புதுக்கோட்டை மாவட்டம், நமனசமுத்திரம் திருமயம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை தனியார் பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். காரில் இருந்த 2 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டையிலிருந்து சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி பகுதியைச் சேர்ந்த 4 பேர், சந்தோஷ் என்பவரின் வாடகைக் காரில் புதுக்கோட்டை அருகேயுள்ள பேரையூர் நாகநாதசுவாமி கோயிலுக்குச் சென்றனர். பின்னர் அங்கிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்களது கார் நமணசமுத்திரம் காவல் நிலையத்தை கடந்து செபஸ்தியார் புரம் பகுதியில் சென்றபோது மதுரையிலிருந்து புதுக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மோதியதில் கார் பேருந்தின் அடிப்பகுதியில் சிக்கி உருக்குலைந்தது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த , கீழப்பூங்குடியைச் சேர்ந்த ராஜேஸ்வரி(50), ஆதிமுகிலன்(25), ஓட்டுனர் சந்தோஷ்(25) ஆகியோர் உயிரிழந்தனர். உடனிருந்த அகிலன்(24), ஆதிசரண்(10) ஆகியோர் ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் கார் பேருந்துக்கு அடியில் சிக்கியிருந்ததால் ஜேசிபி இயந்திரம் மூலம் பேருந்தை சாய்த்து காரை வெளியில் எடுத்து உயிருக்கு போராடிய இரண்டு பேரை தீயணைப்புத் துறையினர் காவல் துறையினர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் உறுதுணையுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் புதுக்கோட்டை ராமேஸ்வரம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து நணனசமுத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்து நடந்த இடத்தை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே நேரில் பார்வையிட்டார்.
அப்பாவிகளின் உயிரைக் குடிக்கும் தனியார் பேருந்துகள்
தனியார் பேருந்துகளின் அதிவேகத்தால் அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. வசூலை அள்ள வேண்டும் என்ற ஒற்றை லாப நோக்கத்துடன் தனியார் பேருந்துகள் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
எதிரில் வரும் வாகனங்களைப் பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமல் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள் பெரும்பாலும் 25-30 வயதுக்கு உட்பட்டவர்களா கத்தான் உள்ளனர். அவர்களின் இளமைத் துடிப்பான சாகசப் பயணம் இறுதியில் அப்பாவிகள் பலரின் சாவுக்கு வழி வகுத்து விடுகிறது.
அதேபோல் தனியார் பேருந்துகள் அதிபயங்கர இரைச்சலும் சப்தமுமாய் திரைப்படப் பாடல்களை ஒலிக்க விட்டு பயணிகளுக்கு பெரும் தொந்தரவு தருவதுடன் ஓட்டுனருக்கும் கவனச் சிதறல்களை ஏற்படுத்துகிறது. ‘நேரம் எடுக்க வேண்டும் என்ற காரணத்தைச் சொல்லி பல பயணிகளை பேருந்தின் படிக்கட்டுகளிலிருந்து முறையாக இறங்கக் கூட விடுவதில்லை.
பயணிகளை தள்ளி விடாத குறையாக நடத்துனரிடமிருந்து விசில் சத்தம் தூள் பறக்கும். பேருந்து சாலையில்தான் செல்கிறது. பேருந்துக்குள் பயணிகள்தான் இருக்கின்றனர் என்பதை எல்லாம் மறந்துவிட்டு ஏதோ ஆகாய விமானத்தை ஓட்டுவதுபோல் தனியார் பேருந்துகளின் ஓட்டுனர்கள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
அதுவும் அடுத்த பேருந்துகளின் வியாபாரப் போட்டியை எதிர்கொண்டு வசூலை அள்ள வேண்டும் என்பதில்தான் ஓட்டுனரும், நடத்துனரும் குறியாக உள்ளனர். இவற்றை எல்லாம் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள்மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போதுதான் அப்பாவி பொதுமக்களும், பயணிகளும், சாலைகளில் வாகனங்களை இயக்குபவர்களும் உயிர் பிழைக்க முடியும். இல்லையேல் தனியார் பேருந்துகளின் வரன்முறை இல்லா அதிவேக இயக்கத்திற்கு உள்ளாகி உயிர்ப் பலியாவது தொடர்கதையாகத்தான் இருக்கும் என்று சமூக ஆர்வலரும் கல்வியாளருமான பழ.அசோக்குமார் தெரிவித்தார்.