புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற (லோக் அதாலத்) விசாரணையில் 839 வழக்குகளுக்கு ரூ. 9.03 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவின் படியும், புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவர் / முதன்மை மாவட்ட நீதிபதி கே.பூரண ஜெய ஆனந்த் வழிகாட்டுதலின்படியும், நிலுவையில் உள்ள வழக்குகளுக் கான தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை (09.09.2023) நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு (லோக்அதாலத்), புதுக்கோட்டை மாவட்ட குடும்பநல நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜெயந்தி, கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜி.எம். வசந்தி, அத்தியாவசிய பண்டங்கள் சிறப்பு மாவட்ட நீதிபதி ஏ.கே. பாபுலால்,
மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளர் சார்பு நீதிபதி, இ.ராஜேந்திர கண்ணன், முதன்மை சார்பு நீதிபதி எஸ்.சசிகுமார், நீதித்துறை நடுவர் எண்.1 நீதிபதி எம்.ஜெயந்தி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ம.பூர்ணிமா மற்றும் சார்பு நீதிபதி (ஓய்வு) ஏ. பிச்சை ஆகிய நீதிபதிகள் கொண்ட ஏழு அமர்வுகள் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் தலா ஒரு அமர்வு என வழக்குகள் என மொத்தம் 839 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டு சுமார் ரூ. 9,03,52,501 தொகைக்கான சமரச முடிவு ஏற்பட்டு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
மக்கள் நீதிமன்றத்தில், விபத்துகள் தொடர்பான வழக்குகள், காசோலை, குடும்ப நலன், ஜீவனாம்சம், தொழிலாளர் நலன், மின் பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொது பயன்பாடு உள்ளிட்ட, பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.