Close
டிசம்பர் 26, 2024 6:22 காலை

புத்தகம் அறிவோம்: வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய “திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908”

ஏறக்குறைய 800 ஆண்டுகாலம் ஆப்கானியரோடு யுத்தம், 200 ஆண்டுகாலம் ஆங்கிலேயரோடு போராட்டம், அடித்து கேட்டு பின்னர் அமைதியாய் கேட்டு, போராடி, அடி வாங்கி பெற்ற சுதந்திரம், சும்மா கிடைத்துவிடவில்லை. மாவீரர் பிரித்விராஜன் கோரியோடு தொடங்கிய யுத்தம், பின் வீரசிவாஜி, புலித்தேவன், மருது பாண்டியர், திலகர், வ.உ.சி என யாரெல்லாமோ தொடர்ந்து, பின் 1947ல் விடுதலையாய் விடிந்தது.
இந்திய தேசத்தில் எல்லா இடங்களிலும் உரிமைக்கான போராட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றில் பல வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை. பல மறைக்கப்பட்டன, பல தவறாக திரிக்கப்பட்டன. அது போல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலி எழுச்சி பலரால் நினைக்கப்படாமலே இன்று கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இளைய தலைமுறையினருக்கு இது குறித்து தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
சுதந்திரப் போராட்ட வீரர் விபின்சந்திரபால் விடுதலை செய்யப்பட்டதைக் கொண்டாடும் வகையில் நெல்லையில், தூத்துக்குடியிலும் வ.உ.சிதம்பரனார் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கூட்டத்துக்கு ஆங்கிலேய அரசு தடை விதித்தது. 1908ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி நெல்லை தாமிரபரணி ஆற்றின் தைப்பூச மண்டபத்தில் சுமார் 13 ஆயிரம் மக்கள் திரண்ட கூட்டத்தில் வ.உ.சிதம்பரனாரும், சுப்பிரமணிய சிவாவும் எழுச்சியுரை ஆற்றினர். தடையை மீறி பேசியதற்காக வ.உ.சி, சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகிய 3 பேரையும் மார்ச் 12ம் தேதி அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்தது.
இவர்கள் கைது செய்யப்பட்ட மறுநாள் மார்ச் 13ம் தேதி நெல்லையில் கலவரம் வெடித்தது. அதற்கு முன்போ பின்போ விடுதலைப் போராட்டக் காலத் தமிழகத்தில் இப்படியோர் எழுச்சி ஏற்பட்டதில்லை என சொல்லப்படுகிறது.
விடுதலை போராட்டங்கள் குறித்த தகவல்கள், இன்றைய தலைமுறைக்கும் எதிர்கால சந்ததிக்கும் கடத்தப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கோடு வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய “திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908” என்கிற நூல், காலச்சுவடு பதிப்பாக 2022ல் வெளிவந்தது.
இந்த ஆய்வு நூலுக்கு 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகடாமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுத் திறமும் அறிவார்ந்த சுவாரசியமும் மிளிர இந்நூலை எழுதியிருக்கிற திரு. சலபதிக்கு நம் வாழ்த்துகள்.
248 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் வ.உ.சி. அவர்கள் திருநெல்வேலி எழுச்சியில் (கலகம் அல்ல – It was rise, not riot) எடுத்த நிலைப்பாட்டை விளக்கி, எழுச்சியில் பங்களித்த எண்ணற்ற எளிய மக்களின் கதையினையும் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது இந்நூல்.

வாய்க்கும் போது வாசித்து விடுங்கள். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரைப் பற்றிய ஆய்வில் மூழ்கிய சலபதிக்கும், வ.உ.சிக்கும் நாம் செலுத்தும் மரியாதை அது.

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top