Close
நவம்பர் 21, 2024 3:49 மணி

புத்தகம் அறிவோம்.. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

“கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் கவைக்குதவாத வெறும் பேச்சு !
கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவேகருத வேண்டியதை மறந்தாச்சு.
-பதிபக்தி படப்பாடல்

“நான் நன்றாகப் பழகிய, என் அனுபவவாயிலாகக் கண்ட நண்பர்களின் நடைமுறைகளை ஆதாரமாக வைத்துக்கவிதை எழுதுவேன். அரை வயிற்றுக் கஞ்சி குடித்தாலும், முயற்சி, ஒற்றுமை, கட்டுப்பாடு இவைகளைக் கைவிடாமல் வாழ்க்கையோடு நிச்சலடித்துக் கொண்டு, என்றாவது ஒரு நாள், நாம் எதிர்பார்த்த வாழ்வு கிடைக்கும் என்று எண்ணி, மனங்கொண்டது மாளிகையாக மரத்தடியே வீடாக வாழும் மக்களைப் பற்றி என் உள்ளம் அதிகமாக ஆராயும் தகுதி பெற்றிருக்கிறது. -பட்டுக்கோட்டையாரின் பாட்டு பிறந்த விதம் கட்டுரையில் – 1958.

29 ஆண்டுகளே (13.4.1930 – 08 -10 – 1959)இந்த மண்ணில் வாழ்ந்து, இறவாப் புகழ் பெற்ற மகாகவிஞன், மக்கள் கவிஞர், பட்டுக்கோட்டையார் என்றெல்லாம் அன்புடன் அழைக்கப்படும், பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் செங்கபடுத்தாங்காடு கிராமத்தில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, திண்ணைப் பள்ளிக் கூடத்தில் ஒரு ஆண்டு அரிச்சுவடி கல்வி மட்டுமே கற்றவர், உணர்ச்சிமிக்க, சாதாரண மக்களும் பாடி மகிழும், கருத்துவளம், கவிதை நயம், சிந்தனைச் செறிவு, சமத்துவ நெறி சார்ந்த உன்னத பாடல்களை இயற்றியது விந்தையிலும் விந்தை. அந்த மக்கள் கவிஞரைப் பற்றி, ‘தமிழ் சினிமாவின் கதை’ என்ற ஒப்பற்ற நூலை எழுதிய , தமிழ் சினிமாவை முழுமையாக அறிந்த அறந்தை நாராயணன் எழுதிய நூல் தான் இந்த சாகித்திய அகாதமியின் “பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்” நூல்.

மக்கள் கவிஞரின் வாழ்க்கை வரலாறு, பொதுவுடமை இயக்கங்களோடு அவருக்கு இருந்த தொடர்பு, காலத்தால் அழியாத அவரது பாடல்களில் இருக்கும் சிறம்பம்சங்கள் யாவற்றையும் அழகான சித்திரமாக்கித் தந்துள்ளார் அறந்தை .மக்கள் கவிஞரை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவும் நூல்.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி.சேதுராமன், “பட்டுக்கோட்டையார் பாடல்களில் வாழ்வியல் நெறிகள் ” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். மக்கள் கவிஞருக்கு சேதுராமனின் காணிக்கை இது.

சாகித்ய அகாதமி வெளியீடு, விலை ரூ.50.

#சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top