காதலியும்
ஒரு புத்தகத்தோடு வந்தாள்;
காதலனும்
ஒரு புத்தகத்தோடு வந்தான்;
இருவரும்
புத்தகம் பற்றியே பேசினார்கள்.
காதலைப் பற்றிப்
பேசவில்லை அவர்கள்
காதலில் புத்தக மணம்!!
இது ஈரோடு தமிழன்பனின்
“புத்தகம் என்பது … ” என்ற
கவிதை நூலில் 36 ஆம் பக்கத்தில் உள்ள கவிதை. கவிதையின் முக்கியம் கருதி பின் அட்டையிலும் போட்டுள்ளார்கள்.
இந்தக் கவிதையை வாசித்தபோது எனக்குத் தோன்றியது, தமிழன்பன், புதுக்கோட்டை ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி – டோரதி தம்பதியரை நினைத்து எழுதிய கவிதை என்று.
ஐயா கிருஷ்ணமூர்த்தியையும் அம்மா டோரதியையும் இணைத்தது “புத்தகம். ” அதனால்
தமிழ்ச் சமூகத்திற்கு கிடைத்தது
அவர்களின் கொடையான “ஞானாலயா ” ஆய்வு நூலகம்.
இந்த புத்தகத்தை ஒரு ” வீதி ” கூட்டத்தில் அன்பளிப்பாகத் தந்தார்கள். புத்தகங்களை மட்டுமே பேசும் கவிதை நூல் இது.
இந்த கையடக்க 50 பக்க நூலில் தமிழன்பனின் சிறிதும் பெரிதுமான (முன்னுரைக் கவிதையோடு) 71 கவிதையும்,தி.நடராஜனின் ஒரு கவிதையும் உள்ளது.
புத்தகம் ஏன் படிக்க வேண்டும்? எப்படிப் படிக்க வேண்டும், எதைப் படிக்கவேண்டும்? புத்தகம் என்ன செய்யும்? இவைகள்தான் இந்த நூலில் உள்ள கவிதைகளின் அடிப்படை.இதோ சில கவிதைகள் வாசிக்க.
📖புத்தகம் இரவல்
வாங்காதீர்கள்
புத்தகம் இரவல்
கொடுக்காதீர்கள்
புத்தகம் படியுங்கள்
எப்படியாவது.(பக். 9).
📖 புத்தகங்கள்
எழுதுங்கள்; இல்லாவிட்டால்
புத்தக மாயிருங்கள்.
ஒன்று
படிக்க வேண்டும்
இல்லாவிட்டால்
படிக்கப்பட வேண்டும். (பக்.30).
📖எதையும்
படிப்பதற்கு முன் படிக்க வேண்டும்
எதைப்
படிக்க வேண்டுமென்று.(பக்.13).
📖 தினம்
ஒரு வரிதான் படிக்க முடியும்
என்றால்
ஆத்திச்சூடி படி;
தினம் மூவரிகள்தான் படிக்க முடியும்
என்றால்
ஹைகூ படி;
தினம்
நாலுவரிகள்தான் படிக்க முடியும்
என்றால்
நாலடியார் படி.(பக். 30).
📖 புத்தகங்களைத்
திற;
அவை
உன்னைத் திறக்கும்.(பக்.32).
📖 ஒரு புத்தகம்
இருக்கும் இடத்தை
நூறு விளக்குகளால்
நிரப்ப முடியாது.(பக்.45).
வெளியீடு-விழிகள் பதிப்பகம், சென்னை. 9444265152, விலை-ரூ.15.
#சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை#