தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க விரோதப் போக்கை கடைப்பிடித்துவரும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து புதுக்கோட்டையில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் சிப்காட் பகுதியில் ஜப்பான் நிறுவனத்தின் யுனிபிரஸ் தொழிற்சாலை உள்ளது. இங்கு சிஐடியு தொழிற்சங்கம் அமைக்கப்பட்டு ஆலை முன்பாக சங்கத்தின் கொடி மற்றும் பெயர்ப்பலகை திறக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொள்ள முடியாத நிர்வாகம் சிப்காட் அதிகாரிகள் மூலமாக புல்டோசரைக் கொண்டு கொடி மற்றும் பெயர்பலகையை அகற்றியது. இதனால் ஆத்திரமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டு மீண்டும் அதே இடத்தில் சங்கத்தின் கொடி மற்றும் பெயர்பலகையை நிறுவினர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரி கள் தொழிலாளர்களை பிளவுபடுத்தும் நோக்கத்தோடு, குறைவான ஊதியத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலா ளர்களை நியாயப்படு;த்தும் வகையிலும், சிஐடியு தொழிற் சங்கத்தை அவமதிக்கும் வகையிலும் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் இத்தகைய தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க விரோதப் போக்கைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலி ஜின்னா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநில செயலாளர்கள் ஏ.ஸ்ரீதர், எஸ்.தேவமணி, மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் சி.அன்புமணவாளன், சி.மாரிக்கண்ணு, கே.ரெத்தினவேல், சிதம்பரம், முத்துக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.