத்து நடந்த பயிற்சியில் கேள்விப்பட்ட இணையம், கணினிப் பயன்பாடு போன்ற பேச்சுகள் வியப்பை அளித்தன. அப்பொழுதுதான் முதன்முதலாக மின்னஞ்சல், நெட் மையம், ஏடிஎம் இயந்திரம், தேடுபொறி, இணையம், இ-பத்திரிகை போன்ற சொற்களைக் கேட்டேன்.

எதிர்காலத்தில் தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தை மேலாதிக்கம் செய்கிறவர், உலகின் முதல் பணக்காரர் ஆவார் என்று கேள்விப்பட்டதை என்னால் நம்ப முடியவில்லை.

தகவல்கள்தான் உலகை ஆளப்போகின்றன என்பது புதிராகத் தோன்றியது. ஆனால், ஏழெட்டு ஆண்டுகளில் தகவல் தொடர்பு குறித்துப் பயிற்சியில் கேள்விப்பட்டவை எல்லாம் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்துவிட்டன.

யோசிக்கும் வேளையில் தகவலைத் தயாரித்து, சரியான முறையில் விநியோகிக்கத் தெரிந்தவர்கள் முக்கியமானவர் களாக மாறியிருப்பதை அறிய முடிகிறது.

இந்நிலையில் இறையன்புவின் தகவல் பரிமாற்றம் பற்றிய நூலின் முக்கியத்துவம் புலப்படுகிறது.

இறையன்புவின் ‘எப்படி பேசுவது? என்ன பேசுவது? என்ற நூல் தகவல் பரிமாற்ற வரலாறு, தகவல் தொடர்பில் சிறக்க, மேடையில் முழங்கு என்று மூன்று தொகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

சமிக்ஞை, எழுத்து, உரையாடல், நேர்காணல், மேடைப் பேச்சு போன்ற அடிப்படையான தொடர்பியல் கூறுகளை முன்வைத்துத் தகவல் பரிமாற்றம் விவரிக்கப்பட்டுள்ளது.

புத்தகத்தின் என்னுரையில் “சொற்களால் மனிதன் உயர்ந்து நின்றான்” என்ற இறையன்பு குறிப்பிடுவது மொழியைக் கையாளுவதுடன் தொடர்புடையது.

சொற்களைக் கையாளும் முறை, சொற்களைச் சூழல் அறிந்து பயன்படுத்த வேண்டியதன் அவசியம், தகவல் பரிமாற்றத்தில் சொற்களின் பயன்பாடு, தகவல் மேலாண்மையில் சொற்களின் இடம் என்ற பின்புலத்தில் நூல் விரிந்துள்ளது.

இரு மனித உயிர்களுக்கு இடையில் நிகழ்ந்திடும் தொடர்பின் விளைவான பேச்சு பற்றிப் பலரும் அக்கறைகொள்வது இல்லை.

பேச்சில் என்ன இருக்கிறது என்று பலரும் கடந்து போகிற சூழலில் சமூக வாழ்க்கையில் பேச்சு முக்கியமானது என்று இறையன்பு விவரித்துள்ளார்.

தகவல் பரிமாற்றம் வெற்றிகரமாக நடைபெற வேண்டியதன் தேவையை முன்வைத்து விரிந்துள்ள புத்தகம், வாசிப்பின்போது இயல்கள்தோறும் இவ்வளவு தகவல்களா? என்று யோசிக்க வைக்கின்றன; பிரமிப்பை ஏற்படுத்து கின்றன.

நூலின் முதல் தொகுதியான ‘தகவல் பரிமாற்ற வரலாறு’ பல்வேறு தகவல்களின் தொகுப்பாகியுள்ளது.

நூலின் தொடக்கத்தில் வாயில்லாப் பிராணிகள் என்று கருதப்படுகிற பூச்சிகள், விலங்குகள் பறவைகள் போன்ற உயிரினங்கள் தங்களுக்குள் தகவலைப் பரிமாறிட வாசனை, முகர்தல், சைகை, ஒலி, வண்ணம், நடனம், கடித்தல், பாட்டு மூலம் எவ்வாறெல்லாம் பயன்படுத்துகின்றன என்ற விவரிப்பு இடம் பெற்றுள்ளது.

