Close
ஜூலை 3, 2024 5:08 காலை

புத்தகம் அறிவோம்.. வாழ்க்கைப் பண்புகள்..

தமிழ்நாடு

நூல் அரங்கம்- வாழ்க்கைப் பண்புகள்

மனித வாழ்க்கையின் விசித்திரம் என்னவெனில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே நமது நினைவெல்லாம் சாவில் பதிந்துள்ளதுதான். இறந்துபோவதற்கு முன் குடும்பத்திற்கு எல்லா வசதிகளையும் செய்துவிட்டுச் செல்லவே ஒவ்வொரு வனும் விரும்புகிறான். இறந்துபோன ஒருவரைப் பற்றி விசாரிக்கையிலும் அவர் என்ன வைத்துவிட்டுப் போனார் என்று கேட்கத் தவறுவதில்லை.

காந்தியடிகள் உயிர் வாழ்ந்தபோது வாழ்க்கை வசதிகளுக்கும் செல்வத்திற்கும் துளியும் ஆசைப்படவில்லை. சிறிய வீட்டில் அடிப்படை வசதிகளுடன் மட்டுமே அவர் வாழ்ந்து காட்டியவர். அவர் இறந்தபோதும் எத்தகைய சொத்தும் விட்டுச் செல்ல வில்லை. மூக்குக் கண்ணாடி, கடிகாரம், கைத்தடி , பேனாக்கள், சில ஆடைகள், செருப்பு ஆகியவைகளை மட்டும் அவர் விட்டுச்சென்றார்.

இயேசுவிற்குப் பின் தோன்றிய மாபெரும் உலகத் தலைவராகிய இவரது மனைவியாக இருந்தும் கஸ்தூரிபாய் அன்னையார் பருத்திப் புடவையும், சங்கு வளையலும், தாலியும் தவிர எந்த ஆடம்பரமும் அறியாமல் வாழ்ந்துவிட்டு மறைந்தார்.

இவ்வளவு எளிமையான வாழ்க்கையில் ஏதேனும் சிரமம் இருந்திருப்பினும் அதைக் காந்தியடிகள் உணர்ந்ததாக அல்லது அதற்காக வருந்தியதாக் தெரியவில்லை. ஏனெனில் அவரது எண்ணமெல்லாம் ஏற்றமிகு சிந்தனையிலேயே லயித்திருந்தது. விமானத்தில் பறக்கின்றவனுக்குக் கீழே உள்ள பொருட்கள் மதிப்பிழந்தவையாகக் காட்சியளிப்பது போல், உயர் லட்சியம் கொண்டவனுக்கு மற்றவர்களுக்கு பெரிதும் விரும்பப்படும் வாழ்க்கை வசதிகள் அற்பமான வையாகத் தோன்றுகின்றன(பக். 21-22).

மனிதன் தெய்வமாகலாம் (முதல் தலைப்பு) எப்போது, எப்படி என்பதற்கு,எளிமை, வலிமை,பொறுமை, கருணை, ஈகை
நன்றியுடமை, பணிவு, ஒழுங்குமுறை, நட்பு, மனச்சாட்சி, நியாய உணர்வு, மனித நேயம், சமூக மனப்பான்மை, முன்னேற்ற ஆர்வம், தேசபக்திஆகிய 15 உயரிய பண்புகளைப் பெறும்பொழுது, இப் பண்புகளை பண்புப்பாதையின் மைல் கற்கள் என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர் டாக்டர் என். ஸ்ரீதரன்.

ஒவ்வொரு பண்புகளின் சிறப்பையும், அதைப் பெறுவது எப்படி, அதனால் ஏற்படும் நன்மைகள் யாவற்றையும் ஆசிரியர் எளிமையான உதாரணங்களுடம் படம் பிடித்துக் காட்டுகிறார் நமக்கு.

இந்நூல் முதலில் நாம் முழு மனிதனாவோம் என்ற லட்சியத் தை உங்கள் முன் வைக்கிறது. உருவத்தால் மட்டுமின்றி, நம்முடைய நடவடிக்கைகளாலும், நாம் விலங்குகளை விட உயர்ந்தவர்கள் என்பதை நிரூபித்து வாழ்ந்து காட்டுமாறு கேட்டுக்கொள்கிறது.

கவிஞர் வை. சுப்பிரமணியன் பாடியுள்ளபடி,இவனும் மனிதன் எனச் சொல்லாமல்இவனே மனிதன் என்றே பிறர் சொலும் வகையில் வாழுதல் ஒன்றே வாழ்வாம்என்ற கருத்தை இந்நூல் வலியுறுத்துகிறது என்று ஆசிரியர் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

ஒரு சாதாரண மனிதன் தன்னை சூழ்ந்திருப்பவர்கள், ஆசிரியர் சொல்வதுபோல்,மனித நிலையிலிருந்து அதிமானுட நிலை, தேவ நிலை, தெய்வநிலை என்று படிப்படியாக உயர்த்திக்கொள்ள இந்த நூலைப் பரிந்துரைக்கிறான்.

வெளியீடு-கங்கை புத்தக நிலையம்,சென்னை. 17.
044 – 24342810.ரூ.60.

# சா.விஸ்வநாதன், வாசகர்பேரவை-புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top