Close
நவம்பர் 22, 2024 12:41 காலை

உலகத்தமிழர் பேரமைப்பு பத்தாவது மாநில மாநாடு.. தஞ்சையில் இன்று தொடக்கம்

தமிழ்நாடு

உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன்

உலகத்தமிழர் பேரமைப்பு பத்தாவது மாநில மாநாடு  தஞ்சாவூரில் இன்று தொடங்கி (சனிக்கிழமை-செப்.23), ஞாயிறு-செப். 24)  இரண்டு நாள்கள்  நடைபெறுகிறது.

உலகத்தின்தொன்மை வாய்ந்த மொழிகளில் முதன்மை யானது தமிழ் மொழி ஆகும். தமிழரின் பண்பாடு கலாசாரம் அனைத்து மொழி,இன கலாசாரங்களுக்கும், பண்பாடுக ளுக்கும் எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்குகிறது .

கீழடி, அரிக்கமேடு உள்ளிட்ட பல்வேறு அகழ்வாராய்ச்சி முடிவுகளும், குறிப்புகளும் சிந்து சமவெளி ,எகிப்திய நாகரிகங்களுக்கு முற்பட்டதாக வரலாற்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். தொன்மை மிக்க, வரலாற்று சிறப்பு வாய்ந்த தமிழ் மொழி மீது இன்றைக்கு இந்தி, சமஸ்கிருத மொழிகளின் ஆதிக்கம் அதிகமாகி தமிழ் மொழியை அழிக்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது.

தமிழரின் பண்பாடு, கலாச்சாரத்தை, வாழ்வியலை சிதைக்கிறது. இவற்றையெல்லாம் மீட்டெடுக்கும் வகையில் தமிழரின் தொன்மை வரலாற்று சிறப்பு குறித்து உலக தமிழர் பேரமைப்பு சார்பில் பத்தாவது மாநாடு தஞ்சாவூரில் செப்டம்பர் 23,24 தேதிகளில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.

சனிக்கிழமை (23.9.2023) காலை 9 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. உலகத்தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அயனாவரம் சி. முருகேசன் பத்தாவது மாநாட்டு கொடியினை ஏற்றி வைக்கிறார்.அதை தொடர்ந்து காலை 10 மணிக்கு தமிழர் தொல் வரலாற்று கண்காட்சியை பேராசிரியர் த.செயராமன் திறந்து வைக்கிறார்.

கீழடி,அரிக்கமேடு, பூம்புகார் சுடர் அளித்தல் நிகழ்வும்,அதை தொடர்ந்து தமிழர் பேரமைப்பின் பொதுச் செயலாளர் ந.மு தமிழ்மணி வரவேற்புரையாற்றுகிறார். மாநாட்டை முது முனைவர் ஆ.சிவசுப்பிரமணியம் தொடக்கி வைக்கிறார். முனைவர் வி.அரசு தலைமை உரை ஆற்றுகிறார்.

உலகத் தமிழர் பேரமைப்பின் பத்தாவது மாநாட்டு மலரை துணைத்தலைவர் சா. ராமன் வெளியிடுகிறார். வில்லியனூர் வெங்கடேசன் எழுதிய புதுச்சேரி மாநில கல்வெட்டுகளின் சொல்லடைவு என்ற நூலை தமிழர் தேசிய முன்னணி தலைவர் செ.ப.முத்தமிழ்மணி வெளியிடுகிறார்.

தொல்லாய்வு தடயங்கள் நிறுவும் தமிழரின் தொன்மை என்ற தொல்லாய்வு அறிஞர்களின் குறிப்புகளை உலகத் தமிழர் பேரமைப்பின் செயலாளர் பி.வரதராசன் வெளியிடுகிறார்.

பிற்பகல் நிகழ்ச்சியாக தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் முனைவர்.இரா.காமராசு தலைமையில் தொல் தமிழர் வரலாற்றுத் தொன்மை குறித்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.

அதை தொடர்ந்து உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் உலகப் பெருந்தமிழர் காசி ஆனந்தன் தலைமையில் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர்  பழ.நெடுமாறன் உலகப் பெருந்தமிழர் விருது வழங்கல் நிகழ்வு நடைபெறுகிறது.

இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக 24.9.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மாநாடு தமிழ் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் கோ. பாலசுப்ரமணியன் தலைமையில் மாநாடு தொடங்குகிறது. வழக்கறிஞர் த.பானுமதி தொடக்க உரையாற்றுகிறார்.

அதை தொடர்ந்து எம் .ஜி.கே.நிஜாமுதீன் நெறியாள்கையில் கொடுமணலும்- தமிழக அயலவர் தொடர்புகளும் என்ற தலைப்பில் முனைவர் சு.இராசவேலு, தொல் தமிழர் ஓவிய மரபு என்ற தலைப்பில் முனைவர் க.த.காந்திராசன் கருத்தரங்கமும் நடைபெறுகிறது.

இரண்டாம் அமர்வாக பழம்பெரும் தமிழ் சமூகம் என்ற தலைப்பில் கணியன் பாலன், ஆதிச்சநல்லூர்- பொருநை நாகரிகம் என்ற தலைப்பில் முனைவர் தியாக சத்தியமூர்த்தி, சிந்துவெளி நாகரிகம் என்ற தலைப்பில் முனைவர் நா .மார்க்சிய காந்தி, தமிழர் நாகரிகம் என்ற தலைப்பில் முனைவர் அமர்நாத் இராமகிருட்டினா ஆகியோர் பங்கேற்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது .

அதை தொடர்ந்து உலக பெருந்தமிழர் விருது வழங்கல் அரங்கில், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர்  பழ.நெடுமாறன் விருதுகளை வழங்கி மாநாட்டினை நிறைவு செய்து உரையாற்றுகிறார்.

பேராசிரியர் இரா. முரளிதரன் மாநாட்டு தீர்மானங்கள் வழிமொழிதலுடன் இரண்டு நாள் மாநாடு நிறைவு பெறுகிறது. மாநாட்டில் தமிழ் ஆர்வலர்களும், தமிழினை போற்றுபவர் களும், தாய்மொழி தமிழை நேசிக்கும் அனைத்து தமிழர்களும், சனநாயக,முற்போக்கு சக்திகளும் பங்கேற்று மாநாட்டினை சிறப்பிக்க உலகத்தமிழர் பேரமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இரண்டு நாள் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், பொதுச் செயலாளர் ந.மு.தமிழ்மணி, துணைத் தலைவர் அயனாவரம் சி.முருகேசன், பேரமைப்பு நிர்வாகிகள் பொறியாளர் ஜோ.ஜான்கென்னடி, பேராசிரியர் வி.பாரி முள்ளிவாய்க்கால் முற்ற பொறுப்பாளர் ஜலேந்திரன் ஆகியோர் செய்து வருகின்றனர் என்று உலகத்தமிழர் பேரமைப்பு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top