தகவல் தொடர்பில் முக்கியமானது மொழி. குழந்தையின் இயல்பிலே மொழியைக் கற்றிடும் ஆற்றல் பொதிந்திருக்கிறது. விலங்குகள் ஒலிக்குறிப்புகள் மூலம் மொழியை ஓரளவு பேசிடவும் புரிந்திடவும் ஆற்றல் பெற்றிருப்பினும்,  நிகழ் காலத்தில் வாழ்கின்றன.

மனிதன் மட்டும்தான் இறந்த கால நினைவுகளுடன் எதிர்காலம் குறித்த பிரக்ஞையுடன் வாழ்கிற ஆற்றலுடன் இருப்பதால், மொழி இன்றியமையாதது என்று வரையறுக்கிறார் இறையன்பு.

மொழியானது தனிமனிதனைச் சமூகத்துடன் ஒத்திசைந்து வினையாற்றுவதால் ஆறாவது புலன் என்று கருதப்படுகிறது.

வெறுமனே மொழிதான் என்று எளிதில் கடந்து போய்விடாமல் அதற்குப் பின்னர் பொதிந்திருக்கிற மொழி அரசியல் கவனத்திற்குரியது.

அறிவியல் கண்டுபிடிப்புகள் வேளாண்மை தொடங்கிச் சமூக மாற்றத்தில் பெரிதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இரு மனிதர்களுக்கு இடையில் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்பட்ட மொழியானது, அரசு உருவாக்கத்தில் அதிகாரத்தைப் பரப்பியது.

அறிவியல் கண்டுபிடிப்புக் கருவிகளான அச்சு ஊடகம், மின்னணு ஊடகம் போன்றவை மொழியின் வழியாக ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோரிடம் தகவல்களைப் பரப்பின. பேச்சு என்பது மறுபேச்சுக்களாக விரிந்தது.

மொழி எப்படி உருவானது? விலங்குகளின் மொழிக்கும் மனிதனின் மொழிக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. மொழிதான் சமூகமாக மனிதர்கள் கூடி வாழ்கிற முறையை உருவாக்கியது. தாய்மொழியைக் கற்றல் எளிது; இயறகையானது.

அதிக எண்ணிக்கையில் மொழிகளைக் கற்பதனால் மூளையின் இயக்குதிறன் அதிகரிக்கிறது என்ற தகவல் முக்கியமானது. ஒவ்வொரு மொழியும் பண்பாட்டுடன் தொடர்புடையது என்ற இறையன்புவின் விவரிப்பில் மொழி அரசியல் பொதிந்துள்ளது.

தகவல் புரட்சி முதலில் பேச்சின் மூலமாகவும் பின்னர் எழுத்தின் மூலமும் நிகழ்ந்தது. பேச்சு மொழியின் அடுத்த நிலை எழுத்து. காலங்கடந்த சூழலில் வரலாற்றைச் சாத்தியப்படுத்துகிற எழுத்துகளின் பயன்பாடு அரசியல் பின்புலமுடையது.

எழுத்து எப்படியெல்லாம் ஒவ்வொரு நாட்டிலும் வடிவெடுத்தது என்று விரிவான தகவல்கள் நூலில் இடம் பெற்றுள்ளன.

எழுத்தைப் பதித்திட கல், களிமண் பலகை, பாப்ரஸ் மரப்பட்டை, பனையோலை, விலங்குகளின் தோல், உலோகத் தகடுகள் போன்றவை பயன்பட்டாலும் காகிதம் கண்டறியப்பட்டது முக்கியமான திருப்புமுனை.

பின்னர் அச்சியந்திரம் தகவல் புரட்சிக்கு வித்திட்டது. கருத்துக்களைப் பதிவாக்கிட எழுத்துகள் கண்டறியப்பட்டதும்,  அவை ஊடகங்களில் பதிவானதும் சமூக  வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன.

தகவல் என்ற சொல்லின் பின்னர் பொதிந்திருக்கிற எழுத்தின் கதை பற்றிய இறையன்புவின் விவரிப்புகள் சுவராசியமானவை.

காலப்போக்கில் பேச்சுகளின் பதிவாக விளங்கிய எழுத்துகள், சொற்கள், தொடர்கள் போன்றவை சமூக வளர்ச்சியில் முக்கியப் பங்காறியுள்ளன. குறிப்பிட்ட குழுவினருக்குள் புழங்கிடும் மொழியானது ரகசிய மொழி எனப்பட்டது.

