Close
ஜூலை 8, 2024 2:03 மணி

புத்தகம் அறிவோம்… எது இந்து தர்மம்… மகாத்மா காந்தி

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- எது இந்து தர்மம்

நல்ல காலமாகவோ, அன்றியோ, இந்து மதத்திற்கென்று வரையறுக்கப்பட்ட சமயக் கோட்பாடுகள் இல்லை. எனவேதான் யாரும் என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதவாறு, உண்மையும் அகிம்சையுமே எனது கோட்பாடுகள் என்று கூறியுள்ளேன்.

இந்து மதத்தினை விளக்கிச் சொல்லுமாறு யாரேனும் என்னைக் கேட்டால் அகிம்சையின் வழி உண்மையை நாடுதல் என்பதே எனது பதில் ஆகும். கடவுளை ஒருவன் நம்பாமல் இருந்தால் கூட, அவன் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளலாம். அலுப்பு சலுப்பின்றி உண்மையைக் காணும் முயற்சியே இந்து மதம் ஆகும்.ஏனைய எல்லா மதங்களைக் காட்டிலும், இந்துமதம் சகிப்புத் தன்மை உடையது. அனைத்தையும் அரவணைத்துச் செல்லுவதே அதற்குரிய சமயக் கொள்கையாகும்-யங் இந்தியா,
ஏப்ரல் 24, 1924.(பக்.1).

இந்து தர்மம்: என்னுடைய மனைவியின் மீது எவ்விதமான பற்று வைத்துள்ளேனோ அது போன்றே இந்து மதத்தின் மீதும் பற்று உண்டு. இதற்கு மேல் இதனை என்னால் விளக்க முடியாது. உலகில் உள்ள வேறு எந்த பெண்ணையும் விட, என் மனைவியே என்னைச் செயல்படுத்து கிறாள். எனினும் அவள் குற்றமே செய்யாதவள் அல்ல. எனக்குத் தெரிந்ததைவிட மிகுந்த குறைபாடு அவளிடத்தில் உண்டு. இருப்பினும் எங்களிடையில் ஒரு பிரிக்க முடியாத பிணைப்பு உண்டு. அதே போன்றே பற்பல குறைபாடுகளும் கட்டுப்பாடுகளும் இருந்த போதிலும் இந்து தர்மத்தை நேசிக்கிறேன்-யங் இந்தியா,அக். 6, 1921.(பக்.8).

தீண்டாமை என்னும் பாவச்செயல்:

தீண்டாமைக்கு மதங்களில் ஆதாரம் இல்லை. தீண்டாமை ஒரு பாவச் செயல். சில சமயங்களில் சாத்தான் வேதம் ஓதுவதும் உண்டு. ஆயினும் எந்த மறைநூலும் உண்மைக்கும் பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்டதாக இருக்க முடியாது. அறிவை துலக்கமுற செய்வதும், உண்மையை விளக்குவதுமே மறை நூல்களின் அடிப்படை நோக்கமாகும்.

வேதங்கள் உயிர்பலிக்கு ஆதரவாகப் பேசினாலும் அறிவுறுத்தினாலும் எந்த ஒரு நல்ல குதிரையினையும் நான் பலி கொடுக்கப் போவதில்லை…. வேதங்களின் உள்ளுணர்வு என்பது, தூய்மை, உண்மை. களங்கமற்ற தன்மை, பணிவு, எளிமை, நல்ல உள்ளம், தெய்வத்தன்மை ஆகிய அனைத்தும் இணைந்ததுதான்…. ஆயினும் இந்நாட்டில் வாய்திறக்காமல் மிகப்பெரும் பணி செய்து வரும் துப்புரவுப்பணியாளர்களை தீண்டத்தகாதவர்களாக்கி அவரைக் காரி உமிழ்ந்து நாயினும் கடையராக நடத்துவது வீரச்செய்கையோ, நற்செயலோ அல்ல-யங் இந்தியா,
ஜனவரி 19, 1921.(பக். 109).

ஆசாரமான ஒரு வைணவ குடும்பத்தில் பிறந்தவனாயினும் எனக்கு விபரம் தெரிகின்ற காலந்தொட்டு தீண்டாமைக்கு எதிராக நான் இக்கருத்துகளை மேற்கொண்டு, அது பற்றிய இந்து மதத்தின் கருத்தைப் பிறவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்த போதும் எனது கருத்துகள் சரியானவையே என்று உறுதியாகத் தெரிகின்றது.

எந்த ஒரு மறைநூலும் ஐந்தாவதாக ஒரு வர்ணத்தைக் குறிப்பிடாத நிலையிலும், பிராமணனையும் பிராமணன் அல்லாதவனையும் சமமாகக் கருத வேண்டுமென்று கீதை சொல்லும் போது, இந்து மதத்தில் ஒரு களங்கமாக உள்ள தீண்டாமையை ஏன் இன்னும் வற்புறுத்த வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை.

பிராமணனும் தீண்டத்தகாதவனும் ஒன்றெனக்கருதுவதால், உண்மையான பிராமணனுக்கு (உண்மையான பிராமணன் யார்? சோ வின் எங்கே பிராமணன் வாசிக்க) கொடுக்கும் மரியாதையினை நீ கொடுக்க வேண்டாம் என்பது பொருளல்ல. அவர்கள் இருவருக்கும் நாம் செய்யும் தொண்டு ஒரு தன்மைத்தாக இருக்க வேண்டும் என்பது தான் இதன் நோக்கம். தீண்டத்தகாதவர்களின் குழந்தைகளோடும் அமர்ந்து பாடம் கற்க வேண்டும். கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வதிலும் ஏனைய இந்துக்களைப் போன்றே தீண்டத்தகாதவருக்கும் முழுஉரிமை கொடுக்க வேண்டும்-யங் இந்தியா,பிப்ரவரி 17, 1927.(பக் 110).

வெறுப்புணர்வை திட்டமிட்டு வளர்த்துக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், மகாத்மா காந்தியின் 125 -ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, யங் இந்தியா பத்திரிகையில், பல்வேறு காலகட்டங்களில் வெளியிடப்பட்ட மகாத்மா காந்தியின் எழுத்துகளைத் தொகுத்து, நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள, “எது இந்து தர்மம்? ” என்ற இந்த நூலை அனைவரும் வாசிக்க வேண்டும்.

முனைவர் பழனி. அரங்கசாமி, ஆங்கிலத்திலிருந்த இந்த நூலை எல்லோரும் எளிமையாக புரிந்து கொள்ளும் வண்ணம் தமிழாக்கம் செய்திருக்கிறார்.43 தலைப்புகளில் காந்தியின் இந்து சமயம் பற்றிய சிந்தனைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்து சமயத்தின் அடிப்படை அம்சங்கள், பிறமதங்களோடு உள்ள ஒப்புமைகள், வேதங்களின் உண்மைத் தத்துவங்கள், கீதை காட்டும் நல்வழிகள், சனாதன தர்மம், தீண்டாமை, மதமாற்றம், இந்து இஸ்லாமிய ஒற்றுமை என்று இன்று இந்தியா எதிர்கொள்ளும் , விவாதிக்கப்படும் சமய சார் அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த நூலின் வழி பாதை காட்டுகிறார் காந்தி.அமைதியான, ஒற்றுமையான இந்தியாவிற்கு வழிகாட்டும் நல்ல நூல்.

வெளியீடு-நேஷனல் புக் டிரஸ்ட், புது டெல்லி , 1996. விலை-ரூ.31.

# சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை-புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top