Close
செப்டம்பர் 20, 2024 4:14 காலை

பெண் மகத்தானவள் மட்டுமல்ல… வலிமையானவள் -பாரதி கிருஷ்ணகுமார்

ஈரோடு

ஈரோட்டில் நடைபெற்ற மனைவி நல வேட்புநாள் விழாவில் பங்கேற்ற தம்பதியர்

பெண் மகத்தானவள் மட்டுமல்ல, ஆண்களை  விட வலிமையானவள் என்றார்  ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார்.

வேதாத்திரி மகரிஷியால் தோற்றுவிக்கப்பட்ட உலக சேவா சமுதாய சேவா சங்கத்தில் பெண்களின் பெருமையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆக.30 -ஆம் தேதி மனைவி நல வேட்புநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஈரோடு கொங்கு கலையரங்கில் ஈரோடு மனவளக்கலை மன்றம் சார்பில் நடைபெற்ற மனைவி நல வேட்பு விழாவை யொட்டி மனைவியை கௌரவிக்கும் வகையில் கணவன் மார்கள் அவர்களது மனைவிக்கு மலர் கொடுத்தும், மனைவிமார்கள் அவர்களது கணவருக்கு கனி கொடுத்தும் பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

மனைவி நல வேட்பு அறிமுகவுரையை காந்தப் பரிமாற்ற தவம் முதுநிலை பேராசிரியர் உழவன் தங்கவேல் தம்பதியர் நடத்தி வைத்தனர்.

விழாவில் கொங்கு பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் வி.பாலுசாமி தம்பதியர், பிகேபி. கல்வி நிறுவனங்களின் தலைவர் தாளாளர் பிகேபி. அருண் தம்பதியர், யூரோஅக்வா பிளம்டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மோகன் தம்பதியர், ஆகவி ஸ்பின்னிங் மில்ஸ் நிறுவனத்தின் கமலநாதன் தம்பதியர் ஆகியோர் சிறப்பு தம்பதியராக பங்கேற்றனர்.விழாவில் 300 தம்பதியர் உள்பட ஏராளமானோர் திரளாக பங்கேற்றனர்.

விழாவையொட்டி பெண்ணின் பெருமை என்ற தலைப்பில் பாரதியார் விருது பெற்ற பாரதி கிருஷ்ணகுமார் பேசியதாவது:

ஈரோடு
விழாவில் பேசிய பாரதிகிருஷ்ணகுமார்

மனிதனைத் தவிர மற்ற அனைத்து விலங்குகளின் மூளையும் பிறக்கும்போதே வளர்ச்சி அடைந்து விடுகிறது. ஆனால் மனிதனுக்கு மட்டுமே பிறந்து 3 மாதங்களுக்கு பிறகே மூளை வளர்ச்சி என்பது தொடங்குகிறது.

பிறந்த உடனே தனக்கான உணவை தேடிக் கொள்ளாத உயிரினம் மனிதன் மட்டுமே. தனக்கான உணவை, தனக்கான உயிரை தேடி கண்டுபிடிக்க முடியாத ஜீவராசியாக உள்ள மனிதனுக்கு பெண் என்பவள் பாலூட்டி உயிரை வளர்த்திருக் காவிட்டால் இந்த உலகில் மனிதன் உயிர் வாழ்ந்திருக்க முடியுமா.

அப்படியிருக்கும் போது மனித குலத்தையே காப்பாற்றிய பெண்ணின் பெருமையை எப்படி பேசாமல் இருக்க முடியும். என் மொழி அம்மா என்கிறது.  பெற்றவள் மட்டுமே அம்மா என்பதாக இல்லை. ஆசிரியை, மகள், மனைவி என எல்லோரையும் அம்மா என்ற இணைச்சொல்லை கொண்டே அழைக்கிறோம்.

அம்மா என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்று பார்த்தால் “” என்பது உயிர் எழுத்து, ம் என்பது மெய் எழுத்து, மா என்பது உயிர்மெய் எழுத்து. ஆக அம்மா என்ற சொல்லில் தமிழின் அனைத்து இலக்கணங்களும் அடங்கி விட்டது.

என்ற உயிர் எழுத்தால் தன் உயிர் கொடுத்து 10 -ஆவது எழுத்தாக வரும் ம் என்ற மெய் எழுத்தால் 10 மாதங்கள் உயிரும், மெய்யுமாக சுமந்து இந்த உலகத்துக்கு என்னை தந்த உயிர்மெய்யானவர் யார் என்றால் அம்மாவாகத்தான் இருப்பார்.

இனிய சொற்கள் தான் நம் வாழ்க்கையின் போக்கை தீர்மானிக்கிறது. கனியிருப்ப காய் கவர்ந்தற்று என்று வள்ளுவன் சொன்னான். நமக்கு பேசத் தெரியும். நாம் பேச பயந்தால் போதும்.

ஈரோடு
விழாவில் பங்கேற்றவர்கள்

கோபமாக இருக்கும்போது பேசாதீர்கள். கோபமாக இருக்கும்போது எதையும் திருத்துவதற்கு முயற்சிக்காதீர்கள். கோபத்தில் எதையும் செதுக்க முயன்றால் அது பிழையாகத் தான் முடியும். முதலில் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி, நீங்கள் ஒரு சமநிலைக்கு வாருங்கள்.

இரண்டாவது, குற்றம் நிகழ்வதில் உங்கள் பங்கு என்ன என்று யோசியுங்கள். அதுகுறித்து குடும்பத்தினருடன் உரையா டுங்கள். மனம் ஒத்த வாழ்க்கை என்பது உடைகளை தேர்வு செய்வது போல் இல்லை.

ஒரு திருமணத்தின் வெற்றி சரியான ஆண் ஒருவரைத் தேர்வு செய்வதில் இல்லை. அவர் சரியான ஆண் -ஆக நடந்து கொள்வதில் தான் திருமணத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யும் ஆண்களுக்கான பயிற்சி தான் இந்த நிகழ்வு.

பெண் மகத்தானவள். ஆணை விட வலிமையானவள் பெண். வலிமையும், திறமையும் மிகுந்த பெண்ணுக்கு பிறந்தேன். அவளோடு தான் வாழ்ந்தேன் என்று கூறுவதில் தான் உண்மையான பெருமை அடங்கியுள்ளது. ஏனென்றால் பெண் வலிமை மிக்கவள் என்றார் பாரதிகிருஷ்ணகுமார்..

#செய்தி- ஈரோடு மு.ப.நாராயணசுவாமி#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top