அறிவியலின் வளர்ச்சியினால் கண்டுபிடிக்கப்பட்ட தந்தி அனுப்பும் கருவி, வானொலி, ரேடார், தொலைக்காட்சி, கணினி, இணையம் எனத் தகவல்தொடர்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதனால் தகவல் பரிமாற்றம் இன்னும் துரிதமானது.

எழுத்தின் மூலம் சமூகத்தில் நிலவிடும் தகவல் பரிமாற்றம் பற்றி இறையன்புவின் விவரிப்புகள் கவனத்திற்குரியன. தொடக்கத்தில் எழுத்தினாலான தகவல்களைக் கடிதங்களாக அனுப்பிட புறாக்கள் பயன்பட்டன.

பொதுவாக ஒருவரின் எண்ணங்களைப் பதிவாக்கிடும் கடிதங்கள், தகவல்களை இன்னொருவரிடம் கொண்டுபோய்ச் சேர்த்தன.

கடிதம் என்பது ஒருவரின் இதயம். இலக்கியத்தில் கடிதங்கள் என்ற தலைப்பில் சிலப்பதிகாரம் காப்பியத்தில் இடம்பெற்றுள்ள கடிதங்களைப் பற்றிய தகவல்கள், பண்டைத் தமிழரின் தகவல் பரிமாற்றத்திற்குச் சான்றுகள்.

அலுவலகத் தகவல் பரிமாற்றக் கடிதங்கள் பற்றிய விளக்கங்கள், அலுவலகங்களில் பணியாற்றுகிறவர்களுக்குக் கையேடாக விளங்குகிறது. அலுவலகக் கடிதங்களை எப்படி எழுதுவது? எப்படி எழுதக்கூடாது என்ற தகவல்கள் நுணுக்கமானவை.

நவீனத் தமிழிலக்கியப் படைப்புகள் பற்றிய இறையன்புவின் பருந்துப் பார்வை, தகவல் தொடர்பில் சிறந்திடவும் ஆற்றலான மேடைப் பேச்சாளாராக விளங்கிட முயலுகிறவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது.

இறையன்புவின் பழந்தமிழ் இலக்கியப் புலமை, பண்டைய இலக்கியப் படைப்புகளில் இடம் பெற்றுள்ள தகவல் பரிமாற்றக் கூறுகளை விவரிப்பதில் வெளிப்பட்டுள்ளது.

தகவல் பரிமாற்றம் பற்றிய பின்புலத்தில் திருக்குறளை முன்வைத்து நான்கு இயல்களும், கம்பராமாயணத்தை முன்வைத்து ஆறு இயல்களும், நீதி நூல்களை முன்வைத்து மூன்று இயல்களும், சங்க இலக்கியம், சிலப்பதிகாரத்தை முன்வைத்து ஒரு இயலும் எழுதப்பட்டுள்ளன.

மூன்று இயல்களில் சேக்ஸ்பியரின் நாடகங்களில் இடம் பெற்றுள்ள தகவல் தொடர்பு அம்சங்கள் விவரிக்கப் பட்டுள்ளன.

தகவல் தொடர்பியல் என்ற புதிய துறையின் கருத்தியலுடன் பண்டைய இலக்கியப் படைப்புகளைப் பொருத்தி விளக்கியிருப்பது, இறையன்புவின் பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான ஒத்திசைவான தேடுதலின் வெளிப்பாடு.

வரலாற்றில் காலந்தோறும் முக்கியமான ஆளுமைகள் நிகழ்த்திய சொற்பொழிவுகள் வரலாற்றை மாற்றியமைத்துள்ளன. சொற்பொழிவுகளின் வரலாறு பற்றிய இயல், தகவல் தொடபின் முக்கியத்துவத்தைப் புலப்படுத்துகிறது.

பண்டையக் கிரேக்கம், ரோமாபுரி, இந்தியாவில் சமயக் கருத்தியல் வாத வரலாறு, தமிழ்கத்தில் வாதப் பிரதிவாதம், லாவணிக் கச்சேரி, தமிழகப் பட்டி மண்டபங்கள், சொற்பொழிவுகள் என விரிந்திடும் தகவல்கள், பேச்சுகளின் இடத்தை அறிந்திட உதவுகின்றன.

சொற்பொழிவுகள் பற்றிய இயல் எனக்கு நினைவூட்டிய காட்சிகளை இங்குப் பகிர்ந்திட தோன்றுகிறது. தமிழ்நாட்டில் தொண்ணூறுகளின் முற்பகுதியில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பாவதற்கு முன்னர் மேடைப் பேச்சுகள் பிரபலமாக விளங்கின.

கட்சி மாநாடுகள், தெருக்கூட்டங்கள், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் நடைபெற்ற சொற்பொழிவாளர்களின் மேடைப் பேச்சுகளைக் கேட்பதற்கு மக்கள் உற்சாகத்துடன் திரண்டனர்.

ஒருவகையில் பெரும்பாலோனாருக்குப் பொழுதைப் போக்கிடவும் சொற்பொழிவுகள் பயன்பட்டன. இன்னொரு புறம் மக்களிடம் சமூக, அரசியல் விழிப்புணர்வை அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் ஏற்படுத்தின.

என்னுடைய அனுபவத்தில் காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, ஏ.வி.பி. ஆசைத்தம்பி, கண்ணதாசன், ஜெயகாந்தன் போன்றோரின் மேடைப் பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன். அவை, கேட்போரை ஒருவகையில் வசியம் செய்தன.

அரசியல் கட்சிகள் நடத்துகிற பொதுக்கூட்டங்களில் கட்சித் தலைவர்களின் சொற்பொழிவைக் கேட்பதற்குப் பல்லாயிரக் கணக்கில் மக்கள் திரள் கூடியது.

எழுபதுகளில் மதுரை மாநகரில் அரசமரம் பிள்ளையார் கோவில் விழாவின்போது இரவு பத்து மணிக்கு நடைபெற்ற குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்ற உரைகளைக் கேட்க மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டதைப் பார்த்திருக்கிறேன்.

சமயச் சொற்பொழிவாற்றும் திருமுருக கிருபானந்த வாரியர், புலவர் கீரன் போன்றோர் ஏழு நாட்கள் தொடர்ந்து பேசுகிற தொடர் சொற்பொழிவுகளைக் கேட்பதற்குக் கணிசமான கூட்டத்தினர் கூடுவார்கள்.

திரு.வி.க., ஜீவா, திருக்குறள் முனுசாமி, எஸ். ராமகிருஷ்ணன் போன்ற சொற்பொழிவாளர்களின் நயமான பேச்சுகளில் இடம் பெற்ற கருத்துக்கள் மக்களை ஈர்த்தன.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு போன்ற தலைவர்களின் சொற்பொழிவுகள், மக்களுக்கு எழுச்சியைத் தந்தன.

சாக்ரடீஸ், நெப்போலியன், திலகர், நேரு, பெரியார், அறிஞர் அண்ணா, காமராசர் போன்ற தலைவர்கள் ஆற்றிய உரைகளின் முக்கியமான பகுதிகள் நூலில் தரப்பட்டுள்ளன.

அந்தப் பேச்சு வரிகள், இன்றைய இளைய தலைமுறையினர் அறியாதவை.

’வாளின் முனையைவிடப் பேனா முனை கூர்மையானது’ என்ற பிரெஞ்சுச் சிந்தனையாளர் வால்டேரின் வரிகளைத் தமிழகத்தின் திராவிட இயக்க அரசியல் தலைவர்கள் நம்பினர்; வெற்றியும் அடைந்தனர்.

பெரியாரின் பகுத்தறிவு, சுயமரியாதைப் பேச்சுகள் தமிழர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தின.

நூலின் இரண்டாம் தொகுதியான ’தகவல் தொடர்பில் சிறந்திட’ வில் பல்வேறு வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. தகவல் பரிமாற்றத்தில் முக்கியமான அம்சங்கள் பின்வருமாறு:
* அலைபேசி உரையாடல், கருத்தரங்கு, மேடைப் பேச்சு, அலுவலகக் கூட்டம், நடைபாதை வியாபாரியின் விற்பனைக் குரல்.

*மேடைப் பேச்சில் பேச்சாளர், அவையினரைப் பற்றிய புரிதல், கூட்டத்தினருக்கு மதிப்புத் தருதல், நம்பிக்கையுடன் பேசுதல்.

*தகவலின் தன்மை, தகவலின் மொழி தெளிவாக இருத்தல், தகவல் பரிமாற்ற ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள்.

*உரையாடல், தனிமனிதரீதியில் உரையாடல், உரையாடலின் நுணுக்கங்கள், உரையாடல் சிறந்திட வழிகள், பழகுமுறைகள், அணுகுமுறைகள்.

*தகவல் பரிமாற்றத்தில் அட்டைகள்.

* நேர்காணல், நேர்முகத் தேர்வ, உடை, தோற்றம், உடல்மொழி, நம்பிக்கையான உரையாடல்.

*அமைதிப் பேச்சுவார்த்தைகள், விவாதங்கள், பிரச்சினையை ஆராய்தல் எதிரெதிர் கோணங்கள், சமாதானத்தின் வழிகளை ஆராய்தல், விவாதித்தல், அமைதி உடன்படிக்கை.

*தலைமைப் பண்பும் தகவல் தொடர்பும், கவுன்சிலிங் எனப்படும் ஆலோசனை வழங்குதல்.

*உடல்மொழியின் பன்முகத்தன்மைகள், தேவைகள், சக மனிதர்களைப் புரிந்துகொள்வது, இணக்கமாகச் செயல்படுவது, நாடுகள்தோறும் மாறுபடும் உடல்மொழிகள், இந்தியாவில் உடல்மொழிப் பாகுபாடுகள்.

மூன்றாவது தொகுதியான ’மேடையில் முழங்கு’ இடம் பெற்றுள்ள முக்கியமான தகவல்கள் பின்வருமாறு:

*சிறந்த சொற்பொழிவின் உள்ளடக்கம், என்ன பேசுவது என முன்கூட்டியே தயாரித்தல், எந்தவகையான பார்வையாளர்கள் என அறிதல், தலைப்பைத் தேர்ந்தெடுத்தல், உரையின் தொடக்கம், மேடைப் பேச்சின் தொடக்கம், நகைச்சுவை, சுவராசியம், பேசுகிற முறை, நேர மேலாண்மை, மாற்றுக் கருத்துகள், யாரிடம் பேசுகிறோம் எனற புரிதலுடன் பேசுதல்.

*மேடையில் நகைச்சுவை, மேடையில் கதை சொல்லல், இதிகாசக் கதைகள், நவீன இலக்கியக் கதைகள், ஷேக்ஸ்பியரின் கதைகள், சம்பவங்கள், ஆளுமைகளில் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள்.

*மேடைகள் பலவிதம், தலைமை உரை, மணவிழா உரை, பாராட்டுரை.

*மேடையில் அணிந்திடும் உடை, மேடை நடுக்கம், மேடை நாகரிகம், பேச்சாளர்கள் பலவிதம்.

தகவல் பரிமாற்றமும் மேடைப் பேச்சும் குறித்து இறையன்பு விவரித்துள்ள விஷயங்களைப் பற்றிப் பருந்துப் பார்வையில் இங்குக் குறிப்பிட்டுள்ளேன்.

ஆர்வமுடையவர்கள் முழு நூலையும் வாசிக்கும்போது, தகவல் வெள்ளத்தில் நீந்திடலாம்.

தகவல் பரிமாற்றத்தை முன்வைத்து இறையன்பு விவரிக்கிற பதிவுகள், சுய அனுபவம் சார்ந்த நிலையில் ரசனையைத் தூண்டுமாறு உள்ளன.

அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்கிற பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்கின்றன; வாசிப்பின்மூலம் கிடைக்கிற புரிதல், வாசகனை அறிவார்ந்த தளத்திற்கு இட்டுச் செல்கின்றன.

நூலின் எந்தவொரு இடத்திலும் வறட்டுப் போதனைகளைப் போதிக்காமல், வாழ்க்கை குறித்த விசாரனையைத் தொடங்கிடுமாறு ஊக்கப்படுத்தியிருத்திருக்கும் முறை, தனித்துவமானது.

ஓரளவு வாசிப்புப் பழக்கமுடையவர்களும் வாசித்திடுமாறு தகவல்களைத் தொகுத்து வகுத்து, விரித்து, விளக்கி, எளிய மொழியில் நூலாக்கியுள்ளார், இறையன்பு.

தகவல் பரிமாற்றம், பேச்சுக் கலை என்ற வட்டத்திற்குள் சுழன்றாலும் திருக்குறள், சிலப்பதிகாரம், ஷேக்ஸ்பியரின் நாடகங்கள், கம்பராமாயணம் எனப் பரந்துபட்ட இலக்கிய அறிவுடன் விளக்கியிருப்பது இறையன்புவின் புலமைக்குச் சான்று.

பண்டைய கிரேக்கம், ரோமாபுரி வரலாறு மட்டுமின்றி, உயிரியல் உள்ளிட்ட அறிவியலுடன் விவரித்திருக்கும் தகவல்கள், புத்தகத்திற்கு வளம் சேர்க்கின்றன.

இலக்கியம், வரலாறு, அறிவியல், அரசியல், சமூகவியல், மொழியியல் என்று பல்வேறு விஷயங்கள், தகவல் பரிமாற்றம் பற்றிய நூல் உருவாக்கத்தில் காத்திரமாகப் பயன்பட்டுள்ளன.

பல்துறைப் புலமையுடன் எழுதுகிற ஆற்றலில் இறையன்புவுக்கு நிகராகச் சொல்லிட ஆளுமைகள், தற்சமயம் தமிழில் யாருமில்லை என்று சொல்வதில் எனக்குத் தயக்கம் எதுவுமில்லை.

கருத்தியல்ரீதியில் தமிழக இளைஞர்களுக்கு ஆதர்சமாக விளங்குகிற இறையன்பு, ஒருபோதும் முடிவற்ற ஆர்வத்துடன் காத்திரமான புத்தகங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்.

அவருடைய சமூக அக்கறையுள்ள எழுத்துகள், தமிழர் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

எதிர்காலத்தில் பல்கலைக்கழகம், கல்லூரி அளவில் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், தகவல் தொடர்பியல், இதழியல், காட்சி ஊடகம், மேலாண்மையியல் போன்ற பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயில்கிற மாணவர்களுக்குப் பாட நூலாக ’என்ன பேசுவது? எப்படி பேசுவது?’ என்ற நூல் விளங்கிடும்.

குறிப்பாக இந்த நூல், பேராசிரியர்களுக்கு வகுப்பறையில் சுவராசியமாகப் பாடத்தை நடத்திடுவதற்குக் கையேடாக உதவும்.

தகவல் தொடர்பை முன்வைத்துக் காட்சி ஊடகங்களில் சேர்ந்து பணியாற்றிட முயலுகிறவர்கள், மேடைப்பேச்சில் வெற்றிகரமான பேச்சாளராக விரும்புகிறவர்கள், தகவல் பரிமாற்றத்தை மேலாண்மை செய்கிறவர்கள் போன்றவர்களுக்கும் இந்த நூல் பயன்படும்.

தகவல் தொடர்பை முன்வைத்து இறையன்பு விவரித்திடும் பன்முகத் தகவல்கள், கிராமப்புற மாணவர்கள் எதிர்காலப் போட்டிமிகு வாழ்க்கையில் தங்களுக்கான இடத்தை அடைந்திட அடிப்படையாக விளங்கும்.

குறிப்பாகச் சக மனிதர்களை எப்படி புரிந்து பழகுவது? நேர்காணலின்போது எவ்வாறு செயல்படுவது? உடல் மொழியின் தேவை என்ன? போன்ற தகவல்கள் மூலம் நடப்புச் சமூகத்தில் பொருந்தி வாழ்ந்திட இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறது.

அதேவேளையில் ஓரளவு கல்வியறிவு பெற்றவர்களும் வெகுஜன வாசகர்களும் தங்களைப் புரிந்திடவும் தகவல்களின் இயல்பை அறிந்திடவும் நூலில் இடம் பெற்றுள்ள கருத்துகள் பெரிதும் உதவுகின்றன.

இறையன்பு, தமிழர் வாழ்க்கை மேம்பாடு பற்றிய அக்கறையுடன் எழுதியுள்ள நூல்களை வாசித்தவுடன் அடுத்துப் புதியதாக என்ன எழுதப் போகிறார்? என்ற கேள்வி எனக்குள் தோன்றும்.

அவ்வப்போது அவரை நேரில் சந்தித்து உரையாடும்போது, அவர் அடுத்து எழுதத் திட்டமிட்டிருக்கிற புத்தகம் குறித்து அறிந்தவுடன், எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவருடைய கடின உழைப்பு திகைப்பை ஏற்படுத்தும்.

“மரம் ஓய்வை நாடினாலும் காற்று தணியாது’ என்ற சீனப் பழமொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிற இறையன்புவின் எழுத்து முயற்சிகள், தொடர்கின்றன.

மேடைப் பேச்சுகள், கட்டுரைகளின் மூலம் தமிழ் கூறு நல்லுலகில் பிரபலமாக அறியப்படுகிற இறையன்பு, அடிப்படையில் நாவலாசிரியர்; சிறுகதை ஆசிரியர்.

மரணத்தை முன்வைத்து இறையன்பு எழுதியுள்ள ‘சாகா வரம்’, ‘அவ்வுலகம்’ ஆகிய இரு நாவல்களும் பேசத் தவிர்க்கிற பொருளைப் பற்றிப் பேசுகின்றன. அவருடைய புனைகதைகள் நடப்பு வாழ்க்கை குறித்த பேச்சுகளை உருவாக்குகின்றன.

இறையன்பு எழுதியுள்ள ‘மூளைக்குள் சுற்றுலா’ நூலை அச்சேறுவதற்கு முன்னர் வாசித்தபோது அறிவியல் பேராசிரியர்கள் எழுதத் தயங்கிடும் விஷயத்தை லாவகமாகக் கையாண்டது, புலப்பட்டது.

அறிவியல் மட்டுமல்ல, தான் எழுதுவதற்குத் தேர்ந்தெடுத்த புதிய விஷயம் குறித்த அவருடைய ஆழமான தேடல்தான் ஒவ்வொரு புத்தகத்திற்கும் பின்புலமாக உள்ளது.

அந்தவகையில் இறையன்பு ஓய்வறியா வாசிப்பாளர்; எழுத்தாளர்; சிந்தனையாளர். எந்தவொரு விஷயத்தையும் ஆழமாக அணுகி ஆராய்வது அவருடைய இயல்பிலே இருக்கிறது.

இதனால்தான் சங்க இலக்கியம், கிரேக்க இலக்கியம், ஆங்கில இலக்கியம், தத்துவம், அறிவியல், வரலாறு, சமூகவியல் எனப் பல்வேறு தளங்களில் அவருடைய எழுத்துத் திறன் விரிந்துள்ளது.

இறையன்புவைப் புத்தகங்கள் மூலம் ஏற்கெனவே அறிந்திருந்த நிலையில் 2005 ஆம் ஆண்டில் மதுரை நகரில் தற்செயலாகச் சந்தித்தபோது ஏற்பட்ட அறிமுகம், பின்னர் நட்பாக மலர்ந்தது.

கருத்து வேறுபாடான விஷயங்களையும்கூட எவ்விதமான மனத்தடையும் இல்லாமல் விவாதிக்கிற இறையன்புவின் நட்பு, தோழமையானது.

‘என்ன பேசுவது? எப்படிப் பேசுவது?’ என்ற அவருடைய நூலின் பிரதியை எனக்கு அனுப்பி எனது கருத்தைக் கேட்டது, அன்பின் வெளிப்பாடும் நட்பின் ஆழமும் அன்றி வேறு என்ன?

“ஒரு படைப்பாளரைப் பற்றிச் சொல்ல அவருடைய படைப்புகள் போதும்” என்ற ஜப்பானிய திரைப்பட மேதை அகிர குரோசாவா சொன்னது, இறையன்புவிற்கு முழுக்கப் பொருந்துகிறது.

தமிழ்நாடு மாநில அரசாங்க நிர்வாகத்தின் தலைமைச் செயலர் பணியில் சிறப்புடன் பணியாற்றியிருக்கிற நண்பர் வெ.இறையன்பு அவர்களுக்குப் பிரியமான வாழ்த்துகளைச் சொல்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

சமகாலத்தின் குரலாக விரிந்துள்ள ’என்ன பேசுவது? எப்படிப் பேசுவது?’ நூல், இறையன்புவின் சமூக அக்கறைக்கும் எழுத்தாற்றலுக்கும் பெருமை சேர்க்கிறது.

என்ன பேசுவது! எப்படிப் பேசுவது! -இறையன்பு,
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. பக்கங்கள்:806.விலை: ரூ 1000.

#விமர்சகர்  ந.முருகேசபாண்டியன், மதுரை, 9443861238.#